கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் வீரியம் கூடிக்கொண்டே போவதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திருச்சியில், ஏற்கனவே துபாயில் இருந்து வந்த ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரோபோ

மேலும், தற்போது சென்னையில் இருந்து கடந்த 22-ம் தேதி திருச்சி வந்த திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சேர்ந்த 39 வயது இளைஞருக்கும் வைரஸ் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 5 பேர் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அனைவரும் சிகிச்சையின் பலனாய் உடல்நலன் முன்னேற்றம் பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், திருச்சியில் உள்ள புரபெல்லர் டெக்னாலஜிஸ் எனும் தனியார் நிறுவனம் தான் தயாரித்துள்ள ரோபோக்களை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு, இலவசமாக வழங்கிட முன்வந்துள்ளது.

பறக்கும் கேமரா மற்றும் ரோபோக்களை தயாரித்து வரும் இந்த நிறுவனம், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்குப் பயன்படுத்தும் வகையில், ஜாபி எனும் ரோபோவை தயாரித்து, அவற்றை இலவசமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கத் தயார் என்றும், அந்த ரோபோக்களை, தற்போது, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அரசு, மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு, மருந்து பொருட்களை வழங்குவதற்குப் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்தது.

வாய்ஸ் இன்ட்ராக்டிவ் தொழில் நுட்பம் மற்றும் மொபைல் மூலமாக கண்ட்ரோல் செய்யப்படும் மனித வடிவிலான இந்த ரோபோக்கள், டாக்டர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரோபோ

ஜாபி மெடிக் ரோவர் வகையான ரோபோ, 20 கிலோ எடையைச் சுமந்து கொண்டு சுமார் ஒரு கிமீ தூரம்வரை ரேடியோ கண்ட்ரோல் மூலம் இதனை இயக்க முடியும்.. இந்த ரோபோக்களை பயன்படுத்தி தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் வீடுகளுக்கு உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொடுத்து அனுப்ப முடியும்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அறையில் கிருமி நாசினி தெளிக்கவும் பயன்படுத்தலாம். தற்போது, 9 ஜாபி வகை ரோபோவும் ஒரு ஜாபி மெடிக் ரோவர் வகையான ரோபோவும் தயார் நிலையில் உள்ளது.

இந்த ரோபோக்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஏகநாதன் மருத்துவமனையில் ரோபோ நோயாளிகளிடம் சென்று தண்ணீர் கொடுப்பது போன்று சோதனை செய்தனர்.

Also Read: மலேசியாவில் தவிக்கும் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தமிழர்!

இதுகுறித்து பொறியாளர் குருமூர்த்தி, எங்களின் சோதனை முயற்சி திருப்திகரமாக இருந்தது. தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பயனுள்ள வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் எங்கள் ரோபோ முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும்” என்றார்.

இந்தவகையான ரோபோக்களை, ஏற்கனவே, கொரோனா வைரஸ் தொற்று பாதித்த சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்கப் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.