கொரோனா அச்சுறுத்தலால் உலக நாடுகள் பலவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தொற்று மூலம் பரவுகிற வைரஸ் என்பதால் மக்கள் நடமாட்டத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துவதே நோய் பரவாமல் தடுப்பதற்கு நம் முன் உள்ள ஒரே வழி. கொரோனா நோய்க்கு தற்போதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சீனாவின் வுகான் நகரில் கொரோனா பரவுவது தெரிய வந்த உடனே ஒட்டுமொத்த வுகான் நகரத்தையும் முடக்கியது சீன அரசு. மக்கள் நடமாட்டம் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு சீறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கிட்டத்தட்ட மூன்று மாத முடக்கத்துக்குப் பிறகு தற்போதுதான் வுகானில் கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டு வருகின்றன.

சீனாவைத் தொடர்ந்து கொரோனாவால் இத்தாலி, ஸ்பெயின் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தலை இந்த நாடுகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளாததே இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. தற்போது பெரும்பாலான உலக நாடுகளும் தங்களுடைய எல்லையை மூடியுள்ளன, மக்கள் நடமாட்டத்தைப் பரவலாகக் கட்டுப்படுத்தியுள்ளன.
இந்த வரிசையில் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் கேரளாவில் முதல் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்போதிலிருந்தே கேரள அரசு கொரோனா தற்காப்பு நடவடிக்கையில் இறங்கியது. ஆனால், அகில இந்திய அளவில் கொரோனா பற்றிய தீவிரம் உணரப்படவில்லை. கொரோனா அச்சுறுத்தலை இந்தியா மிகவும் எளிதாக எடுத்துக்கொண்டது என்கிற கருத்தும் உள்ளது.
இந்த நிலையில், படிப்படியாக இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. மார்ச் மூன்றாம் வாரத்தில்தான் இந்திய அரசு கொரோனாவின் தீவிரத்தை உணர ஆரம்பித்தது. வெவ்வேறு மாநில அரசுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தன. மார்ச் 13-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் முதல் மரணம் ஏற்பட்டது. அதற்குப் பிறகே இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தது.
மார்ச் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்புவிடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து அன்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது, 144 உத்தரவு அமல்படுத்தப்பட்டன. 22-ம் தேதிக்குப் பிறகும் கட்டுப்பாடுகள் தொடரும் என யூகிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மார்ச் 24-ம் தேதி திரையில் தோன்றிய பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாள்களுக்கு முழு ஊரடங்கு அன்றைய தினம் நள்ளிரவு முதலே அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.
Also Read: “அடுத்த வாரம் ஆபத்து அதிகம்!”- எச்சரித்த ஆய்வு… அதிர்ச்சியடைந்த மோடி
இதைத் தொடர்ந்து அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. போக்குவரத்து முடங்கியது. வணிக நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு விடுமுறை, work from home அறிவித்தன. அனைத்து மாநிலங்களின் எல்லைகளும் மூடப்பட்டன, அத்தியாவசிய சேவைகளில் உள்ளவர்கள் மட்டுமே நடமாட அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டது. பிரதமரின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பயணங்களில் இருந்தவர்கள் பயணங்களை பாதியிலே நிறுத்த வேண்டிய தேவை எழுந்தது. இடம்பெயர்ந்து வெவ்வேறு மாநிலங்களுக்குச் சென்று பணிபுரியும் தொழிலாளர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

பணி இடங்களில் வேலை இல்லை. ரயில், பேருந்து சேவைகள் முடங்கியதால் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் பல்வேறு இடங்களில் முடங்கினர். வட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்தே செல்கின்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின. 130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஒரே நாளில் இதுபோன்ற முடக்கம் என்பது பலருக்கும் சிரமத்தையே ஏற்படுத்தியது. ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகே ஆங்காங்கே சிக்கித் தவித்த வேறு மாநிலத் தொழிலாளர்கள் பிரச்னையில் அரசுகள் கவனம் செலுத்தத் தொடங்கின.
தமிழக அரசு கடந்த செவ்வாய் (24.3.2020) மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என அறிவித்தது. இதனால் திங்கள்கிழமை இரவன்றே மக்கள் பெரும் கூட்டமாக சொந்த ஊர்களுக்குச் செல்ல குவிந்தனர். அன்றைய தினம் மட்டுமே இரண்டு லட்சம் மக்கள் சென்னையிலிருந்து பயணப்பட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இதன்மூலம் கொரோனா தொற்று அதிகமாக பரவியிருக்குமோ என்கிற அச்சமும் நிலவுகிறது.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பிரதமர் மோடி ஏற்கெனவே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். “கூட்ட நெரிசலில் பயணிப்பது கொரோனா பரவுவதை அதிகரிக்கும். பயணத்தைத் தவிர்த்து தாங்கள் வசிக்கின்ற இடங்களிலே தங்கிக் கொள்ளுங்கள்” என்று மோடி பதிவிட்டிருந்தார்.
இந்தியாவில் வேலைக்காக வெளியூர்களுக்கு, வெளி மாநிலங்களுக்குச் சென்று பணிபுரிபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 14 கோடியாக உள்ளது. இதில் வெளி மாநிலங்களுக்குச் சென்று பணிபுரிபவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியாக உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் கூலித் தொழிலாளர்களே. தொழில்கள் முடங்கியதால் வேறு வாய்ப்பின்றி கிடைக்கின்ற வழிகளிலெல்லாம் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணப்படத் தொடங்கினர்.

Also Read: #FlattenTheCurve: கொரோனா விஷயத்தில் எங்கே சொதப்பியது அமெரிக்கா?! இந்தியாவுக்கான மெசேஜ்!
தொழிலாளர்கள், சரக்கு வாகனங்களை ஓட்டிச் சென்ற ஓட்டுநர்கள் போக்குவரத்து முடங்கியதால் ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், மாநில அரசுகள் மற்ற மாநிலங்களில் இதுபோல சிக்கித் தவிக்கும் தங்கள் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை முறையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்குத் தகவல் தெரிவிக்கத் தொடங்கின. சமூக ஊடகங்கள் இதற்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.
டெல்லி அரசு, பள்ளிகளில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதற்கு முன்கூட்டியே தயாராகி இருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. வேலை இல்லை, உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடுமோ, ஊரடங்கு நீண்ட நாள்களுக்கு நீட்டிக்கப்படுமோ என்கிற அச்சமே இத்தகைய இடப்பெயர்வுக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. நாடு தழுவிய ஊரடங்கிற்கு மிகக் குறுகிய கால அவகாசமே இருந்தது என்பதும் போதாமையாகச் சொல்லப்படுகிறது. இதற்கெல்லாம் அரசு முன்கூட்டியே தயாராக இருந்திருந்தால் இத்தகைய சிக்கல்களைத் தவிர்த்திருக்கலாம்.
நாடு தழுவிய ஊரடங்கினால் ஏற்பட்டிருக்கக்கூடிய சிரமங்களுக்கு என்னை மன்னித்து விடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசு கவனிக்கத் தவறிய விஷயங்கள் என்னென்ன:
– புலம்பெயர்ந்து செல்லக்கூடிய வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான தங்குமிடம், உணவு, போக்குவரத்து போன்ற ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து முன்னதாகவே மேற்கொண்டிருக்கலாம்.
– வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்களை முன்கூட்டியே முறையாக கண்காணித்து தனிமைப்படுத்தியிருக்கலாம்.
– அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் எந்தத் தட்டுப்பாடும் இருக்காது என்பதை வணிகர்களுடன் கலந்தாலோசித்து அறிவித்திருக்கலாம்.

– உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்கிற அச்சத்தில்தான் மக்கள் அவசரமாக ஊர்களுக்குப் பயணம் புரிந்தனர். உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்பதை உறுதிப்படுத்தியிருந்தாலே மக்கள் தேவையற்ற பயணத்தைத் தவிர்த்திருப்பர்.
– பயணங்களைத் தவிர்த்து தனித்திருக்க வேண்டும் என்பதுதான் ஊரடங்கின் நோக்கம். அதை மக்களுக்குப் புரியும்படி அறிவித்திருந்தாலே இதுபோன்ற நெருக்கடியான பயணத்தை மக்கள் தவிர்த்திருக்கக்கூடும்.