டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலத்தவர் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பட்டியலை மத்திய உளவுத்துறை பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பியது.

அதில், நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், களக்காடு, பாளையங்கோட்டை, நெல்லை நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுமிருந்து பலர் இந்த மாநாட்டில் பங்கேற்ற விவரம் தெரியவந்தது. அவர்கள் குறித்த விவரம் தெரியவந்ததும் அரசு மருத்துவமனையில் பலர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர்களின் ரத்தமாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில், 22 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
Also Read: சுவிட்ச் ஆஃப்.. 515 பேர் மட்டுமே அடையாளம் கண்டுபிடிப்பு!-தமிழகத்தில் இன்றுமட்டும் 57 பேருக்கு கொரோனா
கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதற்காக மேலப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு பலர் தனிமையில் தங்கவைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில், மேலப்பாளையத்தில் மட்டும் 22 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அனைவரையும் தீவிரக் கண்காணிப்பில் வைக்குமாறு நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் அறிவுறுத்தியிருக்கிறார்.

மேலப்பாளையம் செல்லும் சாலைகள் அனைத்தையும் அடைக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களிலும் யாரும் எங்கும் செல்லக் கூடாது என உத்தரவிட்டார். ஒவ்வொரு தெருவின் முனையிலும் காய்கறிகள், அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. வீடுகளை விட்டு மக்கள் வெளியே வரக் காவல்துறை அனுமதிக்கக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா எச்சரித்துள்ளார்.