வீட்டு வாடகைதாரர்களின் பிரச்னை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,23,716 ஆகவும் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,51,824 ஆகவும் உள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுற்றறிக்கை ஒன்றை மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அனுப்பியுள்ளார். அதில் இடம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களிடம் ஒரு மாதத்திற்கான வாடகையை வீட்டு உரிமையாளர்கள் வாங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
“வருவாய் இன்றி தவிக்கிறோம்.. நேரத்தை அதிகப்படுத்துங்கள்” – ‘டெலிவரி பாய்ஸ்’ வேதனை
மேலும் வீட்டு உரிமையாளர்கள் தம்மிடம் வாடகைக்கு இருக்கும் தொழிலாளர்களையும் மாணவர்களையும் வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பக் கூடாது என்றும் இந்த உத்தரவுகளை மீறினால் அவர்கள் மீது மாநில அரசுகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஊரடங்கை காரணம் காட்டி தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான ஊதியத்தில் நிர்வாகங்கள் எவ்வித பிடித்தமும் செய்யாமல் அப்படியே வழங்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழைகளுக்கு உணவு, இருப்பிட வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“அமெரிக்காவில் 2 வாரங்களில் கொரோனா உயிரிழப்பு உச்சம் தொட வாய்ப்பு”- ட்ரம்ப் அச்சம்
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு பற்றி அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் “தமிழகத்தில் ஒருவர் மட்டும்தான் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஈரோட்டில் 10 பேருக்கும், சென்னையில் 5 பேருக்கும், கரூர் மற்றும் மதுரையில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50லிருந்து 67 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வீட்டு வாடகைதாரர்களின் பிரச்னைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.” எனத் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM