புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தாந்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 224 மாணவர்கள் படிக்கின்றனர். இங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் சில தன்னார்வல மாணவர்களின் முயற்சியால், கடந்த சில வருடங்களாகப் பள்ளிக்கூடத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள், பூஞ்செடிகள் வளர்க்கப்பட்டு பள்ளி பூஞ்சோலையாக மாறியுள்ளது.
தற்போது, பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவர்களால் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற முடியாமல் போகவே, மரக்கன்றுகள், பூஞ்செடிகள் கருகத்தொடங்கின. இதையறிந்த பள்ளி சத்துணவு அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், தினமும் பள்ளிக்கு வந்து தனி ஆளாக மரக்கன்றுகள் மற்றும் பூஞ்சோலைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சி வருகிறார். இவரின் முயற்சியால், கருகிப் போன மரக்கன்றுகள் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது. வாடிப்போன பூஞ்செடிகள் எல்லாம் பூத்துக் குலுங்குகின்றன.

ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்,
“இந்தப் பள்ளியில 25 வருஷத்துக்கும் மேலாக வேலை பார்த்துக்கிட்டு வர்றேன். இப்போ கொஞ்ச வருஷமாகத்தான் அதுவும் பள்ளி ஆசிரியருங்க, மாணவர்களின் கடுமையான முயற்சியால் பள்ளி பூஞ்சோலையாக மாறியிருக்கு. மாணவர்கள் ஒருநாள் தவறாம தண்ணீர் ஊற்றிடுவாங்க. இப்போ, வெளியேயும் யாரும் போகக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. தொடர் லீவு விட்டதால, மாணவர்களால தண்ணீர் ஊத்த முடியாத நிலை. ஒருவாரம் ஆகிப்போச்சு, பள்ளிக்கூடத்தைப் பார்த்துட்டு வருமோம்னு போய்ப் பார்த்தேன். மாணவர்கள் ஆசையா வச்சு வளர்த்த பூஞ்செடிகள் எல்லாம் தண்ணீர் இல்லாம, வாடிப் போயிருந்துச்சு.
அதைப் பார்த்ததும் மனசுக்கு ரொம்பவே கஷ்டமா போச்சு. உடனே, ஆசிரியர்கிட்ட சொல்லிவிட்டு நானே தினமும் வந்து தண்ணீர் பாய்ச்சிக்கிட்டு இருக்கேன். திரும்ப வந்து பார்க்கிறப்ப மாணவர்கள் மனசு கஷ்டப்படக்கூடாது. அதனால, மாணவர்கள் வரும் வரைக்கும் இன்னும் ரெண்டு வாரத்துக்கு நானே தினமும் பாதுகாப்பாக வந்து தண்ணீர் ஊத்தலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்” என்றார்.
இதுபற்றி பள்ளி ஆசிரியர் முத்துக்குமாரிடம் கேட்டபோது, “பசுமைப்படை மாணவர்கள் 26 பேர் தினசரி மாற்றி, மாற்றி தண்ணீர் ஊத்துவார்கள். கோடை விடுமுறையில்கூட மரக்கன்றுகள் பட்டுப்போகாமல் இருக்க சில மாணவர்களை ஒதுக்குவோம்.

அவங்களும் ரொம்பவே ஆர்வமாக முன்வந்து தினசரி தண்ணீர் ஊத்துவாங்க. இப்போ, அதுமாதிரியான நிலை இல்லை. என்ன செய்யறதுன்னே தெரியலை. யாருக்கிட்ட தண்ணீர் ஊத்தச் சொல்றதுன்னு தெரியலை. இவ்வளவு கஷ்டப்பட்டு பராமரிச்சுக்கிட்டு வந்த எல்லாம் கருகிப்போகப் போகுதுன்னு நெனச்சேன்.
அந்த நேரத்துலதான் சத்துணவு அமைப்பாளர் தானாக முன்வந்து நானே தினமும் மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊத்துறதா சொன்னாரு. எனக்கு ரொம்பவே சந்தோஷம். வழக்கமா பள்ளியில் அவரோட வேலை மட்டுமல்லாமல் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார். அதே மாதிரி இந்த விஷயத்தையும் செஞ்சிருக்காரு. எல்லாத்துக்கும் ஒரு மனசு வேணும்” என்றார் நெகிழ்ச்சியான குரலில்.