கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களை சுகாதாரத்துறை தனிமைப்படுத்தி கண்காணித்துவருகிறது. இந்தச் சூழலில் இன்று ஒரே நாளில் மட்டும் 17 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் சிறப்பு அரசு மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனாவுக்காகச் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 13, 323 சிறப்பு வார்டுகளும் 3018 வென்டிலேட்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு வார்டுகளில் 295 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னை, நெல்லை உட்பட 11 மாவட்டங்களில் சுகாதாரத்துறையினர் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் 25,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் குடியிருக்கும் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருக்கும் வீடுகளில் கணக்கெடுக்கும் பணி நடந்துவருகிறது. சளி, இருமல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளதா என்ற விவரங்களை சுகாதாரப் பணியாளர்கள் சேகரித்துவருகின்றனர். அதே சமயத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடு அமைந்துள்ள பகுதிகளிலும் இந்தக் கணக்கெடுப்பு நடந்துவருகிறது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அண்ணாநகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், ஆலந்தூர் ஆகிய மண்டலங்களில் உள்ள பகுதிகளில் குடியிருந்த 9 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் அவர்கள் குடியிருந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு அலர்ட் விடுவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் ஆகிய பகுதியில் 5 பேருக்குக் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதி சுகாதாரத்துறையிரின் தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறது.
போரூரில் 2 பேருக்குக் கொரோனா தொற்று இருந்ததால் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். ஆலந்தூர் மண்டலம் மற்றும் கோட்டூர்புரம் பகுதிகளில் தலா ஒருவருக்குக் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். எனவே அவர்கள் குடியிருந்த பகுதி மக்களிடம் சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளனர். ஆட்டோக்கள் மூலம் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவருகிறோம். வீடுகளை விட்டு தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்றும் எச்சரித்துவருகிறோம்.
சென்னையில் அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர், கோட்டூர்புரம் ஆகிய இடங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளோம். இந்தப் பகுதி 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்குக் கண்காணிக்கப்பட்டு வருவதோடு 1½ லட்சத்துக்கும் அதிகமான வீடுகளும் சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பு வளைத்தில் இருந்துவருகிறது” என்றனர்.