நாகர்கோவிலை அடுத்துள்ள ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா ஐசோலேசன் வார்டில் அனுமதிக்கப்பட்ட ஏழுபேர் இதுவரை மரணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் இரண்டு வயது குழந்தை உள்பட மூன்றுபேர் மரணம் அடைந்தனர். அவர்கள் மரணத்துக்கு கொரோனா காரணமல்ல, வேறு நோய்கள் காரணம் என சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஏழுபேர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் நாகர்கோவில் எம்.எல்.ஏ-வுமான சுரேஷ்ராஜன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ்ராஜன் கூறுகையில், “கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரானா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேர் இறந்துள்ளனர். ஆனால் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் இந்த ஏழு பேரும் பல்வேறு நோய்களால் இறந்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே இவர்களது இறப்பில் சந்தேகம் உள்ளது. இது மக்களுக்கு அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி கொரோனா வார்டு

மருத்துவமனை நிர்வாகத்தின் அறிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை. அரசு நிர்வாகம் உண்மை நிலவரத்தை வெளியிட டாக்டர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதாக தெரிகிறது. ஏழுபேர் இறந்ததற்கு வேறு காரணங்களை சொல்லி சமாளியுங்கள் என அரசு மருத்துவர்களிடம் நிர்பந்தப்படுத்துவதாக கருதுகிறோம். சாதரணமாக நோய் பாதித்தவர்களை கொரானா வார்டில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கும் அந்த தொற்று ஏற்பட்டு பாதிப்பு கூடுதலாகும். ஏழுபேரும் கொரோனா தொற்று காரணமாக இறக்கவில்லை என்றால் எதற்காக கொரோனா வார்டில் அனுமதித்தீர்கள். இதில்தான் சந்தேகமே எழுகிறது.

நோயாளிகளின் ரத்தம், சளி மாதிரிகளை பரிசோதிக்க மருத்துவக் கல்லூரியில் போதிய வசதி இல்லை. வெளியிடங்களுக்கு அனுப்பி அதன் முடிவுகள் வர நான்கு நாட்கள் வரை ஆகிறது. இவ்வளவு காலதாமதம் ஏற்படுவதால் பாதிப்புகள் அதிகரிக்கும். எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான ஆய்வு கூடங்கள் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். இந்த நோயினால் மக்கள் யாரும் இறக்கக்கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம்.

தி.மு.க எம்.எல்.ஏ சுரேஷ் ராஜன்

கொரோனா காரணமாக ஏற்கனவே இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. கொரோனா நோயாளிகளைப் போன்று மற்ற நோயாளிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் மற்ற நோயாளிகள் மருத்துவமனைக்குச் சென்றால் அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு பிறகு வாருங்கள், அதுவரை கொரோனா நோய்க்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்களே திருப்பி அனுப்புவது வருத்தத்துக்குரியது. இதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.