சிக்கித் தவிக்கும் 99 மீனவர்களைக் காப்பாற்றுமாறு தமிழக முதல்வர் பழனிசாமிக்குப் பவன் கல்யாண் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஆகவே மாநிலம் விட்டு வேறு மாநிலத்திற்குப் பயணம் செய்ய முடியாத நிலைமை நீடிக்கிறது. சொல்லப்போனால் அனைத்து மாநில எல்லைகளும் உஷார் நிலையில் மூடப்பட்டுள்ளன. எனவே போக்குவரத்து இன்றி மக்கள் முடங்கிப்போய் உள்ளனர். கொரோனா ஏற்படுத்தியுள்ள அச்சத்தால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை கொரோனா நோய் பாதித்து இந்தியா முழுமைக்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதியாகியுள்ளது. இதுவரை 50 பேராக இருந்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

image

இதனிடையே தெலுங்கு நடிகரும், ஜன சேனா நிறுவனருமான பவன் கல்யாண், தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். அவரது வெளியிட்டுள்ள பதிவில் “ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோமபேர்ரா மண்டலத்தின் கோலகண்டி கிராமத்திலிருந்து மீன்பிடிக்கத் தமிழக கடற்கரை எல்லைக்குச் சென்ற சுமார் 99 மீனவர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாகச் சென்னை துறைமுகத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.

அவர்களுக்குப் போதிய தங்கும் வசதி மற்றும் உணவு இன்றி மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களது குடும்பத்தார் இது குறித்துச் செய்வதறியாது தவித்து வருகிறார்கள். ஜன சேனா தொண்டர்கள் மூலம் இந்த விடயத்தை அறிந்த நான் மிகவும் வேதனையடைந்தேன். எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விஷயம் தெரிந்து உடனே பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து அவர்களுக்குப் போதிய உணவு மற்றும் உறைவிடம் வழங்கி, அவர்களின் ஊருக்கு அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் ஸ்ரீகாகுளம் மாவட்ட ஆட்சியர் இது குறித்து மேற்கண்ட தகவலையும் அந்த 99 மீனவர்கள் பற்றின தகவல்களை அந்தக் கவலையுற்ற மீனவக் குடும்பங்களுக்கு உடனே தெரிவிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

image

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி இந்தக் கோரிகையை ஏற்று ட்விட்டரில் பதிலளித்து உள்ளார். அவரது பதிவில், “இது குறித்து உடனடியாக செயல்படுமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவித்துள்ளேன். நாங்கள் அவர்களைக் கவனித்துக்கொள்வோம்” எனக் கூறியுள்ளார்.

பவன் கல்யாண், தமிழில் பதிவிட்ட செய்திக்குத் தமிழக முதல்வர் ஆங்கிலத்தில் பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.