“உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் பிறந்த மத ஒற்றுமையும் மனிதநேயமும்” -உத்தரப்பிரதேச நெகிழ்ச்சி

நாடு முழுவதும் கொரோனா தொற்றுக் காரணமாக,144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடை உத்தரவால், ஒரு பக்கம் மக்களிடையே உணவு மற்றும் மருந்துக்கான போராட்டம் தொடங்கியிருந்தாலும், இந்த நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, மக்கள் மிகுந்த சிரமத்துடன் இந்தச் சூழலை எதிர்கொண்டுவருகிறனர்.

கொரோனா வைரஸ்

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தர்சகர் மாவட்டத்தில், சிறுபான்மை மக்கள் வாழும் மோஹாலா ஆனந்த் விஹார் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார் ரவிசங்கர். இந்து மதத்தைச் சேர்ந்த இவருக்கு, மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.

புற்றுநோய் காரணமாக சில மாதங்களாகப் போராடிவந்தவர் இன்று உயிரிழந்துவிட்டார். ஏற்கெனவே, வறுமையில் இருந்த ரவிசங்கரின் குடும்பம், தற்போது கொரோனா காரணமாக மேலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறது. இந்த நிலையில், மரணித்த ரவிசங்கரின் இறுதிச்சடங்கிற்குகூட அவர்களால் செலவுசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அங்குள்ள இஸ்லாமியர்கள் சிலர் ஒன்றிணைந்து, அவருடைய இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடுசெய்துள்ளனர். பின்னர், இறுதிச் சடங்கில் இந்து நாமம் ஓதி இந்து முறைப்படி ரவிசங்கரை நல்லடக்கம் செய்துள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்களில் பேசிய ரவிசங்கரின் மகன், “நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொருளாதார ரீதியாகப் பல பிரச்னைகளைச் சந்தித்துவருகிறோம். அப்பாவின் இறுதிச்சடங்கிற்கு உறவினர்கள்கூட வரவில்லை. ஆனால், இங்குள்ள இஸ்லாமிய மக்கள் வந்து இறுதிச்சடங்கை செய்து முடித்தனர். பல நெருக்கடியான நேரங்களில், எங்களுக்கு அவர்கள் பல உதவிகளைச் செய்துள்ளனர். இதை என்றுமே எங்களால் மறக்க முடியாது என்றுள்ளார்.