கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது வரை தமிழ்நாட்டில் 50 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற ரிசல்ட் வந்திருக்கிறது. கொரோனா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் தகவல்களை மட்டுமே அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென சொல்லப்பட்டிருந்தது. அதைப்போலவே, அமைச்சர் விஜயபாஸ்கரும் ஆக்டிவ்வாக அவருடைய டிவிட்டர் பக்கத்தில் கொரோனா தொடர்பான அனைத்துத் தகவல்களைத் தகவல்களையும் பதிவிட்டு வருகிறார். ஆனால், அமைச்சரின் இன்றைய ட்விட்டைப் பார்க்கையில் ‘அவர் சொல்லும் எண்ணிக்கை சரியானது தானா’ என்கின்ற சந்தேகம் பலமாக எழுந்திருக்கிறது.

இன்றைய ஈரோடு கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு

ஈரோட்டைப் பொறுத்தவரை நேற்றுவரை 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்றைய கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பும் அதை உறுதிப்படுத்தியது. ஆனால், இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஈரோடு கலெக்டர் கதிரவன் ‘ஈரோட்டில் நேற்றுவரை 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது’ என்றார். நேற்றுவரை 5 என்றிருந்த ரிசல்ட், இடையே எந்த அறிவிப்புமில்லாமல் எப்போது 6 ஆக மாறியது என பத்திரிகையாளர்கள் குழம்பிப் போயினர். தொடர்ந்து பேசிய கலெக்டர், ‘இன்று 4 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்திருக்கிறது. ஆக, இன்றைய நிலவரப்படி ஈரோட்டில் மொத்தம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது’ எனக் கூறினார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்

ஆனால், இன்று மாலை 5.56 மணிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய ட்விட்டில், ‘தாய்லாந்து நாட்டவரின் தொடர்பில் இருந்து ஈரோட்டில் புதிதாக 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்திருக்கிறது. அவர்களுக்கு பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது’ என்றிருந்தார். அமைச்சர் கணக்குப்படி பார்த்தால் நேற்றைய 6 பாசிட்டிவ் கேஸ்களோடு, புதிய 8 கேஸையும் சேர்த்தால் மொத்தம் 14 பேர். ஆனால், கலெக்டர் அலுவலகமோ ஈரோட்டில் 10 பேருக்கு தான் கொரோனா உறுதியாகியிருக்கிறது என்கிறது.

கொரோனா வைரஸ்

உண்மை என்னவென்று தெரிந்துகொள்ள ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் சவுண்டம்மாள் அவர்களிடம் பேசினோம். “நேற்றுவரை 6 பேர். இன்றைக்கு 4 பேர் ஆக மொத்தம் இப்போது வரை ஈரோட்டில் 10 பேருக்கு தான் கொரோனா பாசிட்டிவ் என்ற ரிசல்ட் வந்திருக்கிறது. இந்த 10 பேரும் பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பத்திரிகை செய்தியில் தெளிவாக சொல்லியிருக்கோமே” என்றவரிடம் அமைச்சர் விஜயபாஸ்கரின் ட்விட்டில் ‘ஈரோட்டில் இன்று 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருக்கிறது’ எனக் குறிப்பிட்டிருந்ததை வைத்து கேள்வியெழுப்பினோம்.

பெருந்துறை ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

அதற்கு பதிலளித்தவர், “ஈரோட்டில் வேலை பார்த்த பெண் மருத்துவர், அவருடைய 10 மாதக் குழந்தை, அவரின் அம்மா மற்றும் வேலைக்காரப் பெண் என நான்கு பேருக்கு கோவையில் கொரோனா ரிசல்ட் பாசிட்டிவ் என வந்திருக்கிறது. அவர்கள் நால்வரும் கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோட்டிலிருந்து பணிமாறுதலால் சென்ற அவர்களை ஈரோட்டுக் கணக்கில் சேர்த்திருக்கிறார்களோ என்னவோ!… எனக்கு விபரம் சரியாகத் தெரியவில்லை. விசாரித்துச் சொல்கிறேன்” என்றார். கொரோனா குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் எக்கச்சக்கமாக பரப்பப்படுகின்றன. அப்படியிருக்க, சரியான தகவலைச் சொல்ல வேண்டிய அமைச்சர் மற்றும் கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்புகளிலேயே எக்கச்சக்கமான குளறுபடிகள் இருக்கின்றன. இதனையெல்லாம் பார்க்கையில் செய்தியை பதிவிட்டதில் தவறு நேர்ந்ததா அல்லது எண்ணிக்கையை வெளியே சொல்வதை மறைக்கப் பார்க்கிறார்களா என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது. இதனை உடைக்கவேண்டியது அரசின் கையில் தான் இருக்கிறது…!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.