பிரதமர் ஊரடங்கு அறிவிப்பதற்கு முன், எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் கேரள மாநிலத்தில் மதுபானக் கடைகளை மூட மட்டும் மறுத்துவிட்டார் முதல்வர் பினராயி விஜயன். மதுபான விற்பனை அத்தியாவசிய சேவைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் பதிவிட்டிருந்த ட்வீட் ஒன்றையும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்த பிறகு, மதுக்கடைகளை மூடும் முடிவுக்கு வந்தார் பினராயி விஜயன். முதலில் அவர் மதுக்கடைகளை மூட மறுத்ததற்கு அது அத்தியாவசிய பொருளில் வருவது மட்டுமே காரணமல்ல, வேறு சில காரணங்களும் இருந்தன என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
மது விற்பனையில் கேரளாவின் வருமானம்?

இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானம் பீர் மற்றும் ஒயின் ஆகியவற்றைப் பொதுத்துறை நிறுவனமான பெவரேஜ் மூலம் கேரள அரசு, அந்த மாநிலத்திலுள்ள 14 மாவட்டங்களில் 330 சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் மது விற்பனை செய்துவருகிறது. இதுதவிர, நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களின் உச்ச அமைப்பான ‘கன்ஸ்யூமர்ஃபெட்’ கேரளாவில் 36 வெளிநாட்டு மதுபான சில்லறை விற்பனை நிலையங்களையும் மூன்று பீர் கடைகளையும் நடத்தி வருகிறது. கூடுதலாக 3,500 பனைமர கள் கடைகள் இந்த மாநிலத்தில் உள்ளன. கடந்த 2018-19-ம் ஆண்டில் மட்டுமே, ரூ.14,504 கோடி மதிப்புக்கு கேரளாவில் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. தமிழகம் போல கேரளாவிலும் மதுக்கடைகள்தான் அரசு வருமானத்துக்கு மூல ஆதாரம். அதுபோக, கலால் வரி மற்றும் மதுபான விற்பனை வரி (sales tax) மூலம், கேரள அரசுக்கு கடந்த ஆண்டு ரூ.11,000 கோடி வரி கிடைத்தது.
நிதிநெருக்கடி பயம்!
வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய பொருளாதாரச் சரிவில் இருந்தே கேரளா இன்னும் மீளவில்லை. இந்த நிலையில், கொரோனா வைரஸும் தன் பங்குக்கு கேரளாவை மிரட்டி வருகிறது. கொரோனா பாதிப்பால்,மக்களுக்கு ரூ. 20,000 மதிப்பிலான பல இலவச திட்டங்களை கேரள அரசு அறிவித்துள்ளது. அதனால், மேற்கொண்டு நிதிப் பற்றாக்குறை ஏற்படாமலிருக்க மதுபான விற்பனையில் கேரள அரசு கூடுதலாகக் கவனம் செலுத்தியது. ஊரடங்கு காரணமாகக் கடைகள் அடைக்கப்பட்டதால், ஆன்லைன் மூலமும் மது விற்பனை செய்வது குறித்தும் ஆலோசித்தது. தற்போது, மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், அரசு அறிவித்த மற்ற திட்டங்களை நிறைவேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Also Read: ‘எதிர்காலத்தின் மீது நம்பிக்கை பிறக்கிறது!’ -கொரோனாவிலிருந்து மீண்ட 101 வயது இத்தாலிக்காரர்
தற்போது கேரளாவில் மதுவுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அந்த மாநிலத்தின் மதுப் பிரியர்கள் மது கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான மது பிரியர்கள் இரவில் உறக்கம் இல்லாமல் தவிப்பதாகச் சொல்லப்படுகிறது. திருச்சூரில் சனோஜ் என்ற இளைஞர் தற்கொலையே செய்துகொண்டுள்ளார். மது விற்பனை மீது மொத்தமாகத் தடை விதிக்கப்பட்டதால் கள்ளச்சாராயம் பக்கம் மதுப் பிரியர்கள் திரும்பலாம். கள்ளச்சாராயம் காரணமாக ஏற்கெனவே அந்த மாநிலத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, இதைத் தடுக்க கேரள அரசு தயாராக இருப்பது முக்கியம்.
மதுவுக்கு அடிமையானவர்களை மது மீட்பு மையத்தில் சேர்த்து பார்த்துக் கொள்வதும் அவசியம். மது கிடைக்காத காரணத்தினால், மதுப் பிரியர்கள் அந்த கோபத்தை வீட்டில் உள்ளவர்கள் மீது காட்டும் வாய்ப்பும் அதிகம். எனவே, குடும்ப வன்முறை பெருகலாம். இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அந்த மாநில அரசுக்கு உள்ளது. இது போன்ற சமூக விளைவுகளை நிச்சயம் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

பிரதமர் மோடி ஊரடங்கு அறிவிப்பதற்கு முன், மதுக்கடைகளை விதிமுறைகளுடன் திறக்கவும் கடைகள் முன் கூட்டம் கூடுவதைக் கட்டுப்படுத்த, சமூக விலகலை அறிவுறுத்தும் வகையிலும் கியூவில் நின்று மது வாங்க மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. “இரவு 9 மணி வரை இயங்கிவந்த மதுக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டுப்பாடுகளுடன் இயங்கும்” என்றும் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். ஆனால்,பிரதமரே நாடு தழுவிய ஊரடங்கு அறிவித்திருந்ததால், வேறு வழியில்லாமல் மதுக்கடைகளை மூட வேண்டிய சூழலுக்கு பினராயி விஜயன் தள்ளப்பட்டார்.