கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மேலும், அத்தியாவசியத் தேவைகள் மற்றும் அவசரத் தேவைகளுக்காக வெளியில் செல்வோர் உரிய வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

பிசிக்கல் டிஸ்டன்ஸிங்

இந்தச் சூழலில் நடைபெறும் திருமணம், இறுதிச் சடங்கு போன்றவற்றில் மிகக் குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் எனவும் விரைவாக நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதனால், பல்வேறு இடங்களில் திருமணங்கள் மிகவும் எளிமையாகக் கூட்டம் அதிகம் இல்லாமல் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், மதுரை பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் ஒருவரின் திருமணம், திருப்பரங்குன்றம் கோயில் வாயிலில் எளிமையாக நடைபெற்றிருக்கிறது. திருமணத்துக்கு 12 லட்ச ரூபாய் பட்ஜெட் போடப்பட்டு, அட்வான்ஸும் கொடுக்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கால் எளிமையாக நடந்து முடிந்திருக்கிறது அந்தத் திருமணம்.

கோயில் கேட்டில் திருமணம்

இது குறித்து மணமகன் சிவக்குமார், `நான் மதுரை பழங்காநத்தம் பகுதியில் வசித்துவருகிறேன். பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராக இருக்கிறேன். என்னுடைய திருமணம் பிப்ரவரி முதல் வாரத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருமண மண்டபம், உணவு, போட்டோ வீடியோ, ஆடல் பாடல், பாட்டுக் கச்சேரி உள்ளிட்டவற்றிற்கு 12 லட்சம் பட்ஜெட் போட்டு 1,200 பத்திரிகை அடித்து 800 பத்திரிகை வரை உறவினர்களுக்குக் கொடுத்துவிட்டோம்.

ஆனால், கொரோனா பாதிப்பால் என்னுடைய திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் எங்களைப் போல் சுமார் 25 ஜோடிகளுக்கு அவ்வாறுதான் எளிமையாக திருமணம் நடைபெற்றது. என்னுடைய திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு மாஸ்க் மற்றும் கைகளுக்கு மருந்துகளும் கொடுத்திருந்தோம்.

கோயிலில்

திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே வீட்டிற்குச் சென்று விட்டோம். கோயிலில் திருமணம் நடைபெற 3,000 பணம் கட்டியிருந்தோம். ஆனால், கோயில் வாசல் கேட்டில் நின்றுதான் தாலி கட்ட முடிந்தது. அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என மிகவும் எளிமையாக திருமணம் முடித்துக்கொண்டோம். திருமணத்துக்குக் கிராமிய கலைஞர்கள் உள்ளிட்ட சில தொழிலாளிகளுக்குக் கொடுத்த முன்பணத்தைத் திருப்பி வாங்க வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம். மண்டபம் மற்றும் கேட்டரிங் கான்ட்ராக்டர்களிடம் மட்டும்தான் பணத்தைப் பெறுவேன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.