`குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம்’ என ஆசை காட்டி பல லட்ச ரூபாய்களை ஆன்லைன் மூலம் அபகரித்த மோசடிக் கும்பலைச் சேர்ந்த இருவரை, ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ஆன்லைன் மோசடிக் கும்பல் பயன்படுத்திய மடிக்கணினிகள்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் காவலராகப் பணிபுரியும் சுரேஷ், இவரது நண்பர் அருள்ராஜன் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக எண்ணில் தொடர்புகொண்டு, கீழக்கரை பகுதியைச் சேர்ந்த மக்கள், சர்வதேச மோசடிக் கும்பலிடம் ஆன்லைன் மூலம் பல லட்ச ரூபாய்களை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோசடிக் கும்பலிடம் சுரேஷும், அருள்ராஜனுமே பல லட்ச ரூபாய்களை இழந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, எஸ்.பி வருண் குமார், குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயபிட்டா தலைமையில், சார்பு ஆய்வாளர்கள் திபா, குகனேஸ்வரன் ஆகியோர் அடங்கிய இரு தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். இவர்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் குமார், விஸ்வநாதன் ஆகியோர் சிக்கினர். தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட இவர்கள் இருவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டபோது, அவர்களது அயல்நாட்டுப் பணம் மற்றும் முதலீடுகள், வங்கிக் கணக்குகள், ஈரோடு மாவட்டத்தில் அவர்கள் நடத்திவந்த நிறுவனங்களின் மோசடி நடவடிக்கைகள் குறித்த டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

விஸ்வநாதன்

மேலும், குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க இணையத்தில் வழிதேடுபவர்களைக் குறிவைத்து வெளிநாட்டைச் சேர்ந்த ஆன்டர்சன் மற்றும் தமிழ் மொழியை நன்கறிந்த அபிஸ் என்பவரும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் குமார், விஸ்வநாதன் ஆகியோரை தங்களது முதலீட்டாளர்களாகத் தேர்வு செய்துள்ளனர். அவர்களின் ஆலோசனைப்படி, எவ்வித அனுமதியும் இன்றி, ஶ்ரீகிருஷ்ணா டிரேடர்ஸ், சூர்யா இண்டஸ்ட்ரீஸ் என இரு போலி நிறுவனங்களைத் தொடங்கியதுடன், இவற்றின் பெயரில் பல வங்கிகளில் போலி கணக்குகளையும் வைத்துள்ளனர். மேலும் துபாய், ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் பல நிறுவனங்களின் பெயரில் போலி கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்.

இந்தக் கணக்குகளின் மூலம் போலி டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு வழியாக பொதுமக்களின் பல லட்ச ரூபாய்களை அபகரித்துள்ளனர். இவ்வாறு அபகரித்த பணத்திற்கு கணக்கு காட்டாமல் தப்பிக்க Blockchain Technology மூலம் Cryptocurrency-யாக மாற்றியுள்ளனர். இவர்களை நம்பி இணையதளத்தில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் (MLM) மூலம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்ததுடன், அவர்களது கணக்கில் இருந்த பணத்தையும் பல்வேறு ஆன்லைன் மோசடிகள் மூலம் அபகரித்துள்ளனர்.

பிரவீன் குமார்

இதையடுத்து பிரவீன் குமார், விஸ்வநாதன் ஆகியோரைக் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 25 டெபிட், கிரெடிட் கார்டுகள், 9 மடிக்கணினிகள், செல்போன்கள், ஹார்டுடிஸ்க் மற்றும் 9 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கம், சுமார் ஒரு கோடி ரூபாய் Cryptocurrency ஆகியவற்றையும் பறிமுதல்செய்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.