தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்தும் நாடு என்றால் அது சீனாதான். கொரோனா வைரஸ் என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உருவானதை வைத்துக்கூட அந்நிய செலவாணியை சம்பாதித்துக்கொண்டிருக்கிறது சீனா. சீனாவின் மத்திய நகரமான வுகானில் கடந்த டிசம்பரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு தொடங்கிய இந்த வைரஸ் பாதிப்பு கிட்டத்தட்ட 200 நாடுகளைக் கலங்கடித்து வருகிறது. ஆரம்பத்தில் கொரோனாவால் விளைவுகளைச் சந்தித்த சீனா, தற்போது அதைத் தனக்கு சாதகமாக அமைத்து வருகிறது.

முகக்கவசம்

உலகளவில் 6,00,000-க்கும் அதிகமானோர் கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய சூழ்நிலையில் உலகமெங்கும் மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள ஒன்று உண்டென்றால் அது சந்தேகத்திற்கிடமின்றி N95 முகக்கவசம்தான். சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ள தருணத்தில் மருந்து நிறுவனமாக 34 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிறுவனம் இப்போது லாபகரமான தொழிலாக முகக்கவசம் உற்பத்தியை மாற்றி பணத்தை சம்பாதித்து வருகிறது.

பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் சீனாவில் கொரோனா வைரஸின் தொற்று உச்சகட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, குவான் சூன்ஸி நிறுவனம் ஏழே நாளில் ஒரு முகக் கவச தொழிற்சாலையை உருவாக்கியது. அவற்றில் N95 முகக்கவச தயாரிப்பு சூடு பிடிக்கத் தொடங்கியது. சுட்டிக்காட்டி விளக்குவதற்கு ஓரிரு நிறுவனம் முகக் கவச உற்பத்தியைத் தொடங்கவில்லை. 8,950 புதிய நிறுவனங்கள் இந்த முகக்கவச உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

Also Read: வேப்பிலை முகக்கவசம், ஆளில்லா நேப்பியர் பாலம்… கிருமி நாசினி தெளிக்கும் தண்ணீர் பீரங்கி! #Day4

குவாங்டாங் மகாணத்தில் டோங்குவான் நகரிலுள்ள முகக்கவச நிறுவனத்தின் விற்பனை மேலாளர் ஸி ஜிங்குய், “முகக்கவசம் தயாரிக்கின்ற எந்திரம், உண்மையான பணம் எந்திரம் போலதான். கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது பல மடங்கு லாபத்தை சம்பாதித்து தருகிறது. 60,000 முதல் 70,000 வரை முகக்கவசங்கள் தயாரிப்பது என்பது பணத்தை அச்சிடுவதற்குச் சமமாக இருக்கிறது” என பிரம்மிக்கிறார்.

கி குவாங்லு என்பவர் டோங்குவான் நகரில் முகக் கவச தயாரிப்பு எந்திர உற்பத்தியில் ஏழு மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறார். “ஒரு எந்திரத்தின் விலை 71,000 டாலர் என விற்று வருகிறேன். கைவசம் இப்போதைக்கு நூற்றுக்கணக்கான ஆர்டர்கள், விநியோகத்துக்காகக் காத்திருக்கிறது. இவற்றின் மதிப்பு 14 மில்லியன் டாலராகும். இவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் ஒவ்வொரு எந்திரமும் அது என்ன விலை கொடுத்து வாங்கப்பட்டதோ அந்த விலையை வெறும் 15 நாளில் சம்பாதித்துக் கொடுத்து வருகிறது” என்கிறார்.

முகக்கவசம்

யு லிக்சின் என்பவர் ஆரம்பத்தில் இந்தத் துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள மிகவும் யோசித்திருக்கிறார். முகக் கவசத்திற்கான தேவைகள் கூடிக்கொண்டே போனபோது 10 நாளில் முடிவு எடுத்து தொழிலைத் தொடங்கியுள்ளார். முகக்கவசங்களைத் தயாரித்து தள்ளும் தானியங்கி எந்திரங்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளார். தினமும் இரண்டு அல்லது மூன்று மணிநேர தூக்கம்தான் அந்தத் தூக்கமும் தொழிற்சாலையில்தான். அந்த அளவிற்கு தன்னை தொழிலில் ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார். ஐரோப்பிய நாடுகளில் மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்து வருகிற இத்தாலிக்கு சீனாவின் குவான் சூன்ஸி நிறுவனத்திலிருந்து N95 முகக்கவசங்கள் ஏற்றுமதியாகிறது. லியாவோ நிறுவனம், ஐரோப்பா மற்றும் கனடாவுக்கு முகக்கவசங்கள் ஏற்றுமதி செய்ய காத்திருக்கிறது.

உள்நாட்டில் தேவை குறைந்துள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழி பிறந்திருப்பதாகவும் அந்த நிறுவனம் சொல்கிறது. சீனாவில் தினந்தோறும் தலா 11.6 கோடி முகக் கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. சீனாவிற்கு இத்தருணம் சாதகமாகவும் லாபகரமாகவும் அமைந்தாலும், இக்கட்டான சூழ்நிலையில் உள்ள இத்தாலி போன்ற நாடுகள் இதனை பெரும் உதவியாக நினைத்து சீனாவிடமிருந்து முகக்கவசங்களை இறக்குமதி செய்துவருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ளதால், முகக் கவசம் உற்பத்தி மூலம் தன்னை லாபகரமான ஏற்றுமதி சந்தையாக மாற்றிக்கொண்டது.

Also Read: `கொரோனா அச்சம்.. அனைவருக்கும் இலவச முகக்கவசம்..!’ – அசத்தும் மதுரை தையல் கலைஞர்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.