‘கொரோனா’ தற்போது உலகமே அச்சத்துடன் உச்சரித்துக் கொண்டிருக்கும் சொல். சமீபத்தில் இப்படியொரு நெருக்கடி நிலையை உலகம் சந்தித்ததில்லை. இந்நோய் குறித்த அச்சமும் விவாதங்களும் தொடரும் இந்த சூழலில் பிரதமர் மோடி, இந்திய குடிமக்கள் அனைவரையும் நாளை ஒரு நாள் சுய ஊரடங்கு முறையை கடைபிடிக்கச் சொல்லி இருக்கிறார். பெரியவர்களுக்கு இது புரியும் என்றாலும் விடுமுறை என்றாலே வெளியில் சென்று விளையாடும் குழந்தைகளுக்கு உலகின் நடப்பு சூழல் புரிவதில்லை. நம் வீட்டுக் குழந்தைகளை இத்தகைய அசாதாரண சூழலில் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து குழந்தைகள் நலமருத்துவர் அனுராதாவிடம் பேசினோம்…

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன வகையான உணவுகளை கொடுக்க வேண்டும்…?

வீட்டிற்கு வெளியில் கடைகள் மற்றும் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், கீரைகள் இவற்றை அதிகமாக கொடுங்கள். அனைத்தும் வீட்டிற்குள்ளேயே நன்கு சமைத்த உணவாக இருத்தல் அவசியம்.

image

ஒரு நாள் முழுக்க யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனும்போது என்ன மாதிரியான அத்தியாவசிய மருந்துகளை நாம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்…?

முதலில் First Aid Kit ஒன்றை அனைவரும் வீட்டில் வாங்கி வைப்பது அவசியம். பஞ்சு, ஆன்டிபயாடிக் மருந்துகள் மேலும் உங்கள் மருத்துவரின் அறிவுரை படி அடிப்படை மருந்துகளான பாராசிடாமல், சளி காய்ச்சல் டானிக்குகளை வாங்கி கையிருப்பில் வைத்துக் கொள்வது அவசியம். அசாத்திய சூழலில் மட்டுமே மருத்துவனைக்குச் செல்லுங்கள்.

வீட்டிற்குள்ளேயே இருப்பதால் குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட மாட்டார்களா…?

இவ்விஷயத்தை பொருத்தவரை பெற்றோருக்குதான் அதிக அக்கறை தேவை. குழந்தைகளுடன் அமர்ந்து விளையாடுங்கள். வீட்டில் அவர்கள் தனிமையில் இருப்பதை உணராத வண்ணம் நீங்களும் குழந்தைகளாக மாறி உற்சாகமாக அவர்களுடன் நேரம் செலவழியுங்கள். பச்சிளம் குழந்தைகள் மற்றும் குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை அவசர காரணங்கள் தவிர்த்து வேறு எதற்காகவும் மருத்துவமனைக்கு அழைத்து வராதீர்கள். அதுவே நோய் தொற்றுக்கான வாய்ப்பாக அமையலாம்.

image

குழந்தைகளுக்கு சுகாதாரத்தின் தேவை குறித்து எப்படி புரியவைப்பது…?

குழந்தைகளுக்கு நாம் தான் ரோல் மாடல் என்பதை பெற்றோர்கள் மறக்கக் கூடாது., “பாரு கண்ணா கடிகாரத்தில் பெரிய முள் இங்கே வந்தா நாம கை கழுவனும் சரியா…” என்பதுபோல ஒரு சிஸ்டத்தை வீட்டில் உருவாக்குங்கள். அதனை நீங்களும் குழந்தைகளுடன் சேர்ந்து கடைபிடியுங்கள். உங்களை நிச்சயம் குழந்தைகள் பின்பற்றுவார்கள்.

சில குடும்பத்தில் அப்பாக்கள் சிகரெட் பிடித்துவிட்டு வந்து குழந்தைகளை கொஞ்சுகிறார்களே…?

இது ஆபத்து., குழந்தைகளின் சுவாச பிரச்னை மற்றும் அலர்ஜிக்கு இது பாதை வகுத்துக் கொடுக்கும். குழந்தைகள் மேல் அதிக அக்கறை உள்ளவர்கள் கொஞ்ச காலத்திற்கேனும் சிகரெட் புகைப்பதை தவிர்ப்பது நல்லது.

image

தடுப்பூசி போட வேண்டிய தேதி சமீபத்தில் இருப்பின் அவற்றை தவிர்க்க முடியாதே…?

தடுப்பூசிகளை எக்காரணம் கொண்டும் தவிர்க்க முடியாதுதான் என்றாலும் தடுப்பூசி போட குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியில் இருந்து மூன்று வாரங்கள் வரை தள்ளிப் போடலாம். அதனால் எந்த பாதிப்பும் வராது. என்றாலும் முடிந்த மட்டும், போன் கால்கள் மூலம் உங்கள் மருத்துவரை தொடர்பு கொண்டு அறிவுரைகளைப் பெறுங்கள்” எனத் தெரிவித்தார்.

மருத்துவர் சொன்ன இந்த வழிகாட்டுதல்களை நினைவில் கொள்ளுங்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.