தமிழ் சினிமாவில் பல நூறு நடிகர்கள் இருந்தாலும் தல, தளபதியாகக் கொண்டாடப்படுபவர்கள் அஜித், விஜய் இருவரும்தான். ரஜினி, கமல்ஹாசனின் காலம் என்பது போய் விஜய், அஜித் இருவரும்தான் இப்போது தமிழ்நாட்டில் மிக அதிக ரசிகர்களைக்கொண்ட முன்னணி நடிகர்கள். ஒருவர் 100 கோடி வசூல்களை அசால்ட்டாகக் குவித்தால், ஒருவர் ஓப்பனிங் வசூலில் இன்னமும் மாஸ் காட்டுகிறார். சோஷியல் மீடியாக்களில் இவர்களின் படங்கள் பற்றிய செய்திகள் வந்தாலோ, இவர்களின் ஒற்றைப் புகைப்படங்கள் ரிலீஸானாலோ அதை உலக டிரெண்டிங் ஆக்கி வைரலாக்குகிறார்கள் இவர்களது ரசிகர்கள். அப்படிப் பெரும்படையைக்கொண்ட இந்த இரு உச்ச நடிகர்களும் கொரோனா விஷயத்தில் மட்டும் சத்தம் இல்லாமல் அமைதி காப்பது ஏன் எனப் புரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறான் தமிழ் சினிமா ரசிகன்.

அஜித், விஜய்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் கொரோனா நோய் தொற்று தடுப்புப் பணிகளுக்காகத் தனது சொந்த நிதியிலிருந்து 25 கோடி ரூபாயை உதவித்தொகையாக அறிவித்திருக்கிறார். தெலுங்கு நடிகர்கள் பவன் கல்யாண், பிரபாஸ் தொடங்கி இளம் நடிகர்கள் பலரும் கோடிகளில் உதவித்தொகையை அறிவித்திருக்கிறார்கள். ஆரம்ப காலங்ளில் விஜய் அதிகம் ஃபாலோ செய்த தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தன் வருமானத்திலிருந்து 1 கோடி ரூபாயை மாநில அரசு நிதிக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால், தமிழ் சினிமா உலகில் குறிப்பாக விஜய், அஜித் தரப்பிலிருந்து எந்த அறிவிப்புகளும் இதுவரை இல்லை. உதவித்தொகைகூட வேண்டாம். பல லட்சம் ரசிகர்களைக்கொண்ட இந்த இரு நடிகர்களும் ஒரு விழிப்புணர்வு வீடியோகூட இதுவரை வெளியிடவில்லை.

சின்னச் சின்ன நடிகர்கள் எல்லாம் “வெளியே போகாதீர்கள்… 21 நாள்களும் வீட்டிலேயே இருங்கள். அப்போதுதான் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்” எனக் கோரிக்கைவிடுக்கிறார்கள். நகைச்சுவை நடிகர் வடிவேலு அழுதபடியே மக்களிடம் கெஞ்சுகிறார். களநிலவரம் இந்த நடிகர்களுக்கும் தெரியும். ஆனாலும், ஏனோ அமைதி காக்கிறார்கள்!

கொரோனா

விஜய்க்கு ஒரு பிரச்னை என்றதும் நெய்வேலியில் திரண்டுவந்தது ரசிகர் கூட்டம். வாகனத்தின் டாப்பில் நின்று செல்ஃபி எடுத்து தனக்காகக் கூடிய கூட்டத்தைப் பார்த்து தானே பெருமைப்பட்டுக்கொண்டார் விஜய். ஆனால், அந்த ரசிகர் கூட்டத்துக்கு ஒரு அன்பான வேண்டுகோள் விடுக்க மறுக்கிறார் விஜய். எப்போதுமே ரசிகர்களுக்கு அறிவுரைகள் சொல்லும் அஜித் ஏன் இன்னும் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் இருக்கிறார்?

டியர் விஜய், அஜித்… கொரோனா வைரஸ் பிரச்னையால் நிலவும் அசாதாரண சூழல் எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியவில்லை. மிகப்பெரிய பொருளாதார பின்னடைவைச் சந்திக்க இருக்கிறது உலகம். இதில் உங்களுக்காகக் கொடிபிடித்த, கட் அவுட்கள் கட்டிய, சோஷியல் மீடியாக்களில் சில்லறைகளை சிதறவிட்ட பல லட்சம் ரசிகர்களும் பாதிக்கப்படப்போகிறார்கள். தமிழ்நாட்டில் ஓடும் பல லட்சம் ஆட்டோக்களின் பின்னால் உங்கள் இருவரின் புகைப்படங்கள்தான் அதிகம் இருக்கின்றன. இந்த ஆட்டோக்கள் எல்லாம் வீதிகளில் ஓடியே சில வாரங்கள் ஆகிவிட்டன. வருமானத்துக்கு வழியில்லாமல் திகைத்துப்போய் நின்றுகொண்டிருக்கிறார்கள். அடுத்து வரும் வாரங்கள் எப்படியிருக்குமோ என்கிற பெரும் அச்சம் அவர்களை சூழ்ந்திருக்கிறது. நீங்கள் நிச்சயம் எல்லோருடைய பசியையும் ஆற்றிவிட முடியாதுதான். ஆனால், நீங்கள் உங்கள் சார்பில் உதவித்தொகைகளை அளித்தால் அது பல ஆயிரம் பேர் முன்வந்து உதவத் தூண்டுகோலாக இருக்கும்.

சிவாஜி கணேசன் தொடங்கி விஜயகாந்த் வரை நடிகர் சங்கத் தலைவர்களாக இருந்தவர்கள் நாட்டின் நலனுக்காக நடிகர்களை எல்லாம் ஒன்றுதிரட்டி பல முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறார்கள். நிதி திரட்டியிருக்கிறார்கள். ஆனால், இப்போதைய நடிகர் சங்கமோ தலைமை இல்லாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. தமிழ்த் திரைப்படத் தொழிலாளர் நலனுக்கு உதவித்தொகை அளியுங்கள் என்று ஃபெப்ஸி கேட்டுக்கொண்டபோது பல நடிகர், நடிகைகள் உதவியிருக்கிறார்கள். ஆனால், அங்கேயும் இந்த உச்ச நட்சத்திரங்கள் சத்தம் இல்லாமல் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டார் விஜய். தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இப்படி எல்லாவற்றிலும் ஓடிப்போய் நின்ற விஜய், இப்போது ஏன் ஒரு செல்ஃபி வீடியோகூட வெளியிடாமல் இருக்கிறார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. `தல’ அஜித், இப்போதாவது ஒரு வீடியோ வெளியிடலாமே, ரசிகர்களை விழிப்புணர்வுடன் இருக்கச் சொல்லலாமே? ஏன் இந்த அமைதி?

கமல்ஹாசன் தன் ஆழ்வார்பேட்டை வீட்டை அரசு விருப்பப்பட்டால் சிகிச்சை வார்டாகப் பயன்படுத்திக்கொள்ளட்டும் என்கிறார். “மனிதனை மனிதன்தான் காப்பாற்றுவான்… களத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் நன்றி” என்று நம்பிக்கையை விதைக்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் தல, தளபதியோ இன்னும் நாள்கள் போகட்டும் என சைலன்ட் மோடில் இருக்கிறார்கள்.

விஜய் – விஜய் சேதுபதி

கடந்த சில நாள்களுக்கு முன்பு `மாஸ்டர்’ படக்குழுவினர் வீடியோ கான்ஃபரன்ஸில் பேசுவதைப் போன்ற படத்தை அப்படத்தின் நாயகி மாளவிகா மோகனன் வெளியிட்டிருந்தார். அதில் விஜய்யும் இருந்தார். நான்கு பேருடன் பேசுவதை பல கோடிப் பேருடன் பேசலாமே விஜய்… தனிமனித ஒழுக்கத்தை அதிகம் வலியுறுத்தும், என்னைவிட உங்கள் பெற்றோர்தான் முக்கியம் என எப்போதும் குறிப்பிடும் அஜித் தன் ரசிகர்களுக்கு ஒரு வீடியோ மூலம் நல்ல விஷயங்கள் சொல்லலாமே…

நீங்கள் விரைவில் நல்லது சொல்வீர்கள் என்கிற நம்பிக்கையுடன்… உங்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும்,

ரசிகன்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.