கொரோனா பாதிப்பால் வெகு விமரிசையாக நடைபெறவிருந்த ஓய்வுப் பெற்ற காவல்துறை உதவி – ஆய்வாளர் இல்லத் திருமணம் வெறும் 15 உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள, மணமக்கள் உட்பட அனைவரும் மாஸ்க் அணிந்து எளிமையாக நடந்துள்ளது.

திருமணம்

நாகை மாவட்டம் சீர்காழி நிம்மேலி பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுப் பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் வீரமணி. இவரது மகள் சத்திரலேகாவுக்கும் மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு வர்த்தகச் சங்க துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி மகன் செந்தில்குமார் என்பவருக்கும் திருமணம் செய்வதாக கடந்த பிப்ரவரி 19 -ம் தேதி நிச்சயதார்த்தம் செய்தனர்.

திருமண தோஷம் நீக்கும் வைத்தீஸ்வரன்கோயிலில் உள்ள அங்காரகன் முன்பு திருமணத்தையும் அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் வரவேற்பு மற்றும் விருந்து உபசரிப்பையும் நடத்த உள்ளதாக பத்திரிகை அச்சடித்து உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வழங்கினர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு 14 – ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. வைத்தீஸ்வரன் கோயிலும் பக்தர்களின் வருகைக்கு ரத்து செய்து, பூஜைகள் மட்டுமே வழக்கம்போல் நடைபெற்று வருகின்றன. திருமண மண்டபங்களும் மூடப்பட்டன. ஆனால் குறிப்பிட்ட நாளில் இந்தத் திருமணத்தை நடத்தியே தீரவேண்டுமென இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.

திருமணம்

எனவே, இன்று மணமகன் செந்தில்குமாரின் ஊரான தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகேயுள்ள வயல்வெளியில் அவர்கள் குடும்ப குலதெய்வமான அம்மன் கோயிலில் திருமணத்தை நடத்தினர். இத்திருமணத்திற்கு வருகை தந்த இருவீட்டார் முக்கிய நபர்கள் 15 – லிருந்து 20 நபர்களுக்கு மாஸ்க் வழங்கப்பட்டது. மணமகன் மணமகளும் முகக்கவசம் அணிந்தே திருமணம் செய்துகொண்டனர்.

அரசு அறிவித்த உத்தரவைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதால் கூட்டம் கூடுவதைத் தவிர்த்து, உறவினர்களையும் ஊர்க்காரர்களையும் வரவேண்டாம் என்று சொல்லி சுமார் 20 நபர்களுடன் இந்தத் திருமணத்தை நடத்தியுள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.