அமெரிக்கா வந்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகனின் பாதுகாப்பிற்கு செலவு செய்ய முடியாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க அனைத்து நாடுகளின் அரசுகளும் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக சுகாதாரத்துறைக்கு அனைத்து அரசுகளும் பெரும் நிதியை ஒதுக்கி வருகின்றன. இதனால் அனைத்து நாடுகளிலும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே பங்கு சந்தைகள் சரிந்து பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்திருப்பதால் மேலும் நிதி நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்கா வந்துள்ள இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோரின் பாதுகாப்பிற்கு தங்களால் செலவு செய்ய முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “நான் பிரிட்டனுக்கும், ராணிக்கும் சிறந்த நண்பன் மற்றும் அபிமானி. இங்கிலாந்தை விட்டு வெளியேறிய ஹாரி மற்றும் மேகன் கனடாவில் வசித்து வந்ததாக அறியப்பட்டது. தற்போது அவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்கா வந்துள்ளனர். அவர்களது பாதுகாப்பிற்காக அமெரிக்கா செலவு செய்யாது. அவர்களே செலவு செய்துகொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அரச குடும்பத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர். அத்துடன் அவர்கள் இங்கிலாந்திலிருந்து வெளியேறி கனடாவில் சில மாதங்களாக வசித்து வந்தனர். தற்போது அங்கிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு தனியார் ஜெட் விமானம் மூலம் வந்திருக்கின்றனர். மேகன் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருப்பதால், அவர்கள் அமெரிக்க வந்திருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.
ஊரடங்கு உத்தரவால் தவித்த இளைஞர்கள் – உடனடியாக உதவி செய்த கோவை போலீஸ்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM