கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் வீடுகளிலேயே மக்கள் முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியில் வர பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துவருகின்றனர். ரயில், பஸ் போக்குவரத்து சேவை மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய மூன்று அவசர காரணங்களுக்காக சென்னையிலிருந்து வெளியூர், வெளிமாநிலங்களுக்குச் செல்பவர்களும் இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து 28.3.2020-ல் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், “கொரோனா நெருக்கடி காரணமாக மிகவும் அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து, பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியில் வருவதைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவசர காரணங்களுக்காகப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு உதவும் வகையில், ஒரு தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறப்பு, திருமணம் அல்லது மருத்துவ அவசர காரணங்களுக்காக பொதுமக்கள், சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்களுக்கிடையோ அல்லது வெளிமாநிலங்களுக்கிடையோ பயணிக்க விரும்பினால், அவர்கள் அவசர கால கட்டுப்பாட்டு அறை எண் 75300 01100 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். இல்லையெனில், இந்த நம்பருக்கு எஸ்.எம்.எஸ், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம். gcpcorona2020@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மேற்படி அவசர காரணங்களுக்காக அனுமதிச் சீட்டு கோருபவர்கள், கோரிக்கை கடிதத்துடன் தேவையான அடையாள ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டு அறையை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது, அவசர தேவைகளுக்கு மட்டுமே தவிர, சாதாரண தேவைகளுக்கல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் இந்த அவசர கட்டுப்பாட்டு அறைக்கு, தினமும் ஏராளமான விண்ணப்பங்கள் வந்தவண்ணம் உள்ளன. எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப் மற்றும் போனில் தொடர்பு கொள்பவர்களின் விண்ணப்பங்களை போலீஸார் பரிசீலித்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர். நேரில் வருவதைத் தவிர்க்கத்தான் ஆன் லைன் மூலம் விண்ணப்பங்களை போலீஸார் பெற்றுவருகின்றனர். விண்ணப்பங்களுக்கு பதில் இல்லை என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தக்கு இன்று ஏராளமானவர்கள் வந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்து சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் வகையில் இடைவெளி விட்டு வரிசையில் பொதுமக்களை போலீஸார் நிற்கவைத்தனர்.

இதையடுத்து, தனிப்படை போலீஸாரிடம் விண்ணப்பங்கள், அடையாள ஆவணங்களைச் சமர்பித்தவர்களுக்கு பரிசீலனைக்குப் பிறகு அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. சொற்ப எண்ணிக்கையிலேயே அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தனிப்படை போலீஸார், “திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய 3 காரணங்களுக்காக மட்டுமே இந்த அனுமதி சீட்டை வழங்கிவருகிறோம். அதற்கான உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது. ஒரு அனுமதிச் சீட்டில் மொத்தம் 4 பேர் செல்லலாம். அனுமதிச் சீட்டில், எந்த இடத்துக்குச் செல்கிறார்கள், தேதி, நேரம், காரின் பதிவு நம்பர், நிறம், டிரைவரின் பெயர், விண்ணப்பித்தவரின் பெயர், முகவரி, செல்போன் நம்பர் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. தினமும் 5,000-த்துக்கும் அதிகமான விண்ணப்பப் படிவங்கள் வருகின்றன. நெருங்கிய ரத்த சொந்தங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது” என்றனர்.
இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் “பொதுமக்கள், அவசரத் தேவைகளுக்காக வெளியூர் செல்வது தொடர்பாக அனுமதிச் சீட்டு பெற இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களின் உண்மைத் தன்மையை விசாரித்த பிறகு அனுமதிச் சீட்டு வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை எளிமைப்படுத்தப்படும்” என்றார்.

மரணம் மற்றும் மருத்துவ காரணத்தைக் குறிப்பிடும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மரணத்தை உறுதிப்படுத்த முகவரியின் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுகிறது. மருத்துவத்துக்கும் திருமணத்துக்கும் அடையாள ஆவணங்கள் சமர்பிக்கப்படுகின்றன. விண்ணப்பித்த சில மணி நேரத்திலேயே அனுமதி அளிக்கப்படுகிறது. நேற்று வரை 5,300 விண்ணப்பங்களில் 45 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனவே, மிகவும் அவசியத் தேவை என்றால் மட்டுமே மக்கள் விண்ணப்பிக்குமாறு போலீஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர். மக்கள் ஒத்துழைத்தால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். அனுமதி பாஸ்களுடன் பயணிப்பவர்களை பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸார் நடுவழியில் பரிசோதனை செய்த பிறகே பயணம் செய்ய அனுமதிக்கின்றனர்.