இந்தியாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. 133 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரிசோதனைக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் வெறும் 90 பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மட்டுமே உள்ளன. தற்போது நாடு முழுவதும் 27 மையங்கள் தயார் செய்யப்பட்டுவருகின்றன. இந்தியாவின் சுகாதார நடைமுறைகள் குழப்பமான முறையிலும் அச்சமூட்டும் வகையிலும் இருப்பது, தற்போதைய சூழலுக்கு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிராகக் களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்ற அனைவருக்கும் முறையான பாதுகாப்புக் கவசங்கள் இல்லாமல் தொடர்ந்து பணிசெய்துவருகின்றனர். வைரஸ் பரவாமல் தடுக்கும் என் – 95 மாஸ்க், கையுறை, உடல் முழுவதும் மறைக்கும் பிரத்யேக உடை போன்றவைகூட இல்லை. இதனால், பல மாநிலங்களில் எந்த வசதியும் இல்லாமல் பணியாற்றும் நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
உள்நாட்டில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் தேவை மிகவும் குறைவாக இருப்பதால், தென்கொரியா மற்றும் சீனாவிலிருந்து மொத்தமாக இறக்குமதிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக நேற்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கொல்கத்தாவில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் மிக முக்கியமான தொற்றுநோய் மருத்துவமனையான பெலகாட்டாவில் பணிபுரியும் இளம் மருத்துவருக்கு, ரெயின் கோட் பாதுகாப்புக் கவசமாக வழங்கப்பட்டுள்ளது.

‘எங்கள் வாழ்வைப் பணயம்வைக்கும் வகையில் நாங்கள் பணியாற்ற மாட்டோம்’ எனப் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும், ஹரியானாவில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையைச் சேர்ந்த சந்தீப் கார்க் என்ற மருத்துவர், தன் இருசக்கர வாகனத்தின் ஹெல்மெட்டை முகக் கவசமாகப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார். அவர் பணிபுரியும் மருத்துவமனையில், எண்.95 முகக்கவசம் இல்லாததால் இதைப் பயன்படுத்துகிறார். ‘அறுவைசிகிச்சை செய்யும்போது பயன்படும் மாஸ்க் அணிந்து, அதன்மேல் ஹெல்மெட் அணிந்து, வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்துவருகிறேன்’ என சந்தீப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா தனது மொத்த நிதியில், சுமார் 1.3% பொது சுகாதாரத்துக்காகப் பயன்படுத்துகிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு. ‘பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்வதால், அனைத்து மருத்துவர்களும் பயப்படுகிறார்கள். நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை’ என ஹரியானா மருத்துவர் வேதனை தெரிவித்துள்ளார்.