‘சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சத்துக்குக் காப்பீடு!’ – மம்தா அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் இரவு பகல் பாராமல் இந்த வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் 1,071 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 29 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ்

அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக இல்லை. ஒருவருக்கொருவர் என்ற அளவில்தான் இருக்கிறது எனக் கூறப்படுகிறது. நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “மாநிலத்தில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காப்பீட்டுத் திட்டத்துக்கு அரசு அனுமதி அளித்திருந்தது.

மம்தா பானர்ஜி

இந்நிலையில் இந்தக் காப்பீட்டுத் தொகையை 10 லட்சமாக உயர்த்தவுள்ளோம். மேலும் தூய்மைத் தொழிலாளர்கள் மற்றும் அதைச் சார்ந்த பிற தொழிலாளர்களுக்கு இந்தக் காப்பீடு ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். காவல்துறையினரும் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனடைவார்கள்” என்றார்.