பட்டுக்கோட்டையை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவமனைகள் அமைக்க தனக்கு சொந்தமான சுமார் 20 ஏக்கர் இடத்தை அரசு பயன்படுத்தி கொள்ள கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும், கொரோனா பிரச்னை தீர எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை அதுவரை என் இடத்தை பயன்படுத்தி கொள்ளாலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.

ராஜேந்திரன்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பவர் ராஜேந்திரன். பட்டுகோடை அருகே உள்ள மாளியக்காடு கிராமத்தை சேர்ந்த இவர் தமிழக முதல்வர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, “உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவை மிரட்டி வருகிறது. இதனை நாம் எதிர்கொண்டு விரட்டியடிக்க மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைகளை பின்பற்றி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளனர். கொரோனா பரவாமல் இருக்க அவர்கள் தனிமைப்படுத்தபட்டு சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீதம் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கொரோனோ சிகிச்சையளிக்கபடும் மருத்துவமனைகளில் இதர சிகிச்சைக்காக செல்பவர்கள் அச்சமடைய வாய்ப்புகள் உண்டு. எனவே கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனியாக சிறப்பு மருத்துவமனைகளை ஏற்படுத்த வேண்டும்.

சிறப்பு மருத்துவமனைகளை ஏற்படுத்துவதற்காக பட்டுக்கோட்டை அருகே மாளியக்காடு கிராமத்தில் உள்ள எங்களது சொந்த நிலம் 10 ஏக்கரையும், கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் உள்ள எங்களது 10 ஏக்கர் நிலத்தை கொரோனாவிற்கான சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தி கொள்ள கொள்ள வேண்டும் அதற்கு நாங்க தயாராக உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

கடிதம்

இது குறித்து பட்டுக்கோட்டை ராஜேந்திரனிடம் பேசினோம், “இப்போது நமக்கெல்லாம் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது கொரோனா. இதனை சாதி, மதம், இனம், அரசியல் கடந்து முறியடிக்க வேண்டும். இந்த நிலையில் பட்டுக்கோட்டையில் உள்ள எங்களுக்கு சொந்தமான 10 ஏக்கர், கும்பகோணம் பகுதியில் டிரஸ்ட் பெயரில் எங்க கட்டுப்பாட்டில் உள்ள 10 ஏக்கர் நிலம் என மொத்தம் இருபது ஏக்கர் நிலத்தை கொரோனா சிகிச்சை தற்காலிக மருத்துவமனைகள் அமைப்பதற்கு தர தயாராக இருக்கிறோம். எப்போது கொரோனா பிரச்னை தீருகிறதோ அதுவரை எங்க இடத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடம் என எவ்வளவு காலங்கள் ஆனாலும் பரவாயில்லை. அரசியலுக்காக இதை செய்யவில்லை மனித அன்புக்காக செய்கிறேன். பட்டுக்கோட்டை அருகே உள்ள இடம் தனிமையான பகுதியில், நல்ல இயற்கை அமைப்புகள் சூழ, தண்னீர் வசதியுடன் கூடியது. இது போன்ற இடங்களில் கொரோனாவிற்கான சிகிச்சையை அளித்தால் சீக்கிரமே கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்பது என் எண்ணம். எனவே எங்கள் இடத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் என கடிதம் அனுப்பியிருக்கிறோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.