கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாட்டில் 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டாலும், இதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் அரசு ஊரடங்கைக் கடுமையாக அமல்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் ஒருவரிடத்திலிருந்து இன்னொருவருக்கு எளிதாகப் பரவுகிறது. இதைத் தடுக்கவே அரசு சமூக விலகலை அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும், மக்களிடத்தில் போதிய விழிப்பு உணர்வு இல்லாத காரணத்தினால், துணை ராணுவத்தினரை களத்தில் இறக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதற்கிடையே, சென்னை மக்கள் இறப்பு, திருமணம், மெடிக்கல் போன்ற காரணங்களுக்காக வெளியூர் செல்ல சிறப்பு அனுமதி அளிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போலீஸிடத்தில் அனுமதி பெற்று வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளலாம்.

இந்த அறிவிப்பையடுத்து, சென்னையிலிருந்து வெளியூர் செல்ல அனுமதி வாங்க ஏராளமான மக்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்தனர். சமூக விலகல் அடிப்படையில் அவர்கள் வரிசையில் நின்றனர். ஒவ்வொருவருக்கும் டோக்கன் அளிக்கப்பட்டது. தனிப் பிரிவில் கொடுக்கப்படும் விண்ணப்பத்தில் காரணங்களை நிரப்பிக் கொடுக்க வேண்டும். காரணம் சரியானது என்றால் ஒரு மணி நேரத்தில் அனுமதி கிடைக்கிறது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் என்றால் விண்ணப்பத்துடன் திருமண அழைப்பிதழை இணைக்க வேண்டும்.
திருமணம் நடக்கவுள்ள ஊரிலுள்ள போலீஸார், திருமணம் நடக்கும் மண்டபத்தில் சென்று உண்மையை அறிந்து சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கின்றனர். உண்மையெனில், அனுமதிச் சீட்டு உடனடியாகக் கிடைத்து விடுகிறது. திருமண நிகழ்ச்சிக்கு 10 பேருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதே போல கோவை, மதுரை, திருச்சி, நெல்லை போன்ற பிற மாநகரங்களிலும் கமிஷனர் அலுவலகங்களில் இதே போன்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிற நகரங்களில் மக்கள் எஸ்.பி அலுவலகத்தில் அனுமதி பெற்று முக்கிய நிகழ்வுகளுக்கான அனுமதிச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.
Also Read: `இப்படியொரு தொற்றுநோயை நாம் இதுவரை சந்திக்கவில்லை!’ – முதல்வர் எடப்பாடி பழனிசாமி #corona
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இன்று அனுமதி பெற வந்த முத்துக்குமார் என்பவரிடத்தில் பேசிய போது, ” எனக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் என் குழந்தைகளை அவங்க தாத்தா வீட்டில் விட்டேன். இப்போது, கொரோனா காரணமாக யாரும் வெளியே வரக் கூடாது என்று சொல்லி விட்டதால் அவங்க தாத்தா, பாட்டி இருவரும் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுமதிப்பதில்லை. தாத்தா வீட்டுக்குச் சென்று நல்லா விளையாடலாம்னு போன குழந்தைகள் இந்தத் தடையால் எங்களை ரொம்பவும் மிஸ் செய்கிறார்கள். ‘அம்மாட்ட போகணும்’ என்று அழுது கொண்டே இருக்கிறார்கள். அவர்களைக் கூட்டிட்டு வர ஊருக்குப் போக அனுமதிச் சீட்டு கேட்டு வந்தேன். இதுக்கு தருவாங்களானு தெரியல” என்று ஏக்கத்தோடு சொன்னார்.

ஏப்ரல் 2 ம் தேதி நடைபெறவுள்ள தன் மகளின் திருமணத்துக்கு அனுமதி கேட்டு வந்திருந்த புருஷோத்தமனிடத்தில் பேசிய போது, ”இங்க கியூல நிக்குறதுதான் கஷ்டம். மற்றபடி தனிப் பிரிவு மையத்துக்குள் சென்றால் ஒரு மணி நேரத்தில் வேலை முடிந்து விடுகிறது. என்னோட மகள் கல்யாணத்துக்குப் போக 20 பேருக்கு அனுமதி கேட்டேன். ஆனால், 10 பேருக்குத்தான் அனுமதி கொடுத்தார்கள். அனுமதிச் சீட்டு கேட்டு வருபவர்களையும் போலீஸார் கண்ணியத்துடன் மரியாதையுடன் நடத்துகின்றனர் ” என்று கூறினார்.
ஆனால், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு கியூதான் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், எல்லோருமே ஒரே கியூவில்தான் நின்று அனுமதி பெற வேண்டியுள்ளது.

எல்லாவற்றையும் விட அடுத்தவர்கள் இறப்புக்குச் செல்வதுதான் முக்கியம். இறப்புக்காகச் செல்பவர்களுக்கு உடனடியாக அனுமதி கிடைப்பதும் அவசியம். எனவே, இறப்புக்குச் செல்வோரைக் காத்திருக்கச் செய்யாமல். உடனடியாக அனுமதி கிடைக்கும் வழியில் தனி கியூ அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.