கொரோனா பாதிப்பால் வீடில்லாத மற்றும் ஆதரவற்ற மக்கள் உணவின்றிப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் பலரும் அன்புக்கரம் நீட்டிவருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள மோர்பட்டியைச் சேர்ந்த பிரேம் குமார், ‘பசியில்லா வடமதுரை’ என்ற குழுவின் மூலம் சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள ஆதரவற்ற மக்களுக்குத் தினமும் உணவுகொடுத்து உதவிவருகிறார். இந்தப் பணியை இடைவிடாமல் தொடர்பவர், தற்போதைய கொரோனா பாதிப்பால் உணவில்லாமல் வாடும் மக்களுக்கும் உணவு, தண்ணீர் ஆகியவற்றைத் தினமும் வழங்கிவருகிறார்.

பிரேம் குமார்

மக்களுக்கு மட்டுமின்றிப் பாதுகாப்புப் பணியிலுள்ள காவல்துறையினருக்கும் தண்ணீர், பிஸ்கட் கொடுத்து ஊக்கப்படுத்திவருகிறார். இந்தப் பணிகளைக் காவல் துறையினரின் அனுமதியுடன் செய்துவருபவரிடம் பேசினோம். மதிய உச்சிவெயில் நேரத்தில் மக்களுக்கு உணவுகள் வழங்கிக்கொண்டிருந்த பணிகளுக்கு இடையே பேசினார்.

“ஒருவேளை உணவுக்கே சிரமப்படும் ஏழைகளுக்கு அன்றாடம் உணவு கொடுக்கிறோம். அந்தப் பணிக்கு, கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிப்பு வந்திடுமோன்னு ரொம்பவே பயந்தேன். இதுபத்தி காவல்துறை அதிகாரிகள்கிட்ட பேசினேன். ‘முறையான பாதுகாப்பு வழிமுறைகளுடன் சாப்பாடு கொடுக்கலாம்’னு சொன்னாங்க. அதன்படி ஆதரவற்ற மக்களுக்குப் போன வாரம் சாப்பாடு கொடுக்கும்போது, ஊரடங்கால் வீடு இருக்கிற ஏழைக் கூலித் தொழிலாளர்கள்கூட சாப்பாட்டுக்கு ரொம்பவே சிரமமா இருக்குனு சொன்னாங்க. மனசு ரொம்பவே வேதனையாகிடுச்சு.

உணவு தானம்

இதுகுறித்து என்னோட ஃபேஸ்புக் பக்கத்துல எழுதினேன். சிலர் உதவி செய்தாங்க. அதவெச்சு கூடுதலா சிலருக்கு உணவு தயாரிச்சு இப்போ சாப்பாட்டுக்குச் சிரமப்படுற மக்களைத் தேடிப்போய் சாப்பாடு, தண்ணீர் பாட்டில் கொடுக்கிறோம். தவிர, அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்கள்கூட கொடுக்கிறோம்.

Also Read: கொரோனா லாக்-டவுன் நேரத்தில் என்னென்ன பொருள்களை ஆன்லைனில் வாங்க முடியும்? சந்தேகங்களும் பதில்களும்…

திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலயும் சிலருக்குத் தினமும் சாப்பாடு கொடுக்கிறோம். அங்க விவரிக்க முடியாத வேதனைகளைத் தினமும் கண்கூடா பார்க்கிறேன். அங்க சில தினங்களுக்கு முன்பு 42 வயசு அக்கா ஒருத்தங்க கன்னமெல்லாம் வீங்கிப்போய் சோகமா இருந்தாங்க. அவங்ககிட்ட ‘சாப்பிட்டீங்களா?’ன்னு கேட்டேன். அவங்க அமைதியாவே இருந்தாங்க.

உணவு தானம்

பலமுறை வலியுறுத்திக் கேட்ட பிறகுதான், ‘என் வூட்டுக்காரர் இறந்துட்டார். சொந்தக்காரங்ககூட யாருமே வரலை. நேத்துல இருந்து இங்கயே தூங்காம இருக்கோம்’னு அழுதுகிட்டே சொன்னவங்களை ஆறுதல்படுத்தி அவங்களுக்கும் அவங்க ரெண்டு பிள்ளைகளுக்கும் சாப்பாடு கொடுத்தோம். இப்படி நல்லா வாழ்ந்தவங்ககூட கொரோனா பாதிப்பால் ஏதாவதொரு வகையில சாப்பாட்டுக்குச் சிரமப்படுற கஷ்டமான சூழலைத் தினமும் பார்க்கிறேன்.

இப்போதைக்கு என் சொந்தப் பணத்தைச் செலவிடுறதில்லை. ‘சாப்பாடு கொடுத்து உதவ யாராச்சும் இயன்ற உதவி செய்ங்க’ன்னு அரிசி உள்ளிட்ட தேவையான சமையல் பொருள்கள் கேட்டு நான் ஃபேஸ்புக்ல எழுதினா உடனே சிலர் அவங்களால முடிஞ்ச உதவியைச் செய்வாங்க. ‘தூய்மைப் பணியாளர்களுக்குக் கொடுக்க உடனடியா 100 மாஸ்க் வேணும்’னு சில தினங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்ல ஒரு பதிவு போட்டேன். ஒரு குட்டிப் பாப்பாவும் அவளின் அப்பாவும் இணைந்து இரவுல தூங்காம மாஸ்க் தயாரிச்சுக் கொடுத்து உதவினாங்க. இப்படி நிறைய நல்ல உள்ளங்கள் உதவுறாங்க.

உணவு தானம்

வழக்கம்போல என் அம்மாவும் மனைவியும் தினமும் சமைச்சுக் கொடுப்பாங்க. அதை எங்க குழுவுக்குனு வாங்கிய ஆம்னி கார்ல பல ஊர்களுக்கும்போய் சாப்பாடு இல்லாதவங்களா பார்த்து அவங்க கையில சாப்பாடு பொட்டலத்தைக் கொடுப்போம். இப்போ தினமும் சராசரியா 150 பேருக்குச் சாப்பாடு கொடுக்கிறோம். இந்த வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு வர நைட்டு 10 மணி ஆகிடும்” என்பவர் காவல்துறையினர் ஒத்துழைப்பு தருவது குறித்துப் பேசினார்.

“சுற்றுவட்டாரப் பகுதி காவல்துறையினருக்கு எங்க குழுவைப் பத்தி நல்லா தெரியும். அதனால, இப்போ சாப்பாடு கொடுக்கப் போகும்போது போலீஸார் தடுக்கிறதில்லை. அறிமுகம் இல்லாத சில காவல்துறையினர் மட்டும் தடுப்பாங்க. அவங்ககிட்ட புரியும்படி சொன்னதும் உடனே அனுமதிச்சுடுவாங்க. காவல் துறை சொன்னதுபோல மூணு பேர் மட்டும்தான் போறோம். மாஸ்க் பயன்படுத்துறதுடன், தினமும் பலமுறை கைகழுவுறோம்.

உணவு தானம்

நாள்முழுக்க நின்னு பாதுகாப்புப் பணியில இருக்கிற காவல்துறையினருக்கு தண்ணீட் பாட்டில், பிஸ்கட் தொடர்ந்து கொடுக்கிறோம். திண்டுக்கல் மாவட்டத்துல சாப்பாட்டுக்குச் சிரமப்படுற நபர்கள் யாராச்சும் இருந்தால் எங்களுக்குத் தகவல் கொடுத்தால், நிலைமை சரியாகும்வரை அவங்களுக்கு இடம்தேடிப்போய் உணவு கொடுக்கத் தயாரா இருக்கோம். நண்பர் முஜித் உட்பட சிலர் என்னுடன் உதவியா இருக்காங்க.

கொரோனா அச்சுறுத்தலால் வீடில்லாத, ஆதவற்ற மக்கள் ஒருவேளை சாப்பாடாவது நிம்மதியா சாப்பிடணும். அதுக்காகத்தான் தினமும் அலைஞ்சு மக்களுக்கு உணவு கொடுக்கிறோம். சாப்பாட்டுக்குச் சிரமப்படும் மக்கள் உடனே எங்க குழுவைத் தொடர்பு கொண்டால் நிச்சயம் உதவி செய்வோம்” என்று உருக்கமாகக் கூறுகிறார் பிரேம் குமார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.