சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி நாட்டில் கொரோனா கோரத் தாண்டவம் நடத்தி வருகிறது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 195 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கையானது 206 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் வியஜபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சேலத்தில் கோரோனா மாதிரிகளை பரிசோதனை செய்யவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் ஏற்கெனவே சென்னை, திருவாரூர், தேனி, திருநெல்வேலியை தொடர்ந்து இப்போது சேலத்திலும் இந்தப் புதிய மையம் அமைய உள்ளது என்றும் இதுவரை தமிழகத்தில் 4 மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில் 5 ஆவதாக இம்மையம் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் செயல்பட உள்ளது என்றும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் விளக்கம் அளித்துள்ளார். ஆகவே பொதுமக்கள் ஏதேனும் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் இங்கு வந்து பரிசோதனை எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM