கொரோனா அச்சுறுத்தலால் வீடுகளிலேயே முடங்கியிருக்கும் மக்கள் மன அழுத்தம் மற்றும் கொரோனா குறித்த அச்சமின்றி இருக்கத் தேவையான மனநல ஆலோசனைகளைப் பெற நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, மனநல மருத்துவர், உளவியல் ஆலோசகர் உட்பட நான்கு பேரின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டம் மட்டுமன்றி தமிழக மக்கள் யார் வேண்டுமானாலும், இந்த ஆலோசனை மையத்தைத் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இந்த மையம் செயல்படும் விதத்தை அறிந்துகொள்ள அம்மையத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். உரிய முறையில் தகவல் அளித்தார்கள். இதில் பல்நோக்குப் பணியாளராக வேலை செய்யும் அம்பிகா, இந்த மையத்தின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.
“நாமக்கல் மாவட்ட மக்களின் மன அழுத்தம், மனநலப் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு இந்த ஆலோசனை மையம் தொடங்கப்பட்டது. இந்த மையத்தில் மனநல மருத்துவர் உட்பட 8 பேர் பணியாற்றுகிறோம். இது நாமக்கல் அரசுத் தலைமை மருத்துவமனையில் செயல்படுகிறது. தொலைபேசியில் ஆலோசனை வழங்குவது தவிர, தேவைப்பட்டால் எங்களைத் தொடர்புகொள்ளும் மாவட்ட மக்களின் இருப்பிடத்துக்கே சென்றும் சிகிச்சையளிப்போம். சிலரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தும் சிகிச்சையளிப்போம். அவ்வப்போது மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கும் சென்று உதவுவோம். இதுவரை பொதுமக்கள் ஏராளமானோர் எங்கள் மையத்தினால் பயனடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் எங்கள் மையத்தின் மூலம் கொரோனா சூழலில் மக்களுக்கு உதவவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது. கொரோனா குறித்த அச்சத்தாலும் வீட்டிலேயே இருப்பதாலும் பொதுமக்கள் பலரும் இந்தச் சூழலை எதிர்கொள்ளச் சிரமப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, மன அழுத்தம், உளவியல் சிக்கல்கள் மற்றும் கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு இந்த மையத்தைத் தொடர்புகொள்ளலாம். உடனுக்குடன் ஆலோசனை வழங்குவோம்.
வீட்டிலேயே முடங்கியிருக்கும் காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் முறைகள், தேவையற்ற அச்சங்களைத் தவிர்க்கும் விதம், சமூக விலகலின் அவசியம், தனிமைப்படுத்திக்கொள்வது, முன்னெச்சரிக்கை வழிமுறைகள் உட்பட அனைத்து ஆலோசனைகளையும் வழங்குவோம். எனவே, இந்தச் சூழலில் மக்கள் கவலைப்படவோ, அச்சப்படவோ வேண்டாம். கொரோனா சூழலில் மக்களுக்கு எல்லா நேரமும் உதவ விடுப்பு இன்றி எங்கள் மையத்தில் பணியாற்றும் அனைவரும் பணிக்கு வருகிறோம்.

தொலைபேசியில் ஆலோசனை வழங்குவதுடன், எங்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் உதவுகிறோம். நாமக்கல் மாவட்ட மக்கள் தவிர, தமிழக மக்கள் யார் வேண்டுமானாலும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை எங்கள் மையத்தை அணுகி ஆலோசனை பெறலாம்” என்றார்.