நாடுமுழுவதும் கொரோனா தாக்குதல் முன்னெச்சரிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசியத் தேவை ஏதுமில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருபவர்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர். இருப்பினும், தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே வந்து சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர் போலீஸார்.

விருந்தில் செல்ஃபி

ஆனால், கிராமப் பகுதிகளில் சிறுவர்கள் சீட்டுவிளையாடுதல், கோலிக்குண்டு உருட்டுதல், கண்மாய்களில் குளித்தல்… என ஒருபக்கம் பொழுதைப் போக்கி வருகின்றனர். நகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியில் ஊரடங்கு உத்தரவை மீறி கண்மாயில் மீன் பிடித்து, சமைத்து அங்கேயே இலைபோடு மீன்சாப்பாடு சாப்பிட்ட 15 சிறுவர்களை மடக்கிப் பிடித்தனர் போலீஸார்.

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகில் உள்ளது சால்னாயக்கன்பட்டி கிராமம். இங்குள்ள கண்மாயில் விடுமுறை நாள்களில் சிறுவர்கள் குளிப்பது வழக்கம். தற்போது ஊரடங்கு நிலையிலும், இதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தினமும் குளிப்பது மட்டுமல்லாமல், தூண்டில் போட்டு மீன் பிடித்து பொரித்தும், சமைத்தும் சாப்பிடுவது தொடர்ந்து நடந்து வந்துள்ளது. சிறுவர்கள் சிலர் குளிப்பது, மீன் சமைப்பது, இலைபோட்டு சாப்பிடுவது போன்ற படங்களைத் தனித்தனியாக அவரவர் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு கிடைக்கும் லைக்குகள், ஷேர்களைப் பார்த்து மகிழ்ந்தனர்.

உற்சாகக் குளியல்

விஷயம் போலீஸாருக்குத் தெரியவரவே, அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவரைப் பிடித்து விசாரித்திருக்கிறார்கள். அவர் மூலம் படத்தில் உள்ளவர்களை அடையாளம் கண்டுபிடித்ததோடு, அவர்களையும் அதே கண்மாய்ப் பகுதியில் சுற்றி வளைத்தனர். சிக்கியவர்களுக்கு கொரோனா தாக்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆளுக்கு 100 தோப்புக்கரணம் போடச் செய்திருக்கிறார்கள் போலீஸார்.

அப்போது போலீஸாரை குழப்புவதற்காக சிலர் வேகமாகவும், சிலர் மெதுவாகவும் தோப்புக்கரணம் போட்டிருக்கிறார்கள். இதில், டென்ஷனான போலீஸார், “எங்களையே ஏமாற்றுகிறீர்களா..? மீண்டும் முதலில் இருந்து தோப்புக்கரணம் போடுங்கள்’’ என்று கூறி எல்லோரையும் 100 தோப்புக்கரணம் போடச் சொல்லி கண்டித்திருக்கிறார்கள். போலீஸாரிடம் சிக்கியவர்கள் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருபவர்கள் என்பதால், அவர்களின் எதிர்காலம் கருதி கடும் எச்சரிக்கையோடு போலீஸார் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

தோப்புக்கரண தண்டனை

இந்த விருந்தில் கலந்துகொண்ட அதே ஊரைச் சேர்ந்த 4 பேர் மட்டும் ஊரடங்கை மீறியதாக வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் போலீஸார். `மீன் விருந்து சாப்பிட்டதை ஃபேஸ்புக்கில் போட்டது தாப்பாப்போச்சே!’ என அவர்கள் போலீஸார் கேட்கும்படி புலம்பியபடியே சென்றிருக்கிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.