வெளிநாடு சென்றவர்களின் பட்டியலில் விஜய் பெயர் இருந்ததாக கருதி கொரோனா சுகாதார அதிகாரிகள் அவரது வீட்டை ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் கொரோனா வைரஸ் அச்சத்தால் போட்டப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆகவே படத்தின் டிரெய்லர் விரைவில் சமூக வலைத்தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த கடந்த மாதம், விஜய்யின் ‘பிகில்’ தொடர்பாக தயாரிப்பாளர் வீட்டிலும் பைனாசியரான அன்புச்செழியனுடன் தொடர்பான இடங்களிலும், வருமான வரித்துறை சோதனை செய்தது. மேலும், நெய்வேலியில் நடைபெற்று வந்த ‘மாஸ்டர்’ படபிடிப்பில் இருந்த விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது தலைப்புச் செய்தியானது.
இந்நிலையில், இப்போது விஜய் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சுகாதாரத் துறை அதிகாரிகள் விஜய்யின் வீட்டிற்கு கொரோனா குறித்த ஆய்வு செய்வதற்காக திடீரென சென்றதாக தகவல் வந்துள்ளது. இது குறித்த செய்தியை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தியாக வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்தியாவைத் தாக்க ஆரம்பித்த பின்னர், சமீபத்தில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் வீடுகளை சுகாதார அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அவர்கள் சேகரித்துள்ள பட்டியலின்படி கடந்த சில மாதங்களில் வெளிநாடு சென்றவர்களின் பட்டியலில் விஜய்யின் பெயர் இருந்ததாக தெரிகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னையிலுள்ள விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்குச் சென்று, வீட்டில் யாராவது வைரஸ் தொற்று உள்ளதா என்று விசாரித்துள்ளனர். இருப்பினும், கடந்த ஆறு மாதங்களாக விஜய்யின் வீட்டில் யாரும் வெளிநாடு செல்லவில்லை என்றும், வீட்டை விட்டு யாரும் வெளியேறவில்லை கூறப்பட்டதை அடுத்து சுகாதார அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டாமல் திரும்பிச் சென்றதாக தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM