நாடு முழுவதும் கொரோனா அச்சத்தால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால் வாழ வழியில்லாத ஏழை எளிய மக்கள் வேலை செய்யும் மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து சொந்த ஊர்களுக்குப் பொடிநடையாகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியிலிருந்து புலம்பெயர்ந்த வேறு பகுதிகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் அல்லது வேறு மாநிலத்திலிருந்து டெல்லிக்கு திரும்பும் மக்கள் ஒரே இடத்திலேயே தங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர், “நீங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம். பள்ளி கட்டடங்களில் தூக்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். முழு அரங்கமும் இதற்காக காலியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும் பல சமூக சமையலறைகள் அமைத்து அதன் மூலம் தேவைப்படுபவர்களுக்கு உணவளிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது என்றும் அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதிக மக்கள் இந்த மாநிலத்தில் இருந்து தங்கள் சொந்த பகுதிக்கு திரும்பிச் செல்கின்றனர். அவர்களிடம் கரங்களைக் கூப்பி நான் முறையிட விரும்புகிறேன். பிரதமர் ஊரடங்கை அறிவித்தபோது, ‘ தயவுசெய்து நீங்கள் எங்கிருந்தாலும் அங்கேயே தங்கியிருங்கள்’ என்று கூறினார். இது ஊரடங்கு உத்தரவின் மந்திரம். இதை நாம் பின்பற்றவில்லை என்றால் , கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் , நமது நாடு தோல்வியடையும். ஆகவே டெல்லியிலிருந்து புலம்பெயராமல் வீட்டிலேயே இருங்கள். அப்படி உள்ளவர்கள் வாடகையை நானே தருவேன். அவர்களின் வாடகையை அரசே செலுத்தும். ஆகவே வீட்டு உரிமையாளர்கள் அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் ”என்று அறிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM