புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் 35 வயது இருக்கும் பார்வைக்குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி பெண் நிறைமாத கர்ப்பிணியாக நீண்ட நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து இருக்க, சாப்பாடு தண்ணீரின்றி இருப்பதைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் அந்தப் பெண்ணிடம் விசாரிக்கிறார். முதலில் பேசத் தயங்கியவர், சிறிது நேரம் கழித்து, “இங்குள்ள பார்வையற்றோர் பள்ளிக்கு என்னை அழைத்துச் செல்ல முடியுமா” என்று கேட்க, உடனே தனது ஆட்டோவில் அங்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். அங்கிருந்தவர்களிடம் தன் நிலை குறித்துக் கூற, பள்ளி நிர்வாகத்தினர், இளைஞர்கள் ஒன்று சேர்ந்து செயல்படும் துணைவன் என்ற அமைப்பினருக்கு இதுபற்றி தகவல் கொடுத்தனர். உடனே, அங்கு வந்த துணைவன் அமைப்பினர், மற்றும் மாதர் சங்க பெண்கள், அந்தப் பெண்ணை மீட்டு 3 வாரங்கள் தொடர் சிகிச்சை அளித்து, காவல்துறையினர் உதவியுடன் பாதுகாப்பான காப்பகம் ஒன்றில் சேர்த்துள்ளனர்.

மீட்கப்பட்ட சாவித்திரி

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண்ணுக்கு, இளைஞர்கள் தங்கள் உறவினர்களை வரவழைத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி அந்தப் பெண்ணை நெகிழ வைத்துள்ளனர்.

இதுபற்றி துணைவன் அமைப்பினரிடம் பேசினோம், “பார்வைக் குறைபாடு உள்ள கர்ப்பிணிப் பெண், எங்க போறதுன்னு தெரியாம குழம்பிப் போய் இருக்காங்ன்னு அவங்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு கேட்டாங்க. உடனே ஓடி வந்தோம். அந்தப்பொண்ணுக்கு கொஞ்சம் மனநிலை பாதிச்ச மாதிரி தெரிஞ்சிச்சு. உடனே மனநல மருத்துவருக்குத் தகவல் கொடுத்தோம். மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் சார் உடனே சிகிச்சை கொடுத்தாரு. ரொம்ப நாளு சாப்பிடாம இருந்தது போல, சோர்வடைந்து போய் இருந்தாங்க.

உடனே, அரசு மருத்துவமனைக்கு கூட்டிக்கிட்டு போய் அட்மிட் பண்ணினோம். நாங்க எல்லாரும் மாத்தி, மாத்தி பார்த்துக்கிட்டோம். அதற்கப்புறம் மெல்ல பேச்சுக்கொடுத்தோம். முழு விபரத்தையும் தெரிஞ்சிக்க ஒருவாரம் ஆகிருச்சு. பெயர் சாவித்திரி (34). திருப்பூர் மாவட்டம் தாராபுரம்தான் சொந்த ஊருன்னு தெரியவந்துச்சு. அவங்க அப்பா, அம்மா இறந்துட்டாங்க. கணவர் பெயரு செல்வராஜ், காதலிச்சுதான் திருமணம் செஞ்சிருக்காரு. 7 வருஷ வாழ்க்கையில இப்பதான் முதல் பிரசவம் ஆகப்போகுது. அன்னைக்கு வழக்கமா ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிற மாதிரியான பிரச்சினைதான், சாவித்திரி வீட்டுலயும் நடந்திருக்கு. எப்பவும் திட்டுவாரு. ஆனா, அன்னைக்கு என்னை கை நீட்டி அடிச்சிட்டாரு. அதனாலதான் கோபப்பட்டு வீட்டைவிட்டு வெளியே வந்துட்டேன்னு சொன்னாங்க.

சாவித்திரி

புதுக்கோட்டைக்கு வழிதவறி வந்த கதை அப்பத்தான் எங்களுக்கு தெரிஞ்சது. மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கூட்டிக்கிட்டு வந்துட்டோம். காப்பகத்தில் சேர்க்க காவல்துறை அதிகாரிகள்கிட்ட உதவி கேட்டோம். அவங்களும் பல இடங்கள்ல முயற்சி செஞ்சாங்க. ஆனா, கர்ப்பிணிப் பெண்ணுக்கு எங்கயும் இடமில்லைன்னு சொல்லிட்டாங்க. அதற்கப்புறம்தான் என்ன நடந்தாலும் பரவாயில்லை. எங்க வீட்டிலேயே வச்சு பார்த்துக்குவோம்னு முடிவெடுத்தோம். அப்பறம்தான் எஸ்.பி-கிட்ட உதவி கேட்கலாம்னு ஐடியா வந்துச்சு. புதுக்கோட்டை எஸ்.பி-கிட்ட இந்தத் தகவலை எடுத்துக்கிட்டுப் போனோம். அவர் கந்தர்வக்கோட்டையில ஒரு காப்பகத்தை எங்களுக்கு கைகாட்டி விட்டாரு. அவங்களும் உடனே சேர்த்துக்கிட்டாங்க.

இப்போ அங்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்காங்க. அவங்களுக்கு அப்பாவும் அம்மாவும் இல்லை. இப்போ கணவரும் பக்கத்துல இல்லை. நிறைமாத கர்ப்பிணி. வளைகாப்பு நடத்தணும். சாவித்திரியை எங்க சகோதரியாக நெனச்சுதான் நாங்க எல்லாம் சேர்ந்து வளைகாப்பு விழா நடத்துனோம். செல்வராஜ்க்கு நல்லாவே கண்ணு தெரியும். காதலிச்சுதான் கல்யாணம் பண்ணியிருக்காரு. எப்படியாவது இந்தப் பிரச்னையை சரிசெய்து, சாவித்திரியைக் கணவரோடு சேர்த்து வைக்கணும். நண்பர்கள் குழுவை ஒருங்கிணைத்து இப்போ அவங்க கணவரைத் தேடிக்கிட்டு இருக்கோம்.

வளைகாப்பு

நல்லபடியா குழந்தை பொறக்கணும். ரெண்டு பேரும் மீண்டும் ஒண்ணு சேர்ந்து வாழணும் இதுதான் எங்களுடைய ஆசை” என்கின்றனர்.

இதுபற்றி சாவித்திரியிடம் கேட்டபோது, “எனக்கு தாய், தந்தை இல்லாத குறையை இவங்க எல்லாரும் போக்கிட்டாங்க. பிள்ளையை நல்லபடியா பெத்து எடுக்கணும். இப்போதைக்கு எனக்கு வேற எந்த ஆசையும் இல்லை. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று கூறியவரிடம் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை. மாறாக, கண்களில் கண்ணீர்த் துளிகள் கசியத் துவங்கியது. அது விரக்தியில் வெளிப்பட்ட கண்ணீர் இல்லை ஆனந்தக் கண்ணீர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.