பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
கொரோனா லாக்டவுன் காலத்தில் எனது ஒருநாள் எப்படி அமைகிறது என்பதைப் பகிர்ந்துகொள்கிறேன்…
காலை 6 மணிக்கு மேல் உறங்க எமது உயிர்க் கடிகாரம் அனுமதிப்பதில்லை. 6 மணிக்கு எழுந்து அரக்கப்பரக்கவோ, அவசரமோ இன்றி, மிகப் பொறுமையாகக் குளித்து, பிரார்த்தனையை முடித்து ரிலாக்ஸாக டிவி முன்பு அமர்ந்தால் அன்றைய கொரோனா குறித்த செய்திகள் வரிசைகட்டி நிற்கும்.
காமெடி, மியூசிக் என சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்தாலும், அவ்வப்போது இடிமுழக்கம் போன்ற சத்தத்துடன் பார்க்கக்கூடிய நியூஸ் சேனல்கள் சற்று பதற்றத்தை உண்டாக்குவதைத் தவிர்க்க முடியாது.

இப்படியே சேனல்களை மாற்றி மாற்றி காலையில் சற்று நேரத்தைக் கடத்திய பின் காலை உணவு. அதன் பின்னர் எமது அடுத்த ஒரு மணிநேரத்தை முழுவதுமாக அபகரித்துக் கொள்வது செய்தித்தாள்கள். பல செய்திகளை மேம்போக்காக நுனிப்புல் மேய்ந்துவிட்டு தேவைப்படும் செய்திகளை மட்டுமே ஆழமாகப் படிப்பது வழக்கம்.
ஆனால், தற்போதோ செய்தித்தாளில் விளம்பரம் உட்பட அனைத்தையுமே முழுக்க படித்துவிட முடிவது சற்று நகைமுரண்தான்.
அடுத்து செல்போன் சற்று நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் வல்லூறுகளின் வதந்திகளைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு, தேவையான விஷயங்களை மட்டுமே கிரகித்து முடிப்பது,
போலீஸிடம் அடிவாங்காமல் வெளியே சென்றுவிட்டு வருவதற்கு இணையான ஒரு லாவகமான செயல்.
சமூக வலைதளங்களில் வந்து குவியும் கொரோனா குறித்த மீம்ஸ்கள் “துன்பம் வரும் போது சிரிக்க வேண்டும்” என்ற பழமொழியை தமிழக மக்கள் மிகச் சரியாகப் பின்பற்றுகிறார்களோ என்ற சந்தேகத்தை உண்டாக்கும்.
கண்கள் சற்றே அயரும் அந்த நேரத்தில் ஒரு காபி கிடைக்கும். ஸ்னேக்ஸ் கிடைப்பது போனஸ். காபி ஸ்னேக்ஸை முடித்த பின்பு குழந்தைகளுடன் விளையாட்டு தொடங்கும். விளையாட்டுகளில் குழந்தைகள் எப்போதும் ஃபிரெஷ் ஆகவே இருப்பர். நாம்தான் சற்று சோர்வாக இருப்பதுபோல காட்டிக்கொள்ள வேண்டும். நிறைய விளையாட்டுகளில் இஷ்டப்பட்டு தோற்க வேண்டும்.
இல்லாவிடில் கஷ்டம்தான்.
குழந்தைகள் சிறிது நேரத்தில் நாம் அவர்களுடன் இணைந்து விளையாடுவதற்கு 144 போட்டுவிட்டு அவர்களின் விளையாட்டைத் தொடர்வர்.
அப்போது கவனமாக விலகிவிட வேண்டும். இல்லாவிடில் கட்டாயமாக விலக்கப்படுவோம்!

தினமும் நேரில் சந்தித்த நண்பர்களுடன், போனில் அளவளாவுவது அடுத்து தொடங்கும். போன் சற்று சூடாகும்போது பேச்சை முடித்துவிட்டு, புத்தகங்களுக்குள் புக வேண்டியதுதான். மூன்று நூலகங்களில் இருந்து எடுத்து வந்த ஒன்பது புத்தகங்களும் படித்தாகிவிட்டது. புத்தகத் திருவிழாக்களில் வாங்கியவையும் தீர்ந்துபோய் விட்டன.
போனில் அல்லது கிண்டிலில் படிப்பது புத்தகத்தை கைகளில் வைத்து படிப்பதுபோல வசதியாக இருப்பதில்லை. எனவே, பரணில் இருந்து இறக்கிய படித்து முடித்த புத்தகங்களையே மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டி இருக்கிறது. பல புத்தகங்கள் புதியது போலவே இருக்கின்றன. மறதிக்கு நன்றி!
புத்தகங்கள் உண்மையில் நேரக் கள்வர்கள்தான். நேரம் போவதே தெரியாமல் புத்தகங்கள் நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் அந்த நேரத்தில், வயிறு பசித்து மதிய உணவிற்கான நேரம் என்பதை நினைவூட்டும். மதிய உணவை முடித்துவிட்டு மீண்டும் சற்று நேரம் தொலைக்காட்சி செய்திகளின் பக்கம் கவனத்தைத் திருப்பினால், அன்றைய கொரோனா குறித்த அப்டேட்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கும். சமூக இடைவெளி வட்டங்கள் போன்றே, நேர்மறை செய்திகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பதும் இன்றைய சூழலில் மிகவும் அவசியமானது.

வீட்டிலுள்ளோர் அனைவரும் உண்ட மயக்கத்தில் சற்று நித்திரையில் ஆழ்ந்து விட, அப்போது கை கொடுப்பவை Netflix, Amazon prime, Hot star உள்ளிட்ட OTT (Over-the-top) கள்தான். ஆனால், தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக இவைகளின் தேவை அதிகரித்துவிட்டதால், இவற்றின் ஸ்டிரீமிங் இன் தரம் சற்று குறைக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், தரம் குறைந்தது பெரிய அளவில் தெரிவதில்லை என்பது மகிழ்ச்சி. ஏதேனுமொரு புதுமையான வெப்சீரியஸோ அல்லது ஹாலிவுட் படத்தையோ பார்த்து முடிக்கும்போது மாலை மயங்கியிருக்கும். மாலையில் ஸ்னேக்ஸ்சுடன் சூடாக ஒரு டீ கிடைக்கும்.
அதைக் குடித்துவிட்டு மீண்டும் குழந்தைகளுடன் கொண்டாட்டத்துடன் இணைந்த திண்டாட்டம் தொடரும்.
பின் தினமும் ஒரு புதுமை கற்றுக்கொள்ளும் நோக்கில் Google Glass, Autonomous Driving, Human Augmentation, Google AR core & Camera உள்ளிட்டவை குறித்து தினம் ஒன்றாக இணையத்தில் தேடித் தேடிப் படிப்பதும்,
இயன்றவற்றை செயல்படுத்திப் பார்ப்பதும் தொடங்கும்.
இடையில் சலிப்பு உண்டாகும்போது Memes Creation,Articles typing,Whatsapp Puzzle உள்ளிட்டவை சலிப்பைப் போக்கும்.சமூக இடைவெளியுடன் அண்டை வீட்டாருடன் அரட்டை அடிப்பதும் அவ்வப்போது கைகொடுக்கும். ஆனால் அரட்டைகளில் பகிரப்படும் தகவல்களை பாலையும் நீரையும் பிரிக்கும் அன்னப்பறவை போல பிரித்து கிரகிப்பது அவசியம்.

மீண்டும் சற்று நேரம் டிவியில் மூழ்கி முத்தெடுத்துவிட்டு, பிறகு மீண்டும் புத்தகங்களைத் தொடர வேண்டியதுதான்.
மற்ற நாள்களில் படிப்பதைவிட தற்போது படிப்பது சற்று ஆழமான வாசிப்பாக இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இறுதியாக இரவு உணவை முடித்துக்கொண்டு உறங்கச் செல்வோம்.
இவ்வாறுதான் ஒவ்வொருநாள் பொழுதும் கழிகிறது. மேற்காண் நிகழ்வுகள் திட்டமிட்டு ஒன்றன் பின் ஒன்றாக தினமும் நிகழ்வதில்லை.
முன்பின் மாற்றங்கள் அவ்வப்போது இருக்கவே செய்கின்றன. சமையலுக்குத் தேவையான பொருள்கள் கையிருப்பில் இருந்ததால், வெளியே செல்ல வேண்டிய தேவை இதுவரை ஏற்படவில்லை. கூட்டுக் குடும்பமாக இருப்பதால் சமையலறைக்குள் நுழையும் வாய்ப்பும் வாய்க்கவில்லை.
முன்பெல்லாம் உறங்கச் செல்லும் முன்பு, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து திட்டமிடல் இருக்கும். இப்போதோ இல்லாதோர், இயலாதோர் மற்றும் இடம் பெயர்வோர் குறித்த கவலைகள் மனதை ஆக்கிரமிக்கின்றன.
அறிமுக வட்டாரத்தில் தேவையுடையோர்க்கு இணைய உதவிகளும், பிரதமர், முதல்வர் நிவாரண நிதிகளுக்கு பங்களிப்பதும் மட்டுமே நம்மால் தற்போது செய்ய முடிந்த உச்சபட்ச உதவிகளாக உள்ளன.

பிறருக்கு உதவ மனமிருந்தும் பலர் தற்போது கையறு நிலையில்தான் உள்ளனர்.
குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடவும், எண்ணங்களைப் பகிரவும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதில் ஐயமில்லை. ஆனால், வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் பழக்கம் தற்போது வழக்கமாகவே மாறிக்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மனிதனுமே தனித்துவமானவன்தான்.
இந்த லாக் டவுன் காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடிய அனுபவங்கள் முன்பு யாரும் அனுபவித்திராத ஒன்று.
அடிப்படைத் தேவைகள் நிறைவு பெற்றோர், வதந்திகளை மெய்யென்று நம்பியும், எதிர்மறை எண்ணங்களின் ஆக்கிரமிப்பிலும் வாழக்கூடியோர்,
அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்தவர் தயவையோ, அரசாங்கத்தின் தயவையோ எதிர்நோக்கியுள்ளோர் எனப் பலதரப்பட்ட மனித ஆளுமைகள் வீடுகளுக்குள், அரசின் முகாம்களில், தெருவோரங்களில் முடங்கியுள்ளன.
இது மிகமிகக் கடுமையான சூழ்நிலைதான். ஆனால், வேறு வழியில்லை.இது காலத்தின் கட்டாயம். “முட்டாள் தன் நண்பர்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், அறிவாளி தனது எதிரிகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வான்” என்பார்கள். நமக்கு வாய்த்துள்ள இந்தக் கடுமையான சூழ்நிலையை முடிந்தவரை நேர்மறையாகப் பயன்படுத்த முயல்வோம்.
அனைத்து பிரச்னைகளுக்குமே ஒரு தீர்வு உண்டு. விட்டு விடுதலையாகி, வீடுகளைவிட்டு அனைவரும் சுதந்திரமாக வெளிவரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இச்சூழலிலிருந்து நாம் வெற்றிகரமாக மீளும் வழிமுறையை மனித சமூகம் விரைவில் கண்டறியும்.
ஏனெனில் “தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்.”
– அகன் சரவணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.