”கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறினால் மிகப் பெரும் ஆபத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும். அதனால் அனைவரும் வீட்டிற்குள் தனித்திருக்க வேண்டும். யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். தமிழக அரசின் உத்தரவுப்படி உங்களுக்குத் தேவையான மளிகை பொருட்கள் ஆடர் செய்தால் வீட்டிற்குக் கொண்டு வந்து ஹோம் டெலிவரி செய்வார்கள்.

மளிகை கடைகள்

டெலிவரி செய்யும் மளிகை ஸ்டோர்ஸ் ஹோம் டெலிவரி கட்டணமாக அதிகபட்சம் 20 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது. மீறி வசூலித்தால் அந்த மளிகை கடையின் உரிமையை ரத்து செய்வோம்” எனச் சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்ததோடு சேலம் மாவட்டத்தில் உள்ள மளிகை ஸ்டோர்ஸ் பெயர் மற்றும் தொலைப்பேசி எண்களோடு கூடிய பட்டியலை வெளியிட்டும் இருந்தது. ஆனால் சேலம் 5 ரோட்டில் உள்ள டி மார்ட் டிப்பார்மென்ட் ஸ்டோர் ஹோம் டெலிவரி செய்வதற்கு 40 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Also Read: ரீ டெயில் துறையின் `மிஸ்டர் வொயிட்’ – இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் ராதாகிஷன் தமனி யார்?

டிமார்ட் ஹோம் டெலிவரி கட்டணமாக 40 ரூபாய் வசூலித்ததாகக் கூறும் வைத்தியநாதன், ”நான் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறேன். கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் உத்தரவைப் பின்பற்றி சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள சித்தனூரில் என் வீட்டிற்குள் இருக்கிறேன்.

வைத்தியநாதன்

வீட்டிற்குக் தேவையான மளிகை பொருட்கள் வீட்டிலிருந்தே போனில் ஆடர் செய்தால் ஹோம் டெலிவரி செய்வார்கள் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் மளிகை கடைகளின் பெயர்களும், அவர்களின் தொடர்பு எண்களும் கூடிய ஒரு பட்டியலை வெளியிட்டு இருந்தார். அந்த பட்டியலில் இருந்த டி மார்ட் டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு போன் செய்து உளுத்தம்பருப்பு, துவரம் பருப்பு, ரவை போன்ற பொருட்கள் ஆர்டர் கொடுத்தேன்.

எங்க வீட்டிற்கும், டி மார்ட் கடைக்கும் 4 கி.மீட்டர் தூரம் உள்ளது. இரண்டு மணி நேரம் கழித்து பொருட்களையும் அதற்கான பில்லையும் கொண்டு வந்து கொடுத்தார்கள். பில்லில் 1911 ரூபாய் இருந்தது. பில்லுக்கான தொகையைக் கொடுத்து விட்டு டெலிவரி சார்ஜ் எவ்வளவு என்று கேட்டேன். 40 ரூபாய் என்றார்கள். ஆட்சித்தலைவர் உத்தரவுப்படி ஹோம் டெலிவரிக்கு அதிகபட்சமாக 20 ரூபாய் தான் வசூலிக்க வேண்டுமென்றேன்.

மளிகை பில்

அதையடுத்து டெலிவரி செய்ய வந்த இளைஞர் டிமார்ட் ஸ்டோருக்கு போன் செய்து கேட்டார். ”இல்லை சார் 40 ரூபாய் தான் வசூலிக்கச் சொல்கிறார்கள்” என்றார். அதையடுத்து நான் 40 ரூபாய் டெலிவரி சார்ஜ் கொடுத்தேன். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் டி மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனமே அரசுக்கு ஒத்துழைக்காமல் செயல்படுவது தவறானது. டெலிவரி சார்ஜ் 40 வசூலித்தால் எப்படி நடுத்தர மக்களால் கொடுக்க முடியும். நான் 40 ரூபாய் கொடுத்ததற்கான ஆடியோ ஆதாரம் இருக்கிறது” என்றார்.

இதுபற்றி சேலம் ஐந்து ரோட்டில் உள்ள டி மார்ட் டிபார்மென்ட் ஸ்டோர் பொறுப்பாளர் நாராயணனிடம் கேட்டதற்கு, ”நாங்கள் டோர் டெலிவரி இலவசமாகத் தான் செய்து வருகிறோம். எங்க ஆட்கள் டெலிவரி செய்ய சார்ஜ் கேட்டிருப்பதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும் விசாரித்துப் பார்த்து உண்மையாக இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.

இராமன்

இதுபற்றி சேலம் கலெக்டர் இராமனிடம் கேட்டதற்கு, ”இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் பணம் சம்பாதிப்பதை பின்னுக்குத் தள்ளி மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். சாதாரண ஒரு சின்ன கடையாக இருந்தாலும் பரவாயில்லை. ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனம் இப்படிச் செயல்படுவது தவறானது. டி மார்ட் டிப்பார்மென்ட் ஸ்டோரை விசாரித்துப் பார்த்து தவறு இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.