“மனிதகுலம் மிகப்பெரிய ஆபத்தை சந்தித்துவருகிறது. நமது தலைமுறையின் ஆகப்பெரும் ஆபத்து கொரோனாதான். மக்களும் அரசாங்கம் எடுக்கவிருக்கும் முடிவுகளுமே இந்த உலகத்துக்கான அடுத்த நம் நாள்களை முடிவுசெய்யப்போகிறது. இங்கு முற்றிலுமாய் சிதைந்து மாறப்போவது மருத்துவம் மட்டுமல்ல, பொருளாதாரமும்தான். பொருளாதாரத்துடன், அரசியல், பழக்கவழக்கம் என எல்லாவற்றிலும் மாற்றம் வரப்போகிறது. நாம் சமயோசிதமாகவும், விரைவாகவும் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. நமது முடிவுகளில் விளைவுகளையும் சிந்திக்க வேண்டிய சூழல் இது. தற்போதைய பிரச்னையைத் தீர்ப்பதோடு நில்லாமல், இந்தப் பேரலை கடந்தபின் இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதையும் நாம் சிந்தித்துப்பார்ப்பது அவசியம்.”

சேப்பியன்ஸ், ஹோமோடியஸ், 21 lessons for 21st Century போன்ற புத்தகங்களின் மூலம் உலகம் முழுக்க பிரபலமான யுவல் நோவா ஹராரியின் ஃபினான்ஷியல் டைம்ஸ் கட்டுரையின் ஆரம்ப வரிகள் இவை.

மார்ச் 20-ம் தேதி இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. மார்ச் 20-ம் தேதி, கொரோனாவால் உலகெங்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,75,550. நீங்கள் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் இக்கட்டுரைக்கான தரவுகள் எழுதும்போது அது 6,14,231. நீங்கள் படிக்கும்போது இன்னும் இது அதிகமாகவே ஆகியிருக்கும். இதை விடத் தெளிவாக கொரோனா எந்த வேகத்தில் பரவிவருகிறது என்பதை விளக்கிவிட முடியாது. இதுவும் உங்களைப் பீதியாக்கவில்லை என்றால், இப்படிச் சொல்கிறேன்.

உலக அளவில் கொரோனா பாதிப்புகள்

26-ம் தேதி இரவு 10 மணிக்கு 5 லட்சத்தைத் தொட்ட எண்ணிக்கை, அடுத்த 4 மணி நேரத்தில் 5 லட்சத்து 25,000 என்று மாறியிருந்தது. சரி, ‘இதனால் கிட்னிக்கு எதுவும் பாதிப்பில்லையே, நாம் சேஃபாகத்தானே இருக்கிறோம்’ எனப் பெருமூச்சு விடுபவர் என்றால், மார்ச் 6-ம் தேதி அமெரிக்காவில் 319 நபர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், இன்று அந்த எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டிவிட்டது. ஒலிம்பிக்தான் தள்ளிவைக்கப்பட்டது, இதிலாவது சீனாவை ஓவர்டேக் செய்ய வேண்டும் என்று ட்ரம்ப் நினைத்திருப்பார் போல.

அமெரிக்காவின் தற்போதைய நிலை!

இப்போது உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக முதலிடம் பிடித்திருக்கிறது அமெரிக்கா.

#FlattenTheCurve-ன் முக்கியத்துவம் குறித்தும் அதில் உலக நாடுகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பது குறித்தும் விரிவாக சமீபத்திய கட்டுரை ஒன்றில் விவரித்திருந்தோம். அதைப் படிக்கவில்லை என்றால் உடனே படித்துவிடுங்கள். கட்டுரை லிங்க் கீழே!

Also Read: `Flatten the curve’ சவால்… இத்தாலியோடு ஒப்பிட்டால் இப்போது இந்தியாவின் நிலை என்ன?! #Corona

அந்தக் கட்டுரையில், இத்தாலியை விடவும் அமெரிக்காவின் நிலைதான் மோசமாகிவருகிறது எனத் தெரிவித்திருந்தோம். இன்று, எண்ணிக்கைகளும் அதையே நிரூபிக்கின்றன. வைரஸ் பரவுதலின் வீரியத்தைப் பார்க்க 0,10,100,1000,10000 என்ற logarithmic Scale-ஐ பொதுவாகப் பயன்படுத்துவோம். அப்படிப் பார்த்தால் இத்தாலியை விட, அமெரிக்காவின் நிலை இப்போது பன்மடங்கு மோசம் என்பது புரியும். ஒரே ஆறுதல் அமெரிக்காவில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதுதான்.

அமெரிக்கா v இத்தாலி

இந்த நிலைகுறித்து சில நாள்களுக்கு முன்பு பேசும்போது அமெரிக்காவின் முன்னாள் FDA ஆணையர், “தென்கொரியா செய்ததை நாங்கள் செய்யத் தவறிவிட்டோம். இத்தாலி ஆகாமல் இருக்க முயல்கிறோம்” என்று கூறியிருந்தார். இன்று இத்தாலியை விடவும் நிலை மோசமாகிவிட்டது. அப்படி தென்கொரியா செய்த எதைச் செய்யத் தவறியது அமெரிக்கா.

தென்கொரியா என்ன செய்தது, அதிலிருந்து நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன என்பதை முதலில் சற்று விரிவாகவே பார்ப்போம்.

கொரோனா விழிப்புணர்வு

பாடம் 1: விரைவாக முடிவெடுங்கள்

ஜனவரி முதல் வார இறுதியில், தென் கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்படுகிறார். அரசு நிர்வாகம் உடனடியாக மருத்துவ நிறுவனங்களுடன் கலந்தாலோசிக்கிறது. கொரோனா வைரஸ் கண்டறியும் கருவிகளை உருவாக்க ஆலோசனை தருகிறார்கள். இரண்டு வாரத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு இலக்கத்தைத் தொடுகிறது. அதே சமயம், ஆயிரக்கணக்கில் நோய் கண்டறியும் கருவிகள் ஷிப்மென்ட் செய்யப்பட்டன. தற்போது 1,00,000 கண்டறியும் கருவிகளைத் தினமும் உருவாக்குகிறார்கள் தென் கொரியர்கள். 17 நாடுகளுக்கு இதை ஏற்றுமதிசெய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். இப்படி முதல் பாதிப்பு வரும்போதே அலெர்ட் ஆனது தென்கொரியா. ஆனால், 1000, 2000 எனப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை போன பின்தான் நடவடிக்கைகள் எடுக்கத்தொடங்குகின்றன பல நாடுகள்.

2. பாதுகாப்பாக அதே சமயம் அதிகமாக சோதனை செய்யுங்கள்

தென் கொரியர்கள் எத்தனை பேரை சோதனை செய்திருக்கிறார்கள் என்று கேட்டால் மலைப்பாக இருக்கும். நமது விமான நிலையங்களிலும், ரயில்வே நிலையங்களிலும் செய்தது போன்ற சோதனை அல்ல. பல லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்ற முழுச் சோதனையைச் செய்திருக்கிறது தென்கொரிய அரசு. சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்காவை விடவும் 40 மடங்கு அதிக சோதனைகள் தென்கொரியாவில் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “சோதனை செய்தால்தான் விரைவில் கண்டறிந்து, அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க முடியும்” என்கிறார், தென் கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர். தென் கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதம் குறைவாக இருக்கவும் இதுதான் காரணம்.

தற்காலிக சோதனை கூடங்கள்!

மருத்துவமனைகளின் கூட்டம் நிரம்பி வழிவதைத் தடுக்க, தற்காலிகமாக 600 புதிய சோதனை மையங்களை உருவாக்கினார்கள். இவை போதாது எனக் கணித்தவர்கள், 50 டிரைவ் இன் மையங்களை உருவாக்கினார்கள். மக்கள் அவர்களது வாகனங்களில் வந்து இந்த டிரைவ் இன் மையங்களில் சோதனை செய்துகொள்ளலாம். 10 நிமிட சோதனைதான். சில மணி நேரத்தில் ரிசல்ட் வந்துவிடும். எல்லாமே இலவசம். ஹோட்டல்கள், அலுவலகங்கள் என எல்லா இடத்திலும், தெர்மல் கேமராக்கள் மூலம் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

3. தனிமைப்படுத்துங்கள், கண்காணியுங்கள்!

கொரோனாவில் இருக்கும் ஆகப்பெரும் பிரச்னை, அது பரவும் வேகம்தான். சாதாரண ஃப்ளூ காய்ச்சல் 1.3 மடங்கு பரவும் என்றால், கொரோனா மூன்று மடங்கு வேகத்தில் பரவும். மனிதர்களின் ப்ரைவசியைக் காட்டிலும் கொரோனா பெரியது என உணர்ந்தே இருந்தனர் தென் கொரியர்கள். சட்டத்தை மாற்றினார்கள். கிரெடிட் கார்டு பில், மொபைல், கார்களில் இருக்கும் ஜிபிஎஸ் எனப் பலவற்றின் மூலமாகக் கண்காணித்தனர். குவாரன்டீன் செய்யப்பட்ட நபர்கள் முகமூடி அணிந்து இருக்கிறார்களா, எந்த வாகனத்தில் செல்கிறார்கள், எங்கே இருந்து எங்கே செல்கிறார்கள் என எல்லாவற்றையும் டெக்னாலஜி மூலம் கண்காணித்தனர். ஒரு மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டால், அந்த மாவட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் அது சார்ந்த செய்திகளுடன் ஒரு வைப்ரேட் மெசேஜ் அனுப்பப்படும்.

செல்ஃப் குவாரன்டீனில் இருக்கும் நபர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே அலெர்ட் பறந்தது. 2,500 டாலர் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. இப்படி, பல்வேறு வழிகளின் மூலம், மருத்துவமனைகள் என்பது தீவிர நோயாளிகளுக்கு மட்டுமே என்பதில் உறுதியாக இருந்தனர்.

4. மக்களின் உதவியை நாடுங்கள்

ஏழை மக்களுக்கு தானம் தென்கொரியா மக்கள்!

Also Read: தடுப்பூசி, மருந்து, தாமதம்… கொரோனா சந்தேகங்களும் விளக்கங்களும்! #LongRead #FightCovid-19

தன் தொகுதியான வாரணாசி மக்களிடம் பேசிய பிரதமர், ‘அடுத்த 21 நாள்களுக்கு ஒவ்வொரு குடும்பமும், 9 ஏழைக் குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தார். மிகவும் நல்ல விஷயம். ஆனால், எல்லோரும் பீதியில் இருக்கும்போது, ஓர் அரசு மக்களிடம் எதிர்பார்க்க வேண்டியது என்ன தெரியுமா? ஒத்துழைப்பு!

தென்கொரியாவில் மருத்துவர்கள் அவ்வளவாக இல்லை. சோதனை செய்வதற்கு மருத்துவப் பணியாளர்களுக்குப் பதிலாக மக்களே அதை ஏற்று நடத்தினார்கள். ஊரடங்கு எனச் சொன்ன பின்னும், ‘கோ கொரோனா கோ’ எனச் சாலைகளில் தட்டுகளைத் தட்டிக்கொண்டு திரியவில்லை. பிரச்னையின் பேராபத்தை உணர்ந்திருந்தார்கள். தொலைக்காட்சிகள், மொபைல்கள், ரயில்வே நிலையங்கள் என எல்லாவற்றிலும் Social Distancing விழிப்புணர்வு பிரசாரங்கள் ஒலித்தன.

சரி. கொரியாவின் அணுகுமுறை அனைவருக்கும் ஒத்துவருமா? இந்தியாவிற்கு ஒத்துவருமா?

இந்தியாவிற்கு ஒத்துவருமா? தென் கொரியாவின் திட்டத்தைப் பிரதியெடுக்க, நமக்குப் பணமோ, டெக்னாலஜியோ அவசியமில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

முதலில் அரசாங்கம் தெளிவாக முடிவெடுக்க வேண்டும். உண்மையான நிலையை மக்களிடத்தே கொண்டுசெல்ல வேண்டும். பேராபத்தின்போது, எல்லாம் கட்டுக்குள் இருக்கிறது என மமதைகொண்டு பேசிவிட்டு, பின் அழுது பயனில்லை. உலக சுகாதார நிலையம் பிப்ரவரி மாதமே, இந்தியா தயாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தும், நாம் இன்னும் மாஸ்க்குகளுக்கு கையேந்திக்கொண்டிருக்கிறோம்.

இரண்டாவது, மக்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வு வேண்டும். ‘மேற்கத்திய நாடுகளைவிடவும், தென் கொரியாவில் மக்கள் அதன் அரசை அதிகம் நம்புகிறார்கள்’ என்கிறது ஓர் ஆய்வு.

சரி, அமெரிக்காவில் என்ன நடக்கிறது?!

ஓர் உலகளாவிய பிரச்னையை அமெரிக்காவும், அதன் அதிபரான ட்ரம்ப்பும் இன்னும் கொஞ்சம் சீரியஸாக அணுகியிருக்கலாம் என்கிறார்கள் அனைவரும்.

முதலில் ஃப்ளூவுக்கே எத்தனையோ பேர் சாகிறார்கள், கொரோனா எல்லாம் பெரிய பிரச்னை இல்லை என்றார். சீனா மெல்ல சிரித்திருக்கும் அப்போது. இத்தாலியின் நிலையைப் பார்த்தாவது முடிவுகள் எடுத்திருக்கலாம். ‘ம்ம்ம், பார்ப்போம்’ என்பதாகவே இருந்தது அவரது நிலைப்பாடு. சட்டென, ‘கடவுளே அமெரிக்காவைக் காப்பாற்று’ என்றார். சரி, ட்ரம்ப்புக்கு ஞானோதயம் வந்துவிட்டது என நினைத்தால், ‘வாய்ப்பில்ல ராஜா’ என்பதாகவே இருந்தது அடுத்தடுத்த நடவடிக்கைகள்.

Just a month back. #Trump.

Posted by Karthi Keyan on Friday, March 27, 2020

Also Read: கொரோனாவை சமாளிக்கும் கியூபா சுகாதாரத்துறையின் சிறப்பம்சங்கள் என்ன?

ஐரோப்பிய யூனிய தேசங்களை மொத்தமாய் காவுகொடுக்கத் தொடங்கியபோதும், தன் கூட்டாளிகளின் நிலை பற்றி கவலைகொள்ளாமல் அமைதியாக இருந்தார் ட்ரம்ப். ஜெர்மனியில் கொரோனாவுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதாகச் செய்திகள் வர, அது தங்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக வேண்டும் எனவும், அதற்கு 1 பில்லியன் டாலர்கள் தர அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. அப்போதே ‘பயப்படுறியா குமாரு’ நிலைக்கு வந்தது அமெரிக்கா. சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் ட்ரம்ப் பேசிய வீடியோதான் தற்போதைய வைரல். “15 பேர் மட்டுமே அமெரிக்காவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நமது மருத்துவத்துறை மிகவும் மேம்பட்டது என்பதால், இந்த 15 என்பது மெல்ல மெல்ல குறைந்து பூஜ்ஜியம் என்றாகிவிடும்” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார். நீங்கள் இந்த வீடியோவைப் பார்க்கும் போது, அமெரிக்காவின் நோயாளிகள் எண்ணிக்கையை கமென்ட்டில் பதிவு செய்யவும். பதிவிடப்படும் பதில்களுக்கிடையே வித்தியாசம் கூடிக்கொண்டே இருக்கக்கூடாதென வேண்டிக்கொள்கிறோம்.

‘சைனீஸ் வைரஸ்’ என்று மட்டுமே கூறுவேன் எனச் சொல்லிக்கொண்டிருந்தவர் நேற்று திடீரென, சீன அதிபருடன் பேசினேன். அவர்கள் கொரோனா வைரஸ் பற்றி நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து இதில் பணியாற்ற இருக்கிறோம் எனத் திருவாய் மலர்ந்திருக்கிறார். இதிலிருந்தே கொரோனாவின் தீவிரத்தை நாம் உணர முடியும்.

நியூயார்க்கின் மோசமான நிலை

கொரோனாவால் அமெரிக்காவில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது நியூயார்க். மார்ச் 4-ம் தேதி, நியூயார்க்கில் ஒரே ஒரு நபர்தான் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது நியூயார்க்கின் நோயாளிகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை நெருங்கவிருக்கிறது. டொனால்டு ட்ரம்பின் மெத்தனப் பேச்சுக்களுக்கிடையே, நாம் கவனிக்க வேண்டியது நியூயார்க் நகரத்தின் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ. 60 வயதைக் கடந்த நபர்களில் ஒருவர், தற்போது அமெரிக்காவின் தலைப்புச் செய்தி இவர்தான். நியூயார்க்கில் நோயாளிகள் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தற்போது வரை நியூயார்க்கில் சுமார் 600 பேர் இறந்திருக்கிறார்கள். 47,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்ட்ரூ குவோமாவின் தந்தை மேரியோ குவோமோவும், நியூயார்க்கிற்கு மூன்று முறை கவர்னராக இருந்தவர். தேசம் முழுக்க இருக்கும் வீடற்றவர்களுக்கு வீடு வேண்டும் எனப் போராடியவர் அவர்.

Andrew Cuomo | ஆண்டிரூ குவோமோ

டெக்சாஸ் மாகாணத்தின் டான் பாட்ரிக், ‘வயதானவர்கள் இளைஞர்களுக்காகத் தியாகம் செய்ய வேண்டும்’ எனப் பேசிய போதும்; ட்ரம்ப் “ஈஸ்டருக்குள் எல்லா மக்களையும் ஒன்றிணைப்போம்” என்று உளறியபோதும், தனித்து நின்றார் ஆண்ட்ரூ குவோமோ. “என் தாய் இழக்கத்தக்கவர் அல்லவே” என்றார். “ஒரு மனிதனின் வாழ்வின்மீது நாம் விலையைத் தீர்மானிக்க முடியாது. சரியானதைச் செய்யுங்கள்”. 2015ல் இறந்த தன் தந்தையை நினைவுகூர்ந்து, இத்தனை வீழ்ச்சிக்குப் பிறகும், “அவர் இப்போது இங்கு உயிரோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், என்னோடு இங்குதான் இருக்கிறார்” என உருகினார். ஆனால், இவரது ஒற்றைக் குரலுக்கு சரியான பதில் கிடைக்கப்பெறவே இல்லை.

30,000, 40,000 வெண்டிலேட்டர்கள் எல்லாம் தேவைப்படாது. சிலர் சற்று அதீதமாகக் கற்பனைசெய்துகொள்கிறார்கள் என ட்ரம்ப் இந்தச் சூழலில் நக்கலடித்தார். அப்போதும் “நான் சிலரைப் போல் யார் என்ன சொல்கிறார்கள் எனக் கேட்டு நடப்பவன் அல்ல. நான் உண்மையை நம்புகிறேன். நான் டேட்டாவை நம்புகிறேன்” என்றார் திடமாக. “ஒரே இரவில் இயற்கை ஏதேனும் அற்புதம் செய்து, இந்த வைரஸை அழித்துவிடும் என்றெல்லாம் நானும் யோசித்திருக்கிறேன். ஆனால், அது என் நம்பிக்கை, எண்ணம், அவ்வளவே” என்று சூடாகப் பதிலளித்தார்.

நேற்று இரவு ட்ரம்ப் போட்ட ட்வீட் என்ன தெரியுமா… “ஜெனரல் மோட்டார்ஸும், ஃபோர்டும் வேகமாக, படு வேகமாக வெண்டிலேட்டர்களைத் தயாரிக்க வேண்டும்” என்பதுதான். அதையும் தவறான ஜெனரல் மோட்டார்ஸின் ஐடியை டேக் செய்திருந்தார். வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல நம்மூரிலும் சிலரின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கிறது. ரோம் நகரம் எரிந்தபோது, ஃபிடில் வாசித்த நீரோ போல், இன்று காலை ‘நான் வீட்டில் ராமாயணம் பார்க்கிறேன், நீங்கள்?’ எனக் கேட்டிருக்கிறார் நம்ம ஊர் மத்திய அமைச்சர் ஒருவர்.

டொனால்டு டிரம்ப்

எபோலா தொற்றைப் பற்றி, சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு காணொளியில் பேசிய பெருந்தொற்று நோயியலாளர் லீனா மோசஸ், “இந்த வைரஸின் ஆகப்பெரும் பலம், அது நம் அன்பின் மூலம் பல்கிப் பெருகும். பாதிக்கப்பட்ட மனிதனைப் பார்த்துக்கொள்ள நினைக்கும் அத்தனை பேரின் மூலமாகவும் பரவி அவர்களையும் கொல்லும். இதை மனிதன் புரிந்துகொள்ள ஆரம்பித்ததும், பாதிக்கப்பட்ட தன் சக இருதயரை விட்டு விலகுவான். நம் கண் முன்னர், நாம் நேசித்த நபர் இறந்துபோவார். இந்த வைரஸின் வீரியம் இவ்வாறு மட்டுமே குறையும்” என்று அழுதுகொண்டே பேசியிருந்தார். இப்போதைய சூழல் அதைவிட மோசமானது. உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு நபருக்கு கொரோனா வந்துவிட்டால், அவரை உங்களிடம் இருந்து தனிமைப்படுத்தி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வர். ஒருவேளை, அவர் குணமாகவில்லை என்றால், அவரை நீங்கள் கடைசியாகப் பார்த்ததும், அவர் உங்களைக் கடைசியாகப் பார்த்ததும் அந்த நொடியாகத்தான் இருக்கும்.

இத்தாலியில், தற்போது வரை 51 மருத்துவர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் பார்த்ததால் இறந்துள்ளார்கள் என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இத்தாலியைச் சேர்ந்த 34 வயதான செவிலியர், தனக்குக் கொரோனா தொற்று இருப்பது தெரிந்தபின், உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். தன்னால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்களோ எனப் புலம்பியிருக்கிறார். அவர் கடைசியாக விட்டுச்சென்ற செய்தி ‘தற்கொலை கோழைத்தனமானது, முட்டாள்தனமானது என வாதிடும் நபர்தான் நானும். ஆனால், தினமும் நம் கண் முன், நாம் காப்பாற்றப் போராடும் ஒவ்வொரு உயிரும் வாழைமரமாய் சாயும்போது, அது தரும் மன உளைச்சல் சொல்லி மாளாதது’ என்பதுதான்.

ஸ்பெயினில் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை எனத் திட்டித் தீர்க்கிறார்கள். இந்தியாவில் இன்னும் மாஸ்க் தட்டுப்பாடு, பாதுகாப்பு உபகரணங்கள் தட்டுப்பாடு எனப் பேசிக்கொண்டிருக்கிறோம். நாம் ராணுவத்துக்கு ஒவ்வோர் ஆண்டும் செலவுசெய்யும் தொகையையும், மருத்துவத்துக்கு செலவு செய்யும் தொகையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே சில விஷயங்கள் புரியும். கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸுடன் எந்தவித ஆயுதங்களும் இன்றி மருத்துவ நண்பர்களையும் அனுப்பிக்கொண்டிருக்கிறோம். சவக்குழிகள் என்று தெரிந்தும், அவர்களும் நோயாளிகளைக் காக்கப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தாலி மருத்துவர்கள்!

இப்படி உலகம் போராடிக்கொண்டிருக்க, ட்ரம்ப் போன்ற கோமாளி ஒருவரிடம் அதிகாரம் இருப்பதால், புதைகுழியில் சிக்கித்தவித்துவருகிறது அமெரிக்கா. மற்ற நேரங்களில் பரவாயில்லை, இதுபோன்ற நேரங்கள் உண்மையான தலைமைப் பண்புகளுக்கான செக். சும்மா வாய் சவடால்கள் மூலம் அவற்றைக் கடந்துவிட முடியாது. ஆனால், இப்படியான இக்கட்டான நேரத்தில் உலகம் ட்ரம்ப் போன்ற தலைவர்களால் நிரம்பியிருப்பது சோகம்.

இந்தியாவில் என்ன நிலை?

அமெரிக்கா, இத்தாலி, சீனா என உங்களுக்கு கணக்கு சொல்லி என்ன ஆகப்போகிறது. இந்தியாவில், அவ்வளவு ஏன் தமிழகத்தில், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரியில் இன்று மூன்று பேர் இறந்திருக்கிறார்கள். மூவருக்கும் இன்னும் கொரோனா முடிவு வரவில்லை என்கிறது தமிழக அரசு. 66 வயதான நபருக்கு சிறுநீரகப் பழுது, 24 வயது நபருக்கு நியூமோனியா, 2 வயது சிசுவுக்கு ஆஸ்டியோபெட்ரோசிஸ். மூவரும் நேற்று (மார்ச் 28) காலை இறந்துவிட்டார்கள் என அறிவித்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை நபர்களை இப்படி வேறு வேறு நோய்களின் பெயரில் பலி கொடுக்கப்போகிறோமோ!?

இந்தியாவில் என்ன நிலை:

எண்ணிக்கைகளை வைத்து பார்த்தாலும் பரவுதலின் வேகம் அதிகமாவதாகவே தெரிகிறது. இந்த 21 நாள் ஊரடங்குதான் நமக்கான ஒரே நம்பிக்கை. இதுவும் சரிவர செயல்படுத்தப்படவில்லை எனில், இந்தியா அடுத்தடுத்த வாரங்களில் இன்னும் அதிக பாதிப்புகளைக் காணும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.