கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில், ஏற்கெனவே திட்டமிட்டிருந்த திருமணத்தை இருவீட்டாரைச் சேர்ந்த 20 பேரை மட்டுமே அழைத்து திருக்குறள் வாசித்து எளிமையாக நடத்தியிருக்கிறார் கரூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

தமிழ் முறைப்படி திருமணம்

கரூர் மாவட்டம், புஞ்சை புகழூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். பிபிஏ பட்டதாரியான இவர், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தில் இயங்கி வருகிறார். இவருக்கும், கரூர், வடக்கு காந்திகிராமத்தைச் சேர்ந்த பி.இ பட்டதாரியான அருளரசிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

Also Read: `சம்ஸ்கிருதத்துக்கு `நோ’; தேவாரம், திருவாசகப் பாடலே மந்திரம்’- தமிழ் முறைப்படி திருமணம்செய்த இளைஞர்!

கொரோனா பிரச்னை ஆரம்பிப்பதற்கு முன்பே இந்தத் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், உறவுகளைக் கூட்டி பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருந்தார்கள். ஆனால், அதற்குள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க, திருமணத்தை எளிமையாக, தக்க பாதுகாப்போடு நடத்த முடிவு செய்தனர்.

தமிழ் முறைப்படி திருமணம்

‘கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, என் திருமணத்துக்கு யாரும் வர வேண்டாம்’ என்று போட்டோ கார்டு தயார் செய்து, சமூக வலைதளங்கள் மூலமாக எல்லோருக்கும் அனுப்பி வைத்தார், பிரபாகரன். ஏற்கெனவே திட்டமிட்ட நாளன்று, அரசு வழிகாட்டுதல்படி இரு குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் மட்டுமே பங்கேற்க, புகழியூர் கண்டியம்மன் கோயிலில், திருவள்ளுவர் படம் முன்பாக, திருக்குறள் நெறிப்படி திருமணம் நடைபெற்றது. சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும், வீடியோ கால் செய்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

பங்கேற்ற 20 பேரும் கோயிலுக்குள் நுழையும் முன்பு, சோப்பு நீரால் கைகால்களைக் கழுவிவிட்டு உள்ளே சென்றனர். அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மணமக்கள் திருக்குறள் கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

உறவினர்களை வரவேண்டாம் என்று சொல்லும் பத்திரிகை

“திருமணத்தை `உலக திருக்குறள் பேரவை’யின் துணை செயலாளர் தென்னிலை கோவிந்தன் நடத்தி வைத்தார். தக்க பாதுகாப்போடு, திருக்குறள் படித்து, தமிழ் முறைப்படி எங்கள் திருமணம் நடந்தது. திட்டமிட்டபடி நடத்த இயலாத சூழலில், எளிமையாகத் திருமணத்தை நடத்தியது நிறைவாக இருக்கிறது” என்றார் பிரபாகரன்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.