சீனாவில் தொடங்கிய, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, தற்போது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில், இதுவரை இந்த நோய்த் தொற்றிற்கு18,907 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை இந்த நோய்த் தொற்றின் காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகி உள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் நோய் பாதிப்பின் காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோன்று, தமிழகத்தில் இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது. அதில் கொரோனா பாதிப்பிற்கு ஒருவர் பலியாகியுள்ளார்.15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதனை தொடர்ந்து தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டன. பின்பு, நாடு முழுவதும் அடுத்த 21 நாள்களுக்கும் மத்திய அரசு `லாக்டவுன்’ செய்து எல்லைகளைச் சீல் வைத்து விட்டன. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ள நிலையில், அதில் இருந்து பாதுகாக்க தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. அதில் குடும்ப அட்டைத் தாரர்களுக்கு தலா 1,000 ரூபாயும், நடைபாதை வியாபாரிகளுக்கு 2,000 ரூபாயும் அறிவித்துள்ளது. மேலும், மற்ற பிரிவினருக்கு நிவாரணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசின் அறிவிப்பு மக்களிடையே ஒருபுறம் வரவேற்கப்பட்டாலும் இதற்கு அப்பால் நிறைய துயரங்களோடு பலர் இருப்பதாகச் சொல்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
தன்னார்வ தொண்டு அமைப்பைச் சேர்ந்த கோமலா என்பவரிடம் பேசினேன், “திருவள்ளூர் மாவட்டம் மோரை கிராம பஞ்சாயத்தில், 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சிக்னலில் பொருள்களை விற்பது, ஆட்டோ ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு தொழிலைச் செய்து வருகிறவர்களே இங்கு வாழ்கின்றனர். இதில், ஒரு பகுதியினர் பிச்சை எடுத்துப் பிழைத்து வருகின்றனர் .
இந்தக் கொரோனா பாதிப்பால் அங்குள்ள மக்கள் வெளியே போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளியே போனால்தான் அவர்களால் ஒருவேளை சப்பாடாவது, முழுமையாகச் சாப்பிட முடியும். ஆனால், இந்த நோய்த் தொற்று, அவர்களை முடக்கிப் போட்டுள்ளது. இவர்களில், பாதிப் பேருக்கு ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு இல்லை. அதனால், ரேஷனிலும் பொருள்கள் வாங்க முடியாத சூழல். தமிழக அரசு தற்போது நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது.

இந்த மக்களையும் கவனத்தில் கொண்டு கூடுதல் நிவாரண உதவியை அறிவித்திருக்கலாம். பணம் படைத்தவர்களுக்கு உதவி செய்யுங்கள். அதேநேரத்தில், தெருவோரத்திலும் வீடு இல்லாதவர்களும், பிச்சை எடுப்பவர்களும் என்ன செய்வார்கள் என்பதை இந்த அரசாங்கம் யோசிக்க வேண்டுமல்லவா?
இந்த மக்கள் வாழ்கிற பஞ்சாயத்து பற்றி அந்தப் பகுதி அதிகாரிகளுக்குத் தெரியாதா. எந்தப் பேரிடர் ஏற்பட்டாலும், எளியவர்களை மட்டும் ஏன் அரசாங்கம் இப்படிப் புறக்கணித்து விடுகிறது. சுகாதாரம், உணவு, போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்த மக்களைத்தானே நோய்த் தொற்று பரவும். அதனால் அவர்களைத்தானே முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மக்களுக்கு என்ன சானிடைசர்களை வழங்கியுள்ளது தமிழக அரசு?
தூய்மை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா… இது எவ்வளவு பெரிய சமூக புறக்கணிப்பு. இனியாவது, இந்த மக்களையும் பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்
Also Read: வெண்டிலேட்டர்கள் தட்டுப்பாடும் கொரோனா
தீவிரமும்! உலக நாடுகளுக்கு இன்னொரு சிக்கல்!

இதைத் தொடர்ந்து மோரை பஞ்சாயத்தில் வினோ நகரைச் சேர்ந்த நடராஜ் என்பவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, “மோரை பஞ்சாயத்துல 50 குடும்பங்களுக்கு மேல இருக்கு. பலதரப்பட்ட தொழிலை செய்யற மக்கள் வாழறோம். பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன்லனு மக்கள் அதிகமாகக் கூடுற இடத்துல வித்தை காட்டிப் பொழப்பை நடத்தவறங்க நாங்க.
மக்கள் வீட்டைவிட்டு வரக் கூடாதுனு, அரசாங்கம் உத்தரவு போட்டதால, ஐஞ்சாறு நாளா வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கோம். அதனால், கையில ஒத்த ரூவா இல்ல, பசங்க பட்டினியா இருக்காங்க. நம்ம புள்ளைங்க நல்லா சாப்புடுற புள்ளைங்க. மூணு வேளையும் நல்லா சாப்பிட்ட புள்ளைங்களுக்கு, ஒருவேளை சாப்பாடுதான் தர முடியுது. பெரியவங்க எப்படினா இருந்துக்கலாம். குழந்தைங்க என்ன செய்வாங்க? ரொம்ப கஷ்டமா இருக்கு. இங்கு இருக்கிற ஒரு சிலருக்கு ரேஷன் கார்டு இருக்கு. அவங்களுக்கு அரிசி கொடுத்தாக்கூட, அவங்ககிட்ட இருந்து கடன் வாங்கி பொங்கலாம். அதுக்கும் அதிகாரிகள் வரல. இன்னும் எத்தனை நாளைக்கு இந்தக் கஷ்டம்னு தெரியல” என்று கலங்கினார்.

இதைத் தொடர்ந்து, மோரை பஞ்சாயத்தில் ஜே.ஜே.நகரைச் சேர்ந்த சுரேஷ் பேசுகையில், “இந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சிக்னலில் பொருள்கள் விற்பவர்கள், பிச்சை எடுப்பவர்கள் என பல்வேறு வகையான தொழில்களைச் செய்துவரும் மக்கள் வாழ்ந்து வாரோம். சென்னைக்கு உள்ளே போனால்தான் எங்க பொழப்பு நடக்கும். ஆனா, இப்போ வீட்டைவிட்டு வெளியே போகக் கூடாது என்பதால, வருமானம் இல்லை. கடந்த நாலைந்து நாளா கையில இருந்த காசை எல்லாம் செலவு பண்ணிட்டோம். இனி, சாப்பாட்டுக்கு என்ன வழினு தெரியல. அரசாங்கம் நிவாரணமும் தரல. இங்குள்ள பகுதிகளில் மருந்தும் தெளிக்கல. வைரஸ் ஒரு பக்கம் பயம்னா, பசி எங்களைக் கொஞ்சம் கொன்னுக்கிட்டு இருக்கு” என்று வருந்தினார்.
இதுகுறித்து வருவாய்த்துறை முதன்மைச் செயலரும் ஆணையருமான ராதாகிருஷ்ணனைத் தொடர்புகொண்டபோது, அவர் நமது அழைப்பை ஏற்காத நிலையில், மோரி கிராம மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் குறித்து, அவருக்கு விரிவான குறுஞ்செய்தி அனுப்பி இருந்தோம். அதற்கு நமக்கு அளித்திருந்த பதிலில், “அந்த மக்களுக்கு உணவு வழங்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடுகிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.

மாநகராட்சி சாலைகளில் மருந்துகளைத் தெளித்தும், மாடி வீடுகளில் உள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி விட்டால் மட்டும், அரசாங்கத்தின் கடமை முடிந்துவிடாது. யாரை முதலில் பாதுகாக்க வேண்டும். எங்கு நோய்த்தொற்று எளிதில் பரவும் என்பதை அரசு அறிந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளன.