திருச்சி உறையூர் அடுத்த கோணக்கரைப் பகுதியில் அரசு மதுபானக் கடையான டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் மேற்பார்வையாளர் சிவாஜி என்பவர் இவருடன் ஊழியர்கள் சிலரும் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகத் தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகள் மூட அரசு உத்தரவிட்டதால் கடை அடைக்கப்பட்டது.

அவ்வப்போது சிவாஜி மற்றும் ஊழியர்கள் கடையின் இருப்பை சரி பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியிருக்க, நேற்று மாலை டாஸ்மாக் கடை திறந்துகிடப்பதாகக் கடையின் மேற்பார்வையாளருக்குத் தகவல் கிடைத்தது. பதறியடித்து ஓடிவந்த மேற்பார்வையாளர் சிவாஜிக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. கடையின் பூட்டு உடைந்து கிடந்தது.
மேலும், கடையில் இருந்த மதுபானப் பாட்டில்கள் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த உறையூர் காவல்நிலைய போலீஸார் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், மதுபானக் கடையில் இருந்த, சுமார் 450 குவாட்டர் பாட்டில், 30 ஆஃப், 13 பீர் பாட்டில் உள்ளிட்ட 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் மது கிடைக்காமல் 5 பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அவசர ஆலோசனை நடத்தி மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், மதுபானம் வழங்க உத்தரவிட்டார்.
Also Read: கொரோனா வைரஸ் தொற்று.. உதவ வருகிறது ரோபோ! -திருச்சியில் முன்னோட்டம் #Corona