சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஒட்டு மொத்த நாடுகளின் இயல்பு வாழ்க்கையையும் கொரோனா கலைத்துப் போட்டிருக்கிறது. நமது நாட்டில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், சமூகப் பரவலாகவும் கொரோனா பரவி வருகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் பணிசெய்து வருகிறார்கள்.

Corona

நாடு முழுவதும் மக்களைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் 21 நாள்களுக்கு ‘லாக் டவுன்’ செய்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, சமூகப் பரவலைத் தடுக்க சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும்தான். நம் நாட்டில் கேரளாவிலும் வெற்றிகரமாகக் கையாளப்பட்ட முறை ‘Contact Tracking’ வௌிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்களை ‘Contact Tracking’ முறையில் கண்காணிக்கிறது அரசு. கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவருக்கு இந்த ‘Contact Tracking’ செய்வதன் மூலம், அவர் விமான நிலையத்திலிருந்து வெளியேறிய பிறகு எங்கெல்லாம் சென்றார். அவரிடமிருந்து கொரோனா வேறு யாருக்கும் பரவியிருக்க வாய்ப்புள்ளதா… என்பதைக் கண்டறிய முடியும். இந்தியாவின்இன்னும் சில பகுதிகளில் இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ‘Contact Tracking’ முறையைச் சரியாகக் கையாண்ட நாடு என சிங்கப்பூரைப் பலரும் பாராட்டினர். அப்படி என்ன செய்தது சிங்கப்பூர்?

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவ வாய்ப்பு இருக்கக் கூடியவர்களை முன்கூட்டியே கண்டுபிடித்து தனிமைப்படுத்தியது அந்நாட்டு அரசு. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஆச்சர்யமடைந்தன. இதற்கு சிங்கப்பூர் அரசு பிரத்யேகத் துப்பறியும் நிபுணர்களைப் பயன்படுத்தியது. இவர்கள் பாதிக்கப்பட்டோரிடமிருந்து அவர்கள் சந்தித்த நபர்களின் குறிப்புகளைச் சேகரிக்கிறார்கள். கடந்த மார்ச் 16 வரை சிங்கப்பூரில் 243 நபர்கள் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 40 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோரை சிங்கப்பூர் அரசு முன்னரே தனிமைப்படுத்தி சோதித்தது. இதை அவர்களின் துப்பறியும் நிபணர்களை வைத்து சாத்தியமாக்கியது.

Singapore Airport

இதுவரை 6000 மக்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்தது. இவர்களின் தொடர்பு சுவடுகளையும் கண்டறிந்து அவர்களையும் கண்காணிப்பு செய்தது. இதைச் செய்ய சிசிடிவி கேமரா பதிவுகள், போலீஸ் விசாரணை, துப்பறியும் பணி எனப் பழைய முறையையே பின்பற்றியது. இதன்மூலம் 5,711 நோய்த் தொற்று கொண்டவர்களின் தொடர்புகளைக் கண்டுபிடித்துத் தனிமைப்படுத்தியது. இதன் மூலம் அந்தந்த மக்களிடம் அவர்கள் சில இடங்களுக்குச் சென்றதற்கான தகவல்களை உறுதிசெய்து தனிமைப்படுத்தும் உத்தரவை முன்கூட்டியே அளித்தது.

இதுபற்றி சிங்கப்பூரின் அரசு மருத்துவமனையில் துப்பறிவாளராகப் பணியாற்றிய கோன்சேயா ஈட்வின் ஃபிலிப் கூறுகையில் “மருத்துவமனைக்குக் கொரோனா தொற்றுடன் வரும் நோயாளிகளிடம் முதலில் நாங்கள் அவர்கள் தொடர்பில் இருந்த நபர்களின் தகவல்களைப் பெறுவோம் .

மேலும் எங்கு தொடர்பில் இருந்தார்கள் என்பதையும் கேட்டுத் தெரிந்து கொள்வோம். பின்னர் இந்த அடிப்படைத் தகவல்களை சுகாதார அமைச்சகத்திடம் தெரிவித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இந்த அடிப்படை தகவல்கள் இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்யஇயலாது. புதிர் போன்ற இதைக் கண்டுபிடிக்க எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்தால் போதும்” என்கிறார்.

இதன் பின்னர், இந்தத் தகவல்களைச் சுகாதாரத் துறை அமைச்சகம் காவல் துறையிடம் வழங்குகிறது. பின்னர், இவர்கள் தொடர்புகளைக் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகின்றனர். இதனால் ஒரு நாளைக்கு 30 முதல் 100  காவல் அதிகாரிகள் இந்தப் பணியை மேற்கொள்கின்றனர். பின்னர் இவர்கள் சிசிடிவி காணொலிகள், தொலைபேசி, கிரெடிட் கார்ட் பயன்பாடு ஆகியவற்றை வைத்து தொடர்பில் இருந்த நபர்களைக் கண்டறிந்தனர்.

இதையடுத்து இவர்களுடன் அதிக நேரத்தைச் செலவழித்த நபர்களை உடனடியாகத் தனிமைப்படுத்துகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட அனைவரையும் தொலைபேசி மூலம் 14 நாள்கள் கண்காணிப்பிலேயே வைத்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தவறவிட்ட இந்தத் தனி நபர் தொடர்பு சங்கிலியைச் சரியாகப் பயன்படுத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளது சிங்கப்பூர் அரசு. இதற்கு முக்கியக் காரணம் அவர்களிடம் இருந்த துப்பறியும் நிபுணர்களும் தேர்ந்தெடுத்த காவல்துறை அமைப்புமே ஆகும்.

சிங்கப்பூரைத் தவிர வேறு எந்த நாடாலும் இவ்வளவு சிறப்பாக இதைச் செய்திருக்க முடியாது என உலக சுகாதார அமைப்பே தெரிவிக்கிறது. சிங்கப்பூர் அரசு கேட்கும் தகவல்களைத் தெரிவிக்காமல் இருக்கும் நபர்களுக்குக் கைது நடவடிக்கையும் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவி இரண்டு மாதங்கள் முடிந்த நிலையிலும் ஏற்பட்ட உயிரிழப்பு குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Contact tracking

சிங்கப்பூர் அரசின் இந்த நடவடிக்கை குறித்து பிபிசி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்திருக்கும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு யோகா ஆசிரியை, ” நடந்தது எல்லாம் நம்பமுடியாததாக இருந்தது, ஒரு தெரியாத எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது” என அந்தத் தொலைபேசி உரையாடலை விவரிக்கிறார். “கால் செய்தவர்கள் ‘புதன்கிழமை 18:47 மணிக்கு நீங்கள் ஒரு டாக்ஸியில் இருந்தீர்களா?’ என்று கேட்டார்கள். இது மிகவும் துல்லியமான நேரமாக இருக்கவே, நான் கொஞ்சம் பீதியடைந்தேன், திடீரென என்னால் யோசிக்கக்கூட முடியவில்லை “இறுதியில் நான் அந்த டாக்ஸியில் இருந்ததை நினைவில்வைத்து, ஆம் என்று பதிலளித்தேன். பின்னர் என்னுடைய மொபைல் செயலியில் டாக்ஸி பயன்பாட்டைப் பார்த்தபோது, வெறும் ஆறு நிமிடங்கள்தான் நான் அந்த டாக்ஸியில் பயணம் செய்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன், அவ்வளவு குறிப்பாகத் துல்லியமாகச் சிங்கப்பூர் அரசு ‘Contact Tracking’ செய்கிறது என்று உணர்ந்துகொண்டேன்” என்கிறார். மேலும் அவர் கூறுகையில், “பாதிக்கப்பட்டது அந்த டாக்ஸியின் ஓட்டுநரா அல்லது மற்றொரு பயணியா என்பதுகூட எனக்குத் தெரியாது, எனக்குத் தெரிந்ததெல்லாம், சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகத்தின் ஒரு அதிகாரி, தொலைபேசி அழைப்பைச் செய்தார், அவர் நான் வீட்டிலேயே தங்கி என்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொன்னார் அவ்வளவே. மறுநாள் அறுவை சிகிச்சை முகமூடிகளை அணிந்து மூன்று பேர் எனது வீட்டிற்கு வந்தனர். ஏதோ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி போலவே அது இருந்தது. வந்தவர்கள் எனக்கு ஓர் அரசு ஆணையைக் கொடுத்தனர். தனிமைப்படுத்தப்படுவதற்கான உத்தரவு அது. நான் வீட்டிற்கு வெளியே செல்ல முடியாது என்று அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மீறினால் எனக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை கிடைக்கும். நான், அவர்கள் சொல்வதைச் செய்தேன், நான் வீட்டை விட்டு வெளியேறவில்லை” என்கிறார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவருக்கு கோவிட் -19 இன் அறிகுறிகள் இல்லை; அவர் பாதிப்படையவில்லை என்று உறுதியான பிறகு, அவர் தனது வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்.

தற்போது சிங்கப்பூர் அரசு தொற்று நோய் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடிக்கச் செயலி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ‘ட்ரேஸ் டு கெதர்’ (TraceTogether) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயலி அருகில் இருக்கும் தொலைபேசிகளை ப்ளூடூத் மூலம் கண்டறிகிறது. பின்னர் அந்தச் செயலியைப் பயன்படுத்துபவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்தச் செயலியில் இருக்கும் தகவல் மூலம் அவர்களைக் கடந்து சென்றவர்களைக் கண்டறிய முடியும். ஆனால், பயனாளர்களின் தகவல்களை இதன் மூலம் அரசு தெரிவிக்காது என அரசு அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

covid-19

அமெரிக்க அரசும் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தனிநபர் தொடர்பைக் கண்டறிய பயனாளர்களின் தகவல்களை அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. இதற்கிடையில் அவர்களின் பெயர்கள் மற்றும் தகவல்களைப் பாதுகாப்பாக வைக்குமாறு எதிர்க்கட்சியினர் அதிபர் ட்ரம்பிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலகட்டத்தில் ஒருவர் தொடர்பில் இருக்கும் நபர்களைக் கண்டறிவதும் சுலபமாகியுள்ளது. இந்தியாவும் இதே போல் தனி நபர் தொடர்பினைக் கண்டுபிடித்து அவர்களைத் தனிமைப்படுத்தினால் சிறந்த முறையில் கொரோனா வைரஸ் பரவலை எளிதில் தடுக்கலாம். இதற்கு மக்களும் அரசிற்கு தகவல்களை அளிப்பதில் ஒத்துழைப்பு தர வேண்டியது அவசியம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.