கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், உணவுப் பொருட்களைக் கொடுக்கும் வகையில் இளைஞர்கள் வடிவமைத்த ரோபோக்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்படவுள்ளன.
திருச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பொறியியல் பட்டதாரிகள், பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் வகையில் ரோபோக்களை வடிவமைத்தனர். இந்த ரோபோக்களை தற்போது கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் அவர்கள் மாற்றியமைத்துள்ளனர். கொரோனா நோயாளிகளை நேரடியாக மருத்துவர்கள் அணுகுவதைத் தவிர்க்கும் வகையில், அவர்களுக்குத் தேவையான மருந்து மற்றும் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லும் வகையில் இந்த ரோபோக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்குச் சென்று தேவையான பொருட்களை வழங்குவதற்கும் பயன்படுத்தலாம் என இளைஞர்கள் யோசனை தெரிவித்திருந்தனர். இது குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில், ரோபோக்களை பயன்படுத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து இளைஞர்கள் தயார் நிலையில் வைத்திருந்த 10 ரோபோக்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றை நோயாளிகளுக்குப் பொருட்கள் அளிக்கப் பயன்படுத்தவுள்ளதாக மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM