இந்தியாவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. தினமும் வெளியாகும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அச்சத்தை வரவழைக்கிறது. இந்த எண்ணிக்கைகள் இன்றாவது குறையுமா என்ற நினைப்பிலே நம்மில் பலர் தினமும் செய்திகளைப் பார்க்கிறோம். எனினும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து கவலைதரும் விதமாகதான் இருக்கிறது.

கொரோனா

உலகில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் போதுமான அளவுக்குப் பரிசோதனைகள் நடைபெறுகிறதா என்று ஆய்வு செய்தால் இல்லை என்றே குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மக்களை தொடர்ந்து வீட்டிலே இருக்கும்படி அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. ஆனால், அது மட்டும் போதுமா என்றால் நிச்சயம் கிடையாது.

கொரோனாவைப் பொறுத்தவரையில், அதன் பரவலைக் கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். இதனால் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். ஆனால், தொற்று இருப்பவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இந்தியாவில் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களிடம் மட்டுமே பரிசோதனைகள் நடத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

கொரோனா

இந்தியாவில் தனியார், அரசு பரிசோதனை நிறுவனங்கள் என பெரும் எண்ணிக்கையில் பரிசோதனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கி இருந்தாலும், போதுமான அளவில் பரிசோதனை கருவிகள் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் பரிசோதனைகளில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்புக்காக வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போதுவரை நாட்டில் 47 தனியார் மற்றும் 127 அரசு பரிசோதனை நிலையங்கள் கொரோனா பரிசோதனையில் ஈடுபடுகிறது. இந்தியாவில் வென்டிலேட்டர்ஸ் போன்ற கருவிகளுடன் கொரோனா பரிசோதனை கருவிகளையும் பாதுகாப்பு உபரணங்களையும் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Read: `டெல்லி நிஜாமுதீன் ஜமாத்.. கொரோனா `ஹாட்ஸ்பாட்’ ஆகும் தமிழகம்?!’ -அதிர்ச்சி தரும் டிராக் ஹிஸ்டரி

நேற்று வரை இந்தியாவில் 38,442 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகச் சொல்கின்றன தரவுகள். அதாவது இந்திய மக்கள்தொகை கணக்கின்படி 10 லட்சம் மக்களில் 32 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதுவே பிரிட்டனை எடுத்துக்கொண்டால், 10 லட்சம் மக்களில் 1,921 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அமெரிக்காவோ அதற்கும் மேல்… 10 லட்சம் மக்களில் சுமார் 2,600 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதனால் இந்த நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தாலும், தொற்று இருப்பவர்களைத் தனிமைப்படுத்துவதன் மூலம் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும். நாட்டில் இருக்கும் அனைத்து குடிமக்களையும் பரிசோதிக்க முடியாது என்றாலும், இந்த எண்ணிக்கை நிச்சயம் போதாது என்பதே மேலே சொன்ன புள்ளிவிவரங்கள் நமக்கு காட்டும் உண்மை.

கொரோனா

ourworldindata.org. என்ற இணையதளத்தின் தரவுகளின்படி ஜெர்மனி ஒவ்வொரு வாரமும் சுமார் 5 லட்சம் மக்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துகிறது. தற்போது வரை அந்நாட்டில் 63,000-க்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் என்பது மற்ற நாடுகளை ஒப்பிடும்போது மிகக் குறைவாக (0.9%) உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை மார்ச் 20-ம் தேதி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டவர்களின் உறவினர்கள், குடும்பத்தினர் ஆகியோருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் குறைந்த அளவில் நடத்தப்பட்டாலும் இதில் கேரள மாநிலம் மட்டும் விதிவிலக்கு.

கேரளா

நாட்டின் மக்கள் தொகையில் மூன்று சதவிகிதத்தைக் கொண்ட கேரளா கிட்டத்தட்ட 7,000-க்கும் அதிகமான பரிசோதனைகளை செய்துள்ளது. அதாவது, இந்தியாவில் 38,442.. கேரளாவில் 7,000. கேரளா தற்போது மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட மாநிலமாக உள்ளது. ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களின் பயண விவரங்களை எடுக்கும் கேரளா, அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதிக்கிறது. அவர்களுக்கு அறிகுறி தென்படவில்லை என்றாலும் வீட்டில் 14 நாள்கள் தனிப்படுத்தப்படுவதை அம்மாநில அரசு உறுதி செய்கிறது.

Also Read: `பத்து நிமிடத்தில் கொரோனா ரிசல்ட்!’ -சமூகப் பரவலைத் தடுக்க கேரளாவின் ரேபிட் டெஸ்ட் டெக்னிக்

இதுபோக, ரேப்பிட் டெஸ்ட் என்னும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது 5 முதல் 15 நிமிடங்களில் நடத்தப்படும் பரிசோதனை. இதில் அறிகுறிகள் தென்பட்டால், அடுத்தகட்ட பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்படும். ரேப்பிட் டெஸ்ட் மூலம் இன்னும் பரிசோதனை வளையத்தைக் கணிசமான அளவுக்கு உயர்த்த உள்ளது கேரளா. எனினும் தேசிய மக்கள் மக்கள் தொகையில் கணிசமான எண்ணிக்கையை கொண்டிருக்கும் உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் போதுமான அளவில் பரிசோதனைகள் நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.

டெல்லி

கேரளாவில் 10 லட்சம் மக்களில் சுமார் 200 பேருக்கு சோதனைகள் நடத்தப்படுகிறது. அதே நேரத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 10 லட்சம் மக்களில் 12.2 பேர் என்ற அளவில்தான் பரிசோதனைகள் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் இந்த அளவு 5.3 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் 8.3 ஆகவும் இருக்கிறது. கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அதிகப்படியான பரிசோதனைகளையும் டிராக்கிங்கையும் செய்கிறது.

Also Read: `டெல்லி நிஜாமுதீன் ஜமாத்.. கொரோனா `ஹாட்ஸ்பாட்’ ஆகும் தமிழகம்?!’ -அதிர்ச்சி தரும் டிராக் ஹிஸ்டரி

Representational Image

கொரோனா லாக்-டவுன் அறிவிப்பு காரணமாக, மிகப் பெரிய அளவில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணமாகியுள்ளார்கள். இதனால் தொற்று பரவுதலை உடனடியாக நிறுத்த பரிசோதனையின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். `டெஸ்ட்…. டெஸ்ட்…. டெஸ்ட்’ – இதுவே உலகம் முழுவதும் கொரோனாவைத் தடுக்கும் இரண்டாவது பெரிய ஆயுதமாக இருக்கிறது. முதலாவது ஆயுதம், பொது இடங்களை தவிர்த்து முடிந்தவரை வீட்டிலே இருப்பதுதான் என்பதனை மக்களாகிய நம் புரிந்துகொள்ள வேண்டும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.