டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் விவரத்தை சேகரித்த தேனி மாவட்ட சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் காவல்துறையினர் உதவியுடன், நேற்று காலை முதலே, மாநாட்டில் கலந்துகொண்டவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த 23 பேர் கண்டுபிடிக்கப்பட்டு, தேனி கானாவிலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டது. அதன்படி, அவர்களின், ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. நாளை முடிவுகள் தெரியவரும் எனவும் கூறப்பட்டது.

இன்று காலை, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார் இருவரும், மாவட்ட கலெக்டர், எஸ்.பி மற்றும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து, இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் விவரத்தை வெளியிட்டார். அதில், தேனி மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இந்த 20 பேரில், போடி – 14 பேர், பெரியகுளம் -3 பேர், கம்பம், பாளையம், சின்னமனூர் தலா 1 நபர் என தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 23 பேரில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது தேனி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில், கொரோனா தொற்று உறுதியான 20 பேர், கடந்த நாள்களில் எங்கெல்லாம் சென்றிருக்கிறார்கள், யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என தகவல் சேகரிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டிவருகிறது. இது தேனி மக்களை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.