‘எல்லோரும் கண்களை மூடுங்கள்… உங்கள் குழந்தைகளின் கண்களையும் சேர்த்து மூடுங்கள்..’ என ஒருவர் குரல் எழுப்புகிறார். சாலையில் அமர்ந்திருக்கும் அந்தக் கூட்டத்தின் மீது தண்ணீர் போன்ற திரவத்தை பைப் மூலம் தெளிக்கின்றனர். எரிச்சல் காரணமாக அந்தத் தண்ணீரோடு மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இணையத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ, உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மார்ச் 24-ம் தேதி இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ’ கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.

Also Read: ‘வீட்டிலேயே இருங்கள்; வாடகையை நாங்கள் தருகிறோம்!’ – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

இதையடுத்து வெளிமாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணமானார்கள். ரயில்சேவை முன்பே நிறுத்தப்பட்டதால் பேருந்து மற்றும் கிடைக்கும் வாகனங்களில் பயணம் செய்யத் தொடங்கினர். மக்கள் தங்கள் இடங்களிலே இருக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியபோதும் தினக்கூலிகள் தங்களது வாழ்வாதாரத்தை எண்ணி சொந்த ஊர்களுக்குப் பயணமானார்கள்.

உத்தரப்பிரதேசம்

தலைநகர் டெல்லியிலிருந்து மக்கள் சாரை சாரையாக தங்களது சொந்த ஊர்களுக்குக் கால்நடையாகப் பயணமானார்கள். இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து அவர்கள் சிறப்புப் பேருந்து மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில்தான் பரேலி பகுதிக்கு வந்த தொழிலாளர்கள் மீது தண்ணீர் போன்ற திரவத்தை ஊற்றியுள்ளனர். எங்கிருந்தோ கஷ்டப்படுவதற்குச் சொந்த ஊருக்குச் சென்றுவிடலாம் என எண்ணி பல சிரமங்களைக் கடந்து வந்த மக்களிடம் மாவட்ட நிர்வாகம் இப்படி நடந்துகொண்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Also Read: 3 மணிநேரத்தில் கொரோனாவை கண்டுபிடிக்கும் கருவி.. `ரியல் ஷீரோ’வான இந்தியப் பெண் மினல் போஸ்லே

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மாவட்ட நிர்வாகம், “ மக்கள் மீது தண்ணீருடன் குளோரின் கலந்து தெளிக்கப்பட்டது. நாங்கள் எந்த கெமிக்கலையும் பயன்படுத்தவில்லை. நாங்கள் இதைத் தெளிக்கும்போதுகூட அனைவரையும் கண்களை மூடிக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தினோம். நாங்கள் மனிதாபிமானமற்றவர்கள் என அர்த்தமல்ல. அனைவரையும் தூய்மைப்படுத்துவது அவசியமானது. நிறைய மக்கள் அங்கிருந்து திரும்பிவந்துள்ளனர். நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்தோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

பிரியங்கா காந்தி

இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச அரசைக் கடுமையாக சாடியுள்ளார். “ இந்தப் பேரழிவுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றாகப் போராடுகிறோம். இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களைச் செய்வதை தயவுசெய்து நிறுத்துங்கள் என இந்த அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்.

தொழிலாளர்கள் ஏற்கெனவே நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர். ரசாயனங்களைக் கொண்டு அவர்களைக் குளிப்பாட்ட வேண்டாம். இது அவர்களைக் காப்பாற்றாது. அவர்களது ஆரோக்கியத்தில் மேலும் அச்சுறுத்தலைத்தான் ஏற்படுத்தும்” எனக் கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.