கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்து சங்கிலித் தொடர்போல பல பாதிப்புகளும், பல புதிய பிரச்னைகளும் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. கடைகளில் முகக்கவசம் மற்றும் சானிடைஸர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. அவை சிறிய பொருள்கள் என்பதால் சுலபமாக மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள முடிந்தது. தற்போது கொரோனா பாதித்தவர்களுக்கு உபயோகப்படுத்தும் வென்டிலேட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வென்டிலேட்டர்

கொரோனா பாதிப்பு முக்கியமாக நுரையீரல் பகுதியைத் தாக்குகிறது என்பதால், நோய் தீவிரம் அடைந்தவர்கள் இயற்கையாகச் சுவாசிக்கச் சிரமப்படுவர். இதைத் தடுப்பதற்கு வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் அவர்களைச் சுவாசிக்க வைத்து, உயிர் பிழைக்கும் வாய்ப்பை அதிகரிக்கின்றனர் மருத்துவர்கள். நாளுக்கு நாள் நோய் தீவிரம் அடைந்தவர்கள் அதிகரிக்கும்போது, வென்டிலேட்டர்களின் தேவையும் அதிகரிக்கிறது.

Also Read: கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் 350 படுக்கை வசதிகளுடன் சிறப்பு மருத்துவமனை! #NowAtVikatan

உலகம் முழுவதுமே வென்டிலேட்டர்களுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிலேயே வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் பணியை முடுக்கிவிட்டுள்ளன. வென்டிலேட்டர்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் தடைவிதித்திருக்கிறது ஐரோப்பிய யூனியன். இதையே மற்ற நாடுகளும் பின்பற்றத் தொடங்கவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் பல நாடுகள் உள்நாட்டு உற்பத்தியை முடுக்கி விட்டிருக்கின்றன. இந்த நிலை மேலும் தீவிரம் அடைந்தால் அனைத்து நாடுகளும் உள்நாட்டு உற்பத்தியை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகிவிடும்.

corona

தோராயமாக ஒரு வென்டிலேட்டர் நான்கில் இருந்து ஐந்து லட்சம் வரை விலையிருக்கும். அதோடு, வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வதும் எளிதில் முடிகிற செயல் இல்லை என்பதால், அதிகமாக வென்டிலேட்டர்கள் தேவை ஏற்பட்டாலும், அதை உடனடியாகப் பூர்த்தி செய்ய எந்த வழியும் இல்லை என்பதுதான் கவலை அளிக்கக்கூடிய செய்தி.

அமெரிக்காவில் தற்போது 1,60,000 வென்டிலேட்டர்கள் கைவசம் இருக்கின்றன. எனினும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் தற்போது சீனாவைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது அமெரிக்கா. அதிகரித்து வரும் இந்த எண்ணிக்கை வென்டிலேட்டர்களுக்கான தேவையையும் அதிகரித்துள்ளது. இந்தத் தேவையை மனதில் கொண்டு மேலும் 30,000-ல் இருந்து 40,000 வரை வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்து கொடுக்க உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் பேசி வருகிறது அமெரிக்கா.

இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,000-ஐ தாண்டியுள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தற்போது இங்கிலாந்தின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதன்படி 8,000 வென்டிலேட்டர்கள் இங்கிலாந்திடம் உள்ளன. மேலும், 8,000 வென்டிலேட்டர்களை உற்பத்திசெய்ய உற்பத்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் இங்கிலாந்தின் டைசன் நிறுவனத்திடமும் 10,000 வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

Ventilator

இந்தியாவி்ல் 30,000-ல் இருந்து 50,000 வரை வென்டிலேட்டர்கள் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதுவரை மற்ற நாடுகள் அளவுக்கு இந்தியாவில் தீவிரமாக இல்லை. எனினும், இந்தியா மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு என்பதால் நோயின் தீவிரம் அதிகமானால் இந்தியாவுக்கும் அதிகளவில் வென்டிலேட்டர்கள் தேவைப்படும். நொய்டாவைச் சேர்ந்த `AgVa ஹெல்த்கேர்’ என்ற வென்டிலேட்டர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் உற்பத்திப் பணியைத் துரிதப்படுத்தியிருக்கின்றன. அடுத்த 30 நாள்களில் 20,000 வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வதற்கான வேலையை தாங்கள் பார்த்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

Also Read: தடுப்பூசி, மருந்து, தாமதம்… கொரோனா சந்தேகங்களும் விளக்கங்களும்! #LongRead #FightCovid-19

ஏப்ரல் 15-க்குள் 5,000 வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யவும் அரசு கேட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வதிலும் பிரச்னைகள் உள்ளன. தற்போது நாடு முழுவதுமே முடக்கத்தில் உள்ளதால் தொழிற்சாலைகள் பலவும் முடங்கியுள்ளன. வென்டிலேட்டர் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் சிறிய பாகங்கள் தயாரிக்கும் ஆலைகளில் இருந்து பெரிய பாகங்கள் தயாரிக்கும் ஆலைகளும் முடங்கியுள்ளதால் உற்பத்திப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதில் சிக்கல் உள்ளது. இதைத் தவிர வெளிநாட்டில் இருந்தும் உற்பத்திப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. வெளிநாட்டு இறக்குமதிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மேலும் சிக்கலை உண்டாக்கும்.

கொரோனா

“இந்தச் சிக்கல்களை எதிர்கொண்டு வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வதற்கான வழிகளை யோசித்துக் கொண்டிருக்கிறோம்” என AgVg ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிறுவனரான வைஷ் தெரிவித்துள்ளார்.

பல நாடுகளும் வென்டிலேட்டர் தேவையைச் சமாளிக்க பல விதமான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கின்றன. விலங்குகளுக்காக உருவாக்கப்பட்ட வென்டிலேட்டர்களை மனிதர்களுக்கு உபயோகிக்க முடியுமா என்ற சோதனையும் நடைபெற்று வருகிறது. இத்தாலி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் தொழிற்சாலைகளைச் சிறிது மாற்றியமைத்து வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபடவிருக்கின்றன.

வென்டிலேட்டர்கள் மட்டுமல்லாது கையுறைகளுக்கும் உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலகத்தின் கையுறைத் தேவையில் 67 சதவிகிதத்தை மலேசியா நாடு பூர்த்தி செய்து வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக மலேசியாவும் முழுமையான லாக்டவுனில் உள்ளது. கையுறை உற்பத்தி அத்தியாவசியம் என்பதால் 50 சதவிகித தொழிலாளர்களை மட்டும் வைத்து கையுறை தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளன மலேசிய கையுறைத் தயாரிப்பு தொழிற்சாலைகள்.

Gloves

தற்போது வாரத்திற்கு 2.6 பில்லியன் கையுறைகள் தயாரிப்பதற்கான ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதோடு கையுறையின் தேவை மிக அவசியம் என்பதால், கையுறை தயாரிப்பு நிறுவனங்கள் சில, மலேசிய அரசை அணுகி தொழிற்சாலை இயங்குவதற்காக அனைத்து தொழிலாளர்களையும் பணியில் அமர்த்த தங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து, தற்போது அந்தக் கோரிக்கையும் ஏற்கப்பட்டுள்ளது.

ஆனாலும், இப்போது ஏற்பட்டிருக்கும் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. 24 மணி நேரமும் தொழிற்சாலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. எங்களால் முடிந்த அளவு தேவையைப் பூர்த்தி செய்ய முயல்கிறோம் எனத் தெரிவித்துள்ளன அந்நிறுவனங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.