கும்பகோணம் அருகே பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர், கொரோனாவால் வேலையிழந்து, வருமானம் இல்லாமல் பசியால் தவித்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, தன் சொந்தச் செலவில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அரிசி வழங்கும் இன்ஸ்பெக்டர்

கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிபவர், சுகுணா. இவர், பந்தநல்லூரைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு, தனது சொந்தச் செலவில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை இலவசமாக வழங்கி வருகிறார். ஏழை விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் நிறைந்த இப்பகுதியில், கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், வருமானம் எதுவும் இன்றி ஒரு வேளை உணவிற்கே கஷ்டப்படும் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உதவும் சுகுணாவைப் பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகிறார்கள்.

உலகை அச்சுறுத்திவரும் கொரொனா வைரஸ், தற்போது இந்தியாவை மிரட்டிவருகிறது. அதைப் பரவாமல் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கும் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இதனால் தினக்கூலிக்கு வேலைக்கு செல்பவர்கள், விவசாயத் தொழிலாளர்கள் என அடித்தட்டு மக்கள் பலர் பலவித இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

கொரானா உதவி

குறிப்பாக, பல குடும்பங்கள் அத்தியாவசிய தேவைகளைக்கூட பூர்த்திசெய்துகொள்ள முடியாமல் தவித்துவருகின்றன. மனித நேயமிக்க பலர் அவர்களின் துயர் துடைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சுகுணா, தான் பணிபுரியும் பகுதியில் உள்ள ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்துவருகிறார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுகுணாவிடம் பேசினோம், “பந்தநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுமே, விவசாயத்தை நம்பியே இருக்கின்றன. விவசாய கூலித் தொழிலாளிகள், தினக்கூலிகள் அதிக அளவில் இப்பகுதியில் வசித்துவருகின்றனர். தினசரி வேலைக்குச் சென்றால்தான் இவர்கள் வீட்டில் அடுப்பு எரியும் என்கிற நிலையில்தான் உள்ளனர்.

உதவி பெறும் மக்கள்

இந்த நிலையில், கொரோனா பரவாமல் இருப்பதற்காக நாங்கள் அப்பகுதியில் விழிப்புணர்வு செய்வதற்குச் சென்றோம். அப்போது, பலரும் பட்டினியில் இருப்பதை உணர முடிந்தது. இதையடுத்து, அவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கொடுக்க நினைத்தேன். அதன்படி இதுவரை கீழக்காட்டூர், மேலக்காட்டூர் உள்ளிட்ட நான்கு கிராமங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கடந்த சில தினக்களாக அரிசி, பிரெட், சோப் உள்ளிட்ட பொருள்களை வழங்கினோம்.

எனக்கும் பொருளாதார சிக்கல் இருக்கு. இருந்தாலும் இவர்களுக்கு என்னால முடிஞ்ச சின்ன உதவியைச் செய்துவருகிறேன். பொருள்களை வாங்கிச்செல்லும்போது, அவர்கள் முகத்தில் ஒரு நிம்மதியைப் பார்க்க முடிந்தது. அதுவே, என் மனசுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

இன்ஸ்பெக்டர் சுகுணா

இன்னும் பல குடும்பங்களுக்கு உதவ வேண்டியிருக்கு. இதற்காக ஆர்வமுள்ள தன்னார்வலர்களிடமும் பேசியிருக்கிறேன். எல்லோரும் முன் வரும் பட்சத்தில், இன்னும் பல வீடுகளில் அடுப்பெரியும் என்கிற நம்பிக்கை உள்ளது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.