கேரள மாநிலத்தில் கொரோனா நோய் தாக்கம் அதிகரித்தவண்னம் உள்ளது. கேரளத்தில் புதிதாக 32 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 17 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். 15 பேருக்கு அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக கொரோனா பரவியுள்ளது. கேரளத்தில் மொத்தம் 213 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 1,57,253 பேர் தனிமை கண்காணிப்பில் உள்ளனர். அதில் 623 பேர் மருத்துவமனையில் வைத்து கண்காணிக்கப்படுகிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டது. இந்தநிலையில் கேரள மாநிலம் கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து முதிய தம்பதியினர் குணமடைந்துள்ள நிகழ்வு மருத்துவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு குவிந்தவணனம் உள்ளது.

கே.கே.ஷைலஜா டீச்சர்

இத்தாலி நாட்டில் இருந்து கடந்த பிப்ரவரி 29-ம் தேதி ஊர் திரும்பிய பத்தனம்திட்டா-வைச் சேர்ந்தவர்களால் அவர்களது வீட்டில் உள்ள 93 வயதான தாமஸ் அவரது மனைவி 88 வயதான மரியம்மா ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானார்கள். மார்ச் 8-ம் தேதி இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கோட்டயம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் இவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா கூறுகையில், “பத்தனம்திட்டாவில் இத்தாலியில் இருந்து வந்த குடும்ப உறுப்பினர்கள் மூலம் இந்த முதிய தம்பதியினருக்கு கொரோனா பாதித்துள்ளது. இவர்களுக்கு மார்ச் 8-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மார்ச் 9-ம் தேதி கோட்டயம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆரம்ப நாட்களில் தாமஸுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு அவசர பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தம்பதிகளை ஒரே அறையில் வைத்து சிகிச்சை அளித்ததால் அவர்களுக்கு ஆறுதலான விசயமாக இருந்தது. இருவருக்கும் சிறுநீரக பிரச்னை இருந்தது. சிகிச்சைக்கு பிறகு அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்ததில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. அவர்களது உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளது. விரைவில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் சைலஜா

முதலில், அவர்கள் வீட்டுக்கு போகவேண்டும் என்று அடம்பிடித்து சாப்பிடாமலும், செவிலியர்களுக்கு ஒத்துழைக்காமலும் இருந்துள்ளனர். சமயோஜிதமாக செயல்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள், அவர்களிடம் அன்பாகவும் நடந்துகொண்டனர். அவர்களை அன்பாகக் கவனித்துக்கொண்ட செவிலியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு சுகாதாரத் துறை பக்கபலமாக இருந்து சிகிச்சை அளித்து வருகிறது. முதிய தம்பதியினரை கடும் முயற்சி எடுத்து மீட்ட மருத்துவக் கல்லூரி பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.