தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்று வந்தவருக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே திருவண்ணமலை பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் பணியாற்றிய ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், டெல்லியிலிருந்து விழுப்புரம் திரும்பிய மூவருக்கும் மதுரை திரும்பிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தற்போது தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 57 பேரில் 50 பேர் டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்ற 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம் திரும்பிய 515 பேரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தியுள்ளோம். மீதமுள்ள நபர்களின் தொலைபேசிகள் அணைத்து வைத்துள்ளனர். அனைவரும் தயவுசெய்து சுகாதாரத்துறையை தொடர்பு கொள்ளுங்கள்.. தானாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி மேற்கு நிஜாமுதீனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாப்லிகி ஜமாத்தில் (Tablighi Jamaat) கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மதக் கூட்டம் ஒன்று நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்தும் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். சுமார் 1,700 முதல் 1,800 இந்தியர்களும், தாய்லாந்து, வங்கதேசம், இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 200 முதல் 250 வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட 9 இந்தியர்கள் உள்ளிட்ட 10 பேர் கொரோனா காரணமாக மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.