கொரோனா குறித்து சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அவற்றின் உண்மைத் தன்மை கீழே விளக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று உலகம் முழுவதும் மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் இது வரை 147 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் கொரோனா பரவாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
குறிப்பாக தொலைத்தொடர்பு சாதனங்களின் மூலமாகவும், சமூகவலைத்தளங்கள் மூலமாகவும் கொரோனா குறித்த விழிப்புணர்வு குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் கொரோனாவை மக்கள் எப்படி அணுக வேண்டும், எந்தெந்த வழிமுறைகளை அவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் போன்ற விவரங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் கொரோனா குறித்த தவறான தகவல்களும் பகிரப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட தவறான தகவல்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
முதல் வதந்தி :
கொரோனா பாதிப்பிலிருந்து தங்களைக் காத்து கொள்ள 15 நிமிடத்திற்கு ஒரு முறை தண்ணீர் அருந்த வேண்டும். இந்த தண்ணீரானது உங்களின் தொண்டை மற்றும் வயிற்றில் உள்ள வைரஸை நீக்கி விடும். அந்த வைரஸை, வயிற்றில் செரிமானத்திற்குப் பயன்படும் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் அழித்து விடும்.
விளக்கம்:
தண்ணீர் அருந்துவது நல்ல பழக்கம். ஆனால் குடிநீரானது எந்த ஒரு வைரஸ் பாதிப்பிற்கு எதிராகச் செயல்படும் என்பதற்கு எந்த தரவுகளும் இல்லை.
இரண்டாம் வதந்தி: பூண்டு சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க முடியும்
விளக்கம் : உலக சுகாதார நிறுவனம் இது குறித்துக் கூறுகையில் “ பூண்டில் எதிர்ப்பு நுண்ணுயிரிகள் அதிகம் உள்ளது. ஆனால் இந்த உணவு கொரோனாவிற்கு எதிராகச் செயல்படும் என்பதற்கு எந்த தரவுகளும் இல்லை. அத்துடன் குறிப்பிட்டு இந்த உணவு கொரோனாவை குணப்படுத்தும் என்று எந்த உணவு வகைகளும் இதுவரை பரிந்துரைக்கப்படவில்லை.
தன்னை சந்திக்க வரவேண்டாம்: அறிவிப்பு பலகை வைத்த தமிழக அமைச்சர்!!
மூன்றாம் வதந்தி: வெப்பநிலை அதிகம் உள்ள நாடுகளில் கொரோனா உயிர்ப்புடன் இருக்காது.
இந்த தகவலும் இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை. காரணம் கொரோனா குறித்து முழுமையாக ஆய்வு செய்ய போதிய வசதிகள் இல்லை. சீனாவில் பரவிய கொரோனா குறித்து ஹார்வார்டு மருத்துவ பள்ளியில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் சீனாவில் அதிகம் வெப்பம் இருந்தபோதும், அதிக குளிர் இருந்த போதும் கொரோனா பரவியிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக அதிக வெப்பநிலை கொண்ட நாடுகளான சிங்கப்பூரிலும், ஆஸ்திரேலியாவிலும் கொரோனா வைரஸ் பரவியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நான்காம் வதந்தி: சில்வர் பாத்திரங்களில் உணவுப் பொருட்களை உண்பதன் மூலம், உணவுப் பொருட்களில் உள்ள கொரோனா வைரஸின் விகாரங்களை சில்வர் 12 மணி நேரத்தில் அழித்துவிடும்.
விளக்கம் : சில்வர் பாத்திரங்களில் உணவு உண்பதால் கொரோனா வைரஸ் தடுக்கப்படும் என்பதற்கு இது வரை எந்த தரவுகளும் கொடுக்கப்படவில்லை. இதில் அயர்ன், ஜிங்க், சில்வர் போன்றவை மனித உடலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இந்திய ராணுவ வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ஐந்தாம் வதந்தி : முகக்கவசங்கள் கொரோனா பாதிப்பை தடுக்காது
விளக்கம்: உறுதியாக முகக்கவசம் மட்டும் கொரோனா பாதிப்பை தடுக்காது. ஏனெனில் கொரோனா வைரஸ் கண்கள் உள்ளிட்ட பாகங்கள் மூலமாகவும் பரவுகிறது. ஆனால் அதிகபட்சமாக இருமல் மற்றும் தும்மல் மூலமாகப் பரவுகிறது. பெரும்பாலும் முகக்கவசங்கள் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் கொரோனா பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. N95என்று சொல்லக்கூடிய அதிக தடிமன் கொண்ட முகக்கவசங்கள் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM