“ நீங்கெல்லாம் ஊருக்குப் போய்விட்டால் கட்டுமான வேலையை யார் பார்ப்பது. எங்களுக்கு அவ்வளவு எளிதில் ஆட்கள் கிடைக்கமாட்டார்கள்” என்றுகூறி 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களை தஞ்சையில் அடைத்து வைத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் மன்னர் சரபோஜி கல்லூரி அருகே உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உறவினர்கள் சிலர் மருத்துவமனை ஒன்றைக் கட்டி வருகிறார்கள். அந்த மருத்துவமனைக்குக் கட்டுமான வேலைகள் செய்வதற்கு வட மாநிலத்திலிருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு வந்து தங்கி வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், கொரோனா பிரச்னை அதிகமானதால் சிலர் ஆரம்ப கட்டத்திலேயே தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். மீதி இருக்கும் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டடத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதைப் பார்வையிட அரசு அதிகாரிகள் சென்றபோது, அவர்களுக்குச் சரியான உணவும் இருப்பிடமும் கொடுக்கப்படவில்லை என்ற தகவல் கிடைத்ததாகச் சொல்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசு அதிகாரி ஒருவர், “கொரோனா விவகாரத்தால் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களின் வீடுகளை ஆய்வு செய்யுமாறு முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அதன் பெயரில் நாங்கள் ஆய்வு செய்யச் சென்றோம். அப்படித்தான் அந்த மருத்துவமனையின் கட்டடப் பணிகளில் ஈடுபட்ட வெளிமாநிலத் தொழிலாளர்களிடம் பேசினோம். அவர்கள், தங்களுடைய ஊர்களுக்குச் செல்ல வேண்டுமென்று கூறி வருகின்றனர். ஆனால், அங்கு இருக்கும் பொறியாளர் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் அவர்களுடைய பிரச்னைகளைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
`இன்னும் சில நாள்களில் கொரோனா பிரச்னை சரியாகிவிடும். நீங்கள் ஊருக்குச் சென்றால் திரும்பி வர மாட்டீர்கள். உங்களை வைத்து நாங்கள் இந்த வேலையைச் சீக்கிரமாக முடித்தாக வேண்டும். அதனால், நீங்கள் இங்கேதான் இருக்க வேண்டும்’ என்று கூறிவிட்டு அறைகளைப் பூட்டி வைத்திருக்கிறார்கள். இதைப் பற்றி உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம்” என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய சிவில் இன்ஜினீயரிங் அசோசியேஷனின் தலைவர் கணபதி,“உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அவரது உறவினர்கள் இந்த மருத்துவமனையைக் கட்டி வருகின்றனர். பிரமாண்டமான இந்த மருத்துவமனையைச் சேலத்தைச் சேர்ந்த பி.எஸ்.கே கட்டுமான நிறுவனம் கட்டிக்கொண்டிருக்கிறது.

தஞ்சையில் எந்த மருத்துவமனையிலும் இல்லாத அளவுக்கு ஹைடெக்டான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தக் கட்டடத்தைக் கட்டுவதற்காக வடமாநிலத்திலிருந்து பலரை அழைத்து வந்து வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கொரானா விவகாரம் அடிபட்டுக்கொண்டிருந்த நேரத்தில் சிலர் ஊருக்குப் போய்விட்டார்கள். பாதிப் பேரை அவர்கள் அனுப்பவில்லையாம். காரணம், இவர்களும் ஊருக்குப் போய்விட்டால் இந்த வேலைகளை யார் செய்து முடிப்பது. அவ்வளவு எளிதில் ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதால் அவர்களை ஊருக்கு அனுப்பாமல் இங்கே அடைத்து வைத்திருக்கிறார்களாம்.

அதில் ஒருசிலர் ஊருக்குப் போயே ஆக வேண்டும் என்று இருப்பவர்களுக்குச் சரிவர உணவுகள் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஆளும் கட்சிப் பிரபலங்கள் என்றால் அவர்களுக்குச் சட்டம் பொருந்தாதா? அந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என்றார் கொதிப்புடன்.
இதுகுறித்து, மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளின் சூப்பர்வைசர் நஜீரிடம் பேசினோம்.“ இது தவறான தகவல். தொழிலாளர்களுக்கு சாப்பாடு எல்லாம் சரியான நேரத்தில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 14-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ரயில் மற்றும் பேருந்துப் போக்குவரத்து எதுவும் இல்லாத நேரத்தில் எப்படி அவர்களை ஊருக்கு அனுப்ப முடியும்” என்றார்.
“ஊருக்குப் போக நினைப்பவர்களை அரசு அதிகாரிகளின் உதவியோடு அனுப்பலாமே” என்று கேட்டதற்கு. “ கொஞ்சம் நேரம் கழித்துப் பேசுங்கள். வேலையாக இருக்கேன்” என்றதோடு முடித்துக்கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜை தொடர்புகொண்டோம். அவர் சார்பாக நம்மிடம் பேசிய அவரின் உதவியாளர், “ நீங்கள் சொல்லும் தகவலை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன்” என்றதோடு முடித்துக் கொண்டார்.
வெளிமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக அமைச்சர் தரப்பில் விளக்கம் அளித்தால் உரிய பரிசீலனைக்குப் பிறகு அதையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.