‘கொரோனா வைரஸ்’ எதிரான போராட்டத்திற்கு சரியான நேரத்தில் கைகொடுத்து உதவியுள்ளார் இந்திய பெண் மினல் போஸ்லே. யார் இந்த மினல் போஸ்லே அப்படி என்ன செய்துவிட்டார் என்கிறீர்களா….

கொரோனா பாதிப்பைக் கண்டுபிடிக்கும் கருவிகள் இதுவரை ஜெர்மனி நாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. அந்தக் கருவியைக் கண்டுபிடிக்கும் பணியில் புனே நகரில் இயங்கிவரும் ’மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ்’ என்ற ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டுக்கான நிறுவனம் ஈடுபட்டது. இந்நிறுவனத்தின் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் துறையின் தலைவர் தான் இந்த மினல் போஸ்லே. இவர் தன் குழந்தையை கருவில் சுமந்துக்கொண்டு கொரோனா வைரஸ் கண்டறியும் பரிசோதனை கருவிகளை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

கொரோனா

பிப்ரவரி மாதம் இவரிடம் இந்த பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் ஒரு வைரலாஜிஸ்ட் என்பதால் இவரிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. வைரஸ்கள் பற்றியும் அதன் செயல்பாடுகளை கண்காணிப்பது அதனால் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்வது போன்றவை வைரலாஜிஸ்ட்களின் முக்கியப்பணியாகும். பிப்ரவரி மாதத்தில் இருந்து இவரது தலைமையிலான குழு கொரோனாவுக்கான பரிசோதனை கருவிகளை கண்டறியும் பணிகளை மேற்கொண்டுள்ளது.

மினல் தகாவே போஸ்லே இதற்கான ஆய்வுப் பணியை முன்னின்று மேற்கொண்டார். அவரது தலைமையிலான குழுவினர், ஆறு வார காலத்தில் கொரோனா பரிசோதனைக் கருவியை செய்து முடித்துள்ளனர்.

பிரசவத்துக்கு முதல்நாள் வரை இவர் ஆய்வு பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இன்னும் சொல்லப்போனால் தன் மகள் பிறப்பதற்கு சில மணி நேரங்கள் வரை ஆய்வுபணியில் ஈடுபட்டு கொரோனா கண்டறியும் சாதனத்தை வடிவமைத்து மார்ச் -18 தேதி மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார். கருவி கண்டுபிடிக்கப்பட்டு அரசு நிறுவனங்களின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மறு நாளிலேயே அழகான பெண் குழந்தையும் இவர் பெற்றெடுத்துள்ளார்.

கொரோனா பரிசோதனை கருவி

இவர் கண்டறிந்த இந்தக் கருவிக்கு மத்திய மருந்து பொருள்களுக்கான தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி, உணவு மற்றும் மருந்துப் பொருள்களுக்கான அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் ஒப்புதல் வழங்கின. அதனால் இந்தக் கருவி முழுவீச்சில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு கருவி என்ற பெருமையும், இதனை தயாரிக்கவும் விற்கவும் ஒப்புதல் பெற்ற முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையும் மைலேப் டிஸ்கவரி நிறுவனம் பெற்றுள்ளது. கொரோனா சோதனை கருவியை இதுவரை இந்தியா ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்தது வந்தது. தோராயமாக ஒரு கருவியின் விலை 4,500 ரூபாய் எனக் கூறப்படுகிறது. இவரது முயற்சியால் இப்போது இந்த கருவி இந்தியாவிலே ரூ.1900-க்கு கிடைக்கிறது.

Also Read: `தனிமையில் இருப்பது எளிதல்ல… ஆனால்!’ – கொரோனாவில் இருந்து மீண்ட ட்ரூடோ மனைவி வேண்டுகோள்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்த நிலையில் இவரது கண்டுபிடிப்பின் மூலம் பரிசோதனை கருவிகள் தடையின்றி கிடைக்கும் என மருத்துவர்கள் நம்புகின்றனர். நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோதும் இந்த பரிசோதனைக் கருவியைக் கண்டுபிடித்திருப்பதால் அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. இவரது முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா, இயக்குநர் சோனி ரஸ்தான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இவர் தான் ரியல் ஷீரோ எனப் பதிவிட்டுள்ளனர்.

கொரோனா

இது குறித்து மினல் தகாவே போஸ்லே கூறுகையில், ”எனது உடல் நலனைவிடவும் நாட்டின் நலனே முக்கியம் என்பதால் கொரோனா வைரஸ் பரவல் குறித்து அறிந்ததும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டோம். சுமார் 6 வாரத்தில் நானும் எனது குழுவினரும் சேர்ந்து கொரோனோ நோய் கண்டுபிடிக்கும் பரிசோதனைக் கருவியை உருவாக்கினோம்.

நாங்கள் தயாரித்துள்ள கருவிகளின் விலை குறைவு என்பதை விடவும் வேகமாகப் பரிசோதனைகளை மேற்கொண்டு முடிவை அறிவித்துவிட முடியும். வெளிநாட்டுக் கருவி மூலம் முடிவுகளை அறிவிக்க 6 அல்லது 7 மணி நேரம் எடுக்கும். ஆனால் உள்நாட்டுத் தயாரிப்பான எங்கள் கருவியின் மூலம் இரண்டரை மணி நேரத்திலேயே முடிவுகளை அறிவித்து விட முடியும்.

இந்தக் கருவியின் மூலம் துல்லியமான முடிவுகளைப் பெற முடியும். எடுத்துச் செல்வது, கையாளுவது ஆகியவையும் சுலபமாக இருக்கும். மத்திய அரசு அளித்த ஒத்துழைப்பின் காரணமாகவே எங்களால் இந்தக் கருவியைக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

மினாள் தகாவே போஸ்லே

எங்களால் தினமும் 15,000 முதல் 25,000 கருவிகளைச் செய்து கொடுக்க முடியும். ஒரு வாரத்துக்கு ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் கருவிகளை உற்பத்தி செய்யும் வகையில் வேகமாகப் பணியாற்றுகிறோம். அதனால் இனியும் கொரோனா தொற்று குறித்த பரிசோதனைக்காக வெளியிடங்களுக்கு ரத்த மாதிரியை அனுப்பி வைத்துவிட்டுக் காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இது ஒரு அவசரநிலை. எனவே இதனை நான் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டேன். நான் என் தேசத்துக்கான சேவையாக இதனை செய்தேன்” என்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.