கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தடை உத்தரவை மீறி மக்கள் ஊரைச் சுற்றிவருகின்றனர். அவர்களை லத்தியை வைத்து தண்டிக்காத சென்னை போலீஸார் புதிய முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.
சென்னை வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் ரஜீஸ்பாபு, கொரோனா வைரஸ் வடிவிலான ஹெல்மெட்டை அணிந்து, `நான்தான் கொரோனா, நீங்கள் வெளியில் வந்தால் உங்களுடன் வந்துவிடுவேன்’ என்று கூறி திகிலோடு கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.

Also Read: `நான்தான் கொரோனா..!’- வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டரின் `திகில்’ விழிப்புணர்வு
சென்னை பூந்தமல்லி பகுதியில் வீட்டை விட்டு வெளியில் வாகனங்களில் வந்தவர்களுக்கு நேற்றிரவு போலீஸார் நூதன தண்டனையை வழங்கினர். பூந்தமல்லி பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சாலைகளில் தடுப்புகளை ஆங்காங்கே அமைத்திருந்தனர். அப்போது தேவையில்லாமல் சிலர் ஊரை சுற்றிக்கொண்டு அவ்வழியாக வந்தனர். அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவர்களுக்கு அட்வான்ஸ் தரப் போவதாக காவல் உதவி கமிஷனர் செம்பேடு பாபு கூறியுள்ளார். அதனால் தங்களுக்கு ஏதாவது பணம் தரப்போகிறார் என்று போலீஸாரிடம் சிக்கியவர்கள் கருதினர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் இருட்டான பகுதிக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
நடுரோட்டில் அனைவரையும் சமூக விலகலுக்காக இடைவெளியை விட்டு வரிசையாக போலீஸார் நிற்க வைத்தனர். பின்னர், அங்கு போலீஸ் உயரதிகாரி ஒருவர் வந்தார். அவர், சில உடற்பயிற்சிகளை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். அந்த உடற்பயிற்சிகளை அவர்கள் தொடர்ந்து செய்தனர். அரைமணி நேரத்துக்கு மேல் இந்தப் பயிற்சி நடந்தது. அதனால் சுதந்திரமாக வெளியில் சுற்றித்திரிந்தவர்கள் சோர்வடைந்தனர். ஆனாலும் அவர்களை போலீஸார் விடவில்லை.
Also Read: `ஸாரி நண்பா…தெரியாமல் அடித்துவிட்டேன்!’- சென்னையில் டிரைவரிடம் மன்னிப்பு கேட்ட காவலர்கள்
இதையடுத்து இன்னோர் அதிகாரி ஒருவர் வந்தார். அவர், போலீஸாரிடம் சிக்கியவர்களை வரிசையாக இடைவெளியை விட்டு நிற்க வைத்தார். பின்னர் அவர், சாலையில் தவளைபோல் குத்த வைத்து தாவித் தாவிச் செல்ல சொல்லிக் கொடுத்தார். அதன்படி அவர்களும் சாலையில் தவளையைப் போல துள்ளிக் குதித்தனர். சிலரால் தவளைபோல துள்ளிக் குதிக்க முடியவில்லை. அதைக் கண்ட போலீஸார், `இந்த உடற்பயிற்சி கூட உங்களால் செய்ய முடியவில்லை. கொரோனா வந்தால் என்ன செய்வீர்கள்’ என்று கூறினர். `அதனால் தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள்’ என்று அட்வைஸ் செய்தனர்.
அடுத்து கைகளை முன்னால் நீட்டிக்கொண்டு எழுந்து, எழுந்து உட்காரும்படி உடற்பயிற்சி அளிக்கப்பட்டது. அதையும் சிலரால் செய்ய முடியவில்லை. அப்போது அவர்கள், `ஸாரி சார், இனிமேல் நாங்கள் வெளியில் வரமாட்டோம்’ என்று கெஞ்சத் தொடங்கினர். அவர்கள் மீது பரிதாபப்பட்ட பூந்தமல்லி போலீஸார், `தேவையில்லாமல் வெளியில் வாகனத்தில் சுற்றக் கூடாது’ என அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
பூந்தமல்லி போலீஸாரின் இந்த நூதனத் தண்டனை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதனால் இன்று பூந்தமல்லி பகுதியில் தேவையில்லாமல் டூவீலர்களில் வெளியில் சுற்றுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், “இந்த இக்கட்டான சூழலில் விழிப்புணர்வு இல்லாமல் வெளியில் சுற்றுபவர்களை லத்தியைக் கொண்டு தண்டிக்க மனமில்லை. அதனால்தான் உடல் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்கிறோம். இந்தப் பயிற்சி கடினமாக இருப்பதால் அதற்கு பயந்து தேவையில்லாமல் ஊரைச் சுற்ற முன்வர மாட்டார்கள்” என்றார் உறுதியாக.