வட மாநிலங்களிலிருந்து வந்து நாமக்கல்லில் சிக்கி தவிக்கும் லாரி டிரைவர்கள், தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவமல் தடுக்க கடந்த 24-ம் தேதி மாலை முதல் தமிழகத்தில் 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனையொட்டி பொதுமக்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் வடமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு லாரிகள் மூலம் கார்களை ஏற்றி வந்த மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஓட்டுநர்கள் நாமக்கல் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கியிருப்பதாகவும், தங்களிடம் இருந்த சப்பாத்தி மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டதாகவும், இதனால் பால் மற்றும் ரொட்டி, பன் உள்ளிட்டவற்றை மட்டுமே வாங்கி உண்டு வருவதாகவும் வேதனைத் தெரிவித்துள்ளனர். ஆகவே தங்களுக்கு அரசின் தக்க உதவி கிடைத்தால் மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும் என வேண்டுகோள் வைக்கின்றனர்.

இது குறித்து ஓட்டுநர் ஹரி ஓம் ரஜபுத் கூறுகையில், “மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நாங்கள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து கார்களை கார்கோ லாரி மூலம் ஏற்றிக் கொண்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நோக்கிச் சென்றோம். அப்போது நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் நாமக்கல் அருகே பொம்மைகுட்டை மேட்டிலேயே தங்க நேரிட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அங்கேயே தங்கி உள்ளோம். எங்களிடம் இருந்த அரிசி, சப்பாத்தி மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டன. இதனால் மிகுந்த சிரமப்படுகிறோம். தங்களுக்கு அரசு உதவினால் மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்” எனத் தெரித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM